எனக்கு ஆதரவாக ஒன்றரை லட்சம் பேர் குவிந்துள்ளனர், எல்லோரையும் கட்சியிலிருந்து நீக்குவார்களா? என மு.க.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை மெரினாவில் கலைஞர் நினைவிடம் நோக்கி ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் மு.க.அழகிரி தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. இதில் கருப்புச் சட்டை அணிந்தபடி மகன் தயா, மகள் கயல்விழியுடன் மு.க.அழகிரி பங்கேற்றார். திருவல்லிக்கேணி காவல் நிலையம் அருகே இருந்து புறப்பட்ட இந்த அமைதிப் பேரணி கலைஞர் நினைவிடத்தில் முடிவடைந்தது. இந்த அமைதிப் பேரணிக்காக கரூர், மதுரை, திருச்சி, உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து அழகிரியின் ஆதரவாளர்கள் திரண்டிருந்தனர். அமைதிப் பேரிணியின் நிறைவாக கலைஞர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மு.க.அழகிரி மரியாதை செலுத்தினார்.
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
இந்த அமைதிப் பேரணிக்கு எந்த நோக்கமும் கிடையாது. என்னுடைய தந்தை தலைவர் கலைஞரின் 30வது நினைவு நாளையொட்டி நடந்த அமைதிப் பேரணியில் கலந்து கொண்ட கலைஞரின் உண்மையான தொண்டர்களுக்கும், என்னுடைய விசுவாசிகளுக்கும், பொதுமக்களுக்கும், பேரணியில் கலந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய நன்றியை அவர்களது பாதங்களில் சமர்பிக்கிறேன்.
பேரணிக்கு ஒத்துழைத்த காவல்துறைக்கும், ஆதரவு தந்த தொலைக்காட்சிகளுக்கும், பத்திரிகைகளுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த பேரணிக்கு எந்தவித காரணமும் இல்லை. இது கலைஞருக்கு அஞ்சலி செலுத்தும் பேரணியே. எனக்கு ஆதரவாக ஒன்றரை லட்சம் பேர் வந்துள்ளனர். அவர்களை எல்லாம் கட்சியில் இருந்து நீக்குவார்களா? என்று அவர் கூறினார்.