தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் தேதியை நேற்று (9ம் தேதி) தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பிருந்தே இந்த ஐந்து மாநிலங்களிலுமே அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். சில இடங்களில் தேர்தல் தேதி அறிவிப்புக்கும் முன்பே தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் அடிப்படையில், மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான் என 5 மாநிலங்களிலும் தேர்தல் பிரச்சாரத்திற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், சட்டீஸ்கர் மாநிலம், ஜகதால்பூரில் பா.ஜ.க சார்பில் நேற்று (19-10-23) நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில், அமித்ஷா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “சட்டீஸ்கர் மாநிலத்தை காங்கிரஸ் தனது ஏ.டி.எம் இயந்திரம் போல் மாற்றிவிட்டது. காங்கிரஸ் கட்சி பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறது. ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க.வின் 9 ஆண்டு கால ஆட்சியில் நக்சலைட் வன்முறைகள் 52 சதவீதமாக குறைந்துள்ளது. நக்சலைட் வன்முறையால் உயிர் பலி எண்ணிக்கை 70 சதவீதமாக குறைந்துள்ளது. இப்போதும் கூட சட்டீஸ்கரில் சில பகுதிகளில் நக்சல் ஆதிக்கம் உள்ளது. சட்டீஸ்கரில் பா.ஜ.க ஆட்சி அமைந்தால் நக்சல் அச்சுறுத்தலில் இருந்து மாநிலம் முழுவதும் விடுவிக்கப்படும்.
சட்டீஸ்கர் மக்களுக்கு 2 வாய்ப்புகள் தான் இருக்கின்றன. ஒன்று, நக்சல் பயங்கரவாதத்தை ஊக்குவித்த காங்கிரஸ், மற்றொன்று நக்சல் பயங்கரவாதத்தை ஒழித்த பா.ஜ.க. சட்டீஸ்கரில் பா.ஜ.க வெற்றி பெற்றால் சட்டீஸ்கர் மக்கள் மூன்று நாள் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவார்கள். ஒன்று, பண்டிகை நாளில் கொண்டாடுவார்கள். டிசம்பர் 3 ஆம் தேதி பா.ஜ.க ஆட்சிக்கு வரும்போது இரண்டாவது தடவை கொண்டாடுவார்கள். அடுத்து, ஜனவரி மாதம் ராமர் கோவிலில் கட்டுமான பணிகள் முடிவடையும் போது 3வது தடவையாக கொண்டாடுவார்கள்” என்று கூறினார்.