ஸ்டெர்லைட் ஆலையை நிரந்திரமாக மூடக்கோரி தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் தெளிவில்லை என்றும் புதிய அரசாணை வெளியிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறும் வேதிக் கழிவுகளாலும், மாசடைந்த காற்றாலும் தங்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக சுற்றுவட்டார கிராம மக்கள் பல ஆண்டுகளாக குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், அந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி, தூத்துக்குடி சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர்ந்து போராடி வந்தனர்.
கடந்த மே 22ஆம் தேதி 100வது நாள் போராட்டமாக மாவட்ட ஆட்சியர் அலுவகத்தை முற்றுகையிட தூத்துக்குடி சுற்றுவட்டார கிராம மக்கள் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒன்றாக இணைந்து அமைதியாக பேரணியாக சென்றனர். அப்போது பேரணியாக சென்ற போது மக்களை தடுக்க போலீசார் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிறப்பித்தார். மேலும் உயிரிழந்தவர்களுக்கு ரூ.20 லட்சம் நிதியுதவியும் அறிவித்தார்.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான அரசாணையில் தெளிவில்லை என வைகோ உள்ளிட்டோர் மதுரைக் கிளை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான அரசாணையில் தெளிவில்லை. ஸ்டெர்லைட் ஆலை மூடல் தொடர்பாக கொள்கை ரீதியாக முடிவெடுத்து புதிய அரசாணை வெளியட வேண்டும். ரூ.20 லட்சம் வழங்கினாலும் மனித உயிருக்கு ஈடாகாது எனக்கூறி வழக்கு விசாரணையை வரும் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.