தமிழக காவல் துறையின் உயரதிகாரிகளை அடிக்கடி இடமாற்றம் செய்து வருகிறது எடப்பாடி அரசு. அந்த வகையில் இன்று (12.08.2020) ஐ.பி.எஸ். அதிகாரிகள் 9 பேரை இடமாற்றம் செய்து உத்தரவிட்டிருக்கிறார் தமிழக உள்துறை செயலாளர் பிரபாகர் ஐ.ஏ.எஸ்.!
இந்த இடமாற்றத்தில், சாத்தான்குளம் இரட்டை மரணம் தொடர்பான சம்பவத்தில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த அருண் பாலகோபாலன் உள்ளிட்ட 9 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் தூத்துக்குடி எஸ்.பி. அருண் பாலகோபாலன், சென்னை சைபர் பிரிவு எஸ்.பி.-2 ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை சைபர் பிரிவு எஸ்.பி.-2 ஆக பதவி வகித்த ஓம் பிரகாஷ் மீனா, சென்னை நிர்வாக ஏ.ஐ.ஜியாகவும், சென்னை நிர்வாக ஏ.ஐ.ஜி. சிபிசக்ரவத்தி, சி.பி.சி.ஐ.டி. சைபர் செல் எஸ்.பியாகவும், சி.பி.சி.ஐ.டி. சைபர் செல் எஸ்.பி. ஜெயலட்சுமி, தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் எஸ்.பி.யாகவும், தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் எஸ்.பி.யாக உள்ள ஜெயச்சந்திரன், தமிழ்நாடு கமாண்டோ படைப்பிரிவு எஸ்.பி.யாகவும், தமிழ்நாடு கமாண்டோ படைப்பிரிவு எஸ்.பி. யாக இருந்த சி.ஷியாமலா தேவி, சென்னை நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு சிறப்புப் பிரிவு எஸ்.பி.யாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும், சென்னை நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு சிறப்புப் பிரிவு எஸ்.பி.யாக இருந்த கண்ணம்மாள், சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர்-2 ஆகவும், சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர்-2 ஆக இருந்த தீபா சத்யன், அம்பத்தூர் துணை ஆணையராகவும், அம்பத்தூர் துணை ஆணையர் நிஷா, சென்னை சைபர் பிரிவு எஸ்.பி.-2 ஆகவும் மாற்றப்பட்டுள்ளனர்.