சமீபத்தில் நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி இருக்கிறது மத்தியில் ஆளும் பாஜக அரசு. இன்று காலை அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து, சட்டமாக நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.
இந்த சட்டத்திருத்தம் இஸ்லாமியர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரானது எனக்கூறி எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றன. வடகிழக்கு மாநிலங்களில் குறிப்பாக அஸ்ஸாம், திரிபுராவில் பொதுமக்கள் வீதியில் இறங்கி போராடுகிறார்கள். துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டு, பதற்றமான சூழல் அங்கே நிலவிவருகிறது. தமிழகத்திலும் எதிர்கட்சியான தி.மு.க. போராட்டத்தை அறிவித்துள்ளது.
இந்நிலையில், இஸ்லாமியர்கள், இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான இந்த சட்டத் திருத்தத்தை உடனடியாக ரத்து செய்யக்கோரி சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து, கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட, பேராசியர்கள் அவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தியாவின் சட்டவிதிகளைப் பொறுத்தவரையில், வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் குடியுரிமை பெறுவது சாத்தியமற்றது. அவர்கள் உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற்றப் படுவார்கள் அல்லது தடுப்புக்காவல் முகாம்களில் அடைத்து வைக்கப்படுவார்கள். தற்போதைய சட்டத்திருத்தத்தின் மூலம், அவர்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை ஏற்பட்டுள்ளது.
1955ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய குடியுரிமைச் சட்டத்தின்படி, வெளிநாட்டில் இருந்து இந்தியாவில் குடியேறி 12 ஆண்டுகளுக்கும் மேலாக வசிப்பவர்களுக்கு குடியுரிமை வழங்க அனுமதிக்கிறது. தற்போது அதில் மேற்கொள்ளப் பட்டிருக்கும் சட்டத்திருத்தத்தின் மூலம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய, இந்து, சீக்கியர், பவுத்தர், சமணர், பார்சி இனத்தவர் மற்றும் கிறிஸ்தவர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு உரிய ஆவணங்கள் இல்லை எனினும், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கும் குடியுரிமை வழங்கமுடியும். அதுமட்டுமின்றி, கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதிக்கு முன் குடியேறியவர்களுக்கும் இந்திய குடியுரிமை வழங்கலாம்.
அண்டைநாடுகளில் இருந்து இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்களும் கணிசமான அளவில் இந்தியாவில் குடியேறி இருக்கும் நிலையில், அவர்களை சேர்க்காமல் கொண்டுவரப்படும் இந்த சட்டத்திருத்தத்தை எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. மதத்தின் பெயரால் யாரொருவரும் பாகுபாட்டுடன் நடத்தப்படக் கூடாது என்று இந்திய அரசியலமைப்புச் சட்டமே வழியுறுத்தும்போது, மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்கி, மதச்சார்பின்மை எனும் இந்தியாவின் அடித்தளத்தையே சிதைத்து, மத பாகுபாட்டிற்கு சட்ட அங்கீகாரம் தருகிறார்கள் என்றும் எதிர்கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர்.