தூத்துக்குடி ஸ்டெர்லைட் நச்சாலைக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அனுமதி கொடுக்காததை எதிர்த்து ஆலை நிர்வாகம் மேல் முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் ஆலைக்கு அனுமதி வழங்கும்படி மனு தாக்கல் செய்திருந்தது. நீதிபதி சுதந்திரம் மற்றும் நிபுணர் ஜெயகுமார் எத்திராஜ் அமர்வில் இன்று விசாரணை தொடங்கியபோது வைகோ இந்த மேல்முறையீட்டு விசாரணையில் தன்னையும் ஒரு தரப்பாகச் சேர்த்துக் கொள்ளுமாறு மனுத் தாக்கல் செய்தார்.
ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் சார்பில் வழக்கறிஞர் இதற்கு ஆட்சேபணை தெரிவித்தார்.
நீதிபதி சுதந்திரம் “நீங்கள் எந்த வகையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கிறீர்கள்?” என்று வைகோவை பார்த்துக் கேட்டார். அதற்கு வைகோ , “நான் 1994-இல் இந்த ஆலை தூத்துக்குடியில் நிறுவப்பட்ட நாளிலிருந்து அதனை எதிர்த்து மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் தொடர்ந்து போராடி வருகிறேன். 1997-இன் தொடக்கத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி வழக்கு தொடுத்தேன். 2010 செப்டம்பர் 28-ஆம் நாள் அன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எலிபி தர்மராவ், நீதிபதி பால் வசந்தகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும்படி தீர்ப்பளித்தது. அதனை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெற்றது. 2013 ஏப்ரல் 2-ஆம் நாள் உச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயங்கலாம் என்று தீர்ப்பளித்தது. ஆனாலும், அந்தத் தீர்ப்பில் எதிர்காலத்தில் இந்த ஆலையால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுமாயின் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆலையை மூடுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று குறிப்பிட்டது. அத்துடன் இந்த ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து பொது மக்கள் நலனுக்காக நான் போராடி வருவதாகவும் பாராட்டியது. தற்போது ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்துக்கு சிப்காட் மூலம் நிலங்களைக் கையகப்படுத்துகிறது. அனைத்து கிராம மக்களும் விவசாயிகளும் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்குப் போராடி வருகின்றனர். எனவே, இந்த விசாரணையில் நானும் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்,” என்று கூறினார்.
உடனே நீதியரசர் சுதந்திரம் “விசாரணையில் வைகோ பங்கேற்கலாம்,” என்று அறிவித்தார்.
இன்றைக்கே தங்கள் வாதங்களை முன்வைக்க அனுமதிக்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் வழக்கறிஞர் கூறியதற்கு வைகோ எதிர்ப்பு தெரிவித்தார்.
ஆலை நிர்வாகம் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்துள்ள கோப்புகளின் பிரதிகள் தனக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், அதற்குப் பின்னரே ஸ்டெர்லைட் நிர்வாகம் தங்கள் வாதத்தை முன்வைக்க வேண்டும் என்று வைகோ கூறினார். ஒரு கட்டத்தில் ஸ்டெர்லைட் வழக்கறிஞர், வைகோவின் வாதங்கள் குறித்து ஒரு வார்த்தையைக் கூறி பலமாக சத்தமாகப் பேசினார். உடனே “வார்த்தை அளந்து பேசுக!” என்று வைகோ அவரைப் பார்த்துச் சொன்னார். சற்று நேரம் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
“ஸ்டெர்லைட் வழக்கறிஞரைப் பார்த்து நீங்கள் விரலை நீட்டி சொன்னீர்களா?” என்று நீதிபதி கேட்டார். அதற்கு வைகோ “ஆமாம்” என்றார்.
20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ள நிறுவனம் நிறுத்தப்பட்டுள்ளது என்று அத்தரப்பு வக்கீல் கூறியபோது, இலட்சக்கணக்கான மக்களின் உயிரோடு ஸ்டெர்லைட் விளையாடுகிறது என்று வைகோ கூறினார்.
நீதிபதி வைகோவைப் பார்த்து “வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசைத் தூக்கிலிருந்து காப்பாற்ற வழக்கறிஞர் என்.டி. வானமாமலையிடம் நீங்கள் வந்தபோது அவரோடு வக்கீலாக இருந்த நான் உங்களைச் சந்தித்தேன். உங்களை நன்றாக அறிவேன். பொறுமையாக இருங்கள்” என்றார்.
பின்னர், வழக்கு விசாரணை மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.