![Arvind Kejriwal says I will go to Ayodhya Ram Temple with my family after inaugration](http://image.nakkheeran.in/cdn/farfuture/Shj_4tVO1vd8pKkInnaS6rPuUXVg5lNUuSZCBCERu-Q/1705556328/sites/default/files/inline-images/arvind-kejriwaal-ni_0.jpg)
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் நடைபெற்று வருகிறது. இது தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்தக் கோயில் இம்மாதம் 22ம் தேதி திறக்கப்படவிருக்கிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், கோயில் அறக்கட்டளை சார்பில் சமீபத்தில் மொத்தம் 7 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல், ராமர் கோயில் அமைவதற்கு ஆதரவாக இருந்த பத்திரிகையாளர்களுக்கும், ராமர் கோயிலுக்காகப் பாடுபட்ட 50 கரசேவகர்களின் குடும்பத்தினருக்கும், குறைந்தபட்சம் 50 நாடுகளில் இருந்து தலா ஒரு பிரதிநிதிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விழாவில் பங்கேற்க இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 7,000க்கும் மேற்பட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அதே சமயம், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுனா கார்கே ஆகியோர் ராமர் கோவில் குடமுழுக்கு விழாவிற்கான அழைப்பை நிராகரித்திருந்தனர். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சமாஜ்வாதி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் ராமர் கோவில் குடமுழுக்கு விழாவுக்கான அழைப்பை புறக்கணித்துள்ளனர்.
இந்த நிலையில், ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வது குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “பாதுகாப்பு காரணங்களுக்காக ஒருவர் மட்டுமே விழாவுக்கு அனுமதிக்கப்படுவதாக கடிதம் எனக்கு கிடைத்தது. தனிப்பட்ட முறையில் அழைப்பிதழ் தந்து வரவேற்க ஒரு குழுவினர் வருவார்கள் என்று கூறினார்கள். ஆனால், இதுவரை அப்படி யாரும் வரவில்லை.
நான் எனது மனைவி, குழந்தைகளுடன் அயோத்தி ராமரை தரிசிக்க விரும்புகிறேன். எனது பெற்றோர் அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்ல ஆர்வமாக இருக்கிறார்கள். எனவே, வரும் ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோவில் திறப்பு விழா முடிந்த பிறகு எனது குடும்பத்துடன் ராமர் கோவிலுக்கு சென்று வழிபடுவேன்” என்று கூறினார்.