Skip to main content

கனவை துரத்திய இளம் மனதை விடாமல் துரத்திய மரணம்! - மனதை உறையவைக்கும் ஓர் உண்மைச் சம்பவம்!

Published on 12/06/2021 | Edited on 13/06/2021

 

a young man passed away with dreams

 

இது கரோனா காலம். மரணம் மலிவாகிவிட்டது. தினசரி ஏதோ ஒரு மரணச் செய்தி தரும் அயர்ச்சியுடன் உறங்கச் செல்கிறோம். அதிகாலை அலாரம் கூட நமக்குள் ஒரு விதப் பதட்டத்தை உண்டாக்குகிறது. நேற்று நலமோடு மருத்துவமனை சென்றவர் இன்று மரணக்குழியில் கிடக்கிறார். முந்தாநாள் சிரித்து விளையாடிய நண்பன் இன்று ஆக்சிஜன் சிலிண்டருடன் செல்ஃபி எடுத்து I'm Safe என ஸ்டேட்டஸ் தட்டுகிறான். அவனுக்கு Take Care Machi என ரிப்ளை செய்துவிட்டு வேக வேகமாக கரோனா பரிசோதனை செய்துகொள்ள ஓட வேண்டியுள்ளது. கரோனா இயல்பு வாழ்க்கையைக் கசக்கிப் போட்டுவிட்டது. இப்படியொரு கொள்ளை நோயில் யாரும் மாண்டால்கூட மனதை தேற்றிக்கொள்ள முயற்சிக்கலாம். ஆனால், யாரோ ஒருவரின் அலட்சியத்தால் சிறகு ஒடிக்கப்படும் சின்னச்சின்ன வண்ணத்துப் பூச்சிகளின் மரணங்களை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?


பத்து ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி நீச்சல் குளத்தில் உயிர்விட்ட சிறுவன் ரஞ்சன் என்ன தவறு செய்தான்? பேருந்து ஓட்டையில்  விழுந்த பள்ளிச் சிறுமி ஸ்ருதி என்ன தவறு செய்தாள்? ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த பிஞ்சுக் குழந்தை சுஜீத் என்ன தவறு செய்தான்? அவர்களின் மரணம் விட்டுச் சென்ற அலட்சிய மனிதர்களை அத்துடன் மறந்துவிடுகிறோம். சிலநிமிட கண்ணீர்த் துளிகளுடன் எல்லாவற்றையும் உதிர்த்துவிடுகிறோம். விளைவு, சுஜீத்துகளும் ரஞ்சன்களும் ஸ்ருதிகளும் மரித்துக்கொண்டே இருக்கிறார்கள்.  இப்போது அந்த வரிசையில் வைரவன். யாரோ சிலரின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்டு கல்லறையில் உறங்கிக்கொண்டிருக்கும் பலநூறு கனவுகளின் மாதிரிதான் இந்த வைரவன். பெயர் தெரியாத ஒருவரின் அலட்சியம், பெரும் அடையாளத்துடன் உருவாகி வந்த ஒரு இளம் கனவை எரித்துச் சாம்பலாக்கியிருக்கிறது. அந்தக் கனவைச் சொல்லப் போகிறேன். அது உங்கள் தூக்கத்தைச் சிதைக்கலாம் அல்லது உங்கள் உள்ளுணர்வைக் கேள்வியால் துளைக்கலாம். மெல்லிய மனதுக்காரர்கள் விலகியிருங்கள்.

 

பூமிக்கு வரவிருக்கும் புதுவரவை சுமக்கும் தாய் ஒருவர், தன் பிள்ளை கணிதத்தில் பெரும் அறிவாளியாக வரவேண்டும் என ஆசைப்பட்டார். அதனால் கருவைச் சுமந்துகொண்டு கணக்குப் பாடம் படித்துக் கொண்டிருந்தார். தினம் தினம் படித்தார். குழந்தை அதை உள்வாங்கும் என அவர் நம்பினார். அதன் மூலம் குழந்தைக்கு கணித ஆர்வம் ஊற்றெடுக்கும் என எதிர்பார்த்தார். ஆண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலம். தாய், தந்தைக்குப் பெரு மகிழ்ச்சி. அப்பா MBA பட்டதாரி. அம்மா B Pharm பட்டதாரி. படித்த பெற்றோர். அதனால் குழந்தையைக் கூடுதல் படிப்பாற்றலுடன் வளர்க்க விரும்பினர். வைரவன் எனப் பெயரிட்டனர். 

 

CHILD


பிறந்த 2 ஆண்டுகளில் பிஞ்சுக் கையால் அந்தக் குழந்தை பென்சிலை வைத்துக் கிறுக்கத் தொடங்கிவிட்டான். அம்மாவுக்குப் பெரும் சந்தோசம். பிஞ்சுக் கைகளில் முத்தம் கொடுத்து வாரி அணைத்துக்கொண்டார். வளர வளர பள்ளியில் நடைபெற்ற அனைத்துப் போட்டியிலும் அவன் இருந்தான். வென்றான். ஹிந்தி, அபாகஸ், சமஸ்கிருதம், பேச்சுப்போட்டி, திருக்குறள் போட்டி, அறிவியல் கண்காட்சி என அனைத்திலும் தடம் பதித்தான். சான்றிதழ்களையும் கோப்பைகளையும் வாங்கிக் குவித்தான். அதுவேணும் இதுவேணும் என எதையுமே பெற்றோரிடம் கேட்டதில்லை. 'கிரிகெட் மேட்ச் பாக்க அழச்சிட்டுப் போங்க அப்பா' என்பது மட்டும்தான் அவன் கேட்ட ஒன்று. அதற்கான வாய்ப்பு அமையவேயில்லை. 


வீட்டில் குடும்பத்தோடு கிரிக்கெட் விளையாடுவான். தெரியாமல் கூட அம்மாவ அவுட் ஆக்க மாட்டான். அம்மான்னா அவ்ளோ புடிக்கும். செஸ்ல அசுரன். மாவட்ட அளவுல வின்னர். பரிட்சை நேரத்துல கூடப்படிக்கிற பசங்களுக்கு சொல்லிக்கொடுத்துட்டு படிப்பான். பசங்க அவனுக்கு வச்ச பேரு 'வாட்டர்மார்க் வைரவன்', 'வைரஸ்' (நண்பன் சத்யராஜ்), 'அடுத்த ராமனுஜம்'. ஆனால், அவன் சிரித்துக்கொண்டே நகர்ந்திடுவான். மிக எளிமையான, அன்பான, திறமையுள்ள ஒரு மாணவனாக அவன் உருவாகிக் கொண்டிருந்தான். நாகப்பட்டினத்தில் உள்ள தனியார் பள்ளியில், பள்ளிப் படிப்பை முடித்தான். 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புத் தேர்வில் பள்ளியிலேயே முதல் மாணவனாகத் தேர்வானான். எதிர்காலத்தை மிகச் சரியாகத் திட்டமிட்டான். கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு IRS தேர்வெழுத வேண்டும் என முடிவு செய்து வைத்திருந்தான்.

 

பிறகு, கடப்பதற்குக் கடினமான CA தேர்வை முதல் முயற்சியிலேயே வென்று மிக இளம் வயதிலேயே பட்டயக் கணக்காளர் ஆனான். அதையொட்டி, வேலைக்கு அப்பா அம்மாவுக்குத் தெரிந்தவர்கள் பலரும் சிபாரிசு செய்ய முன்வந்தனர். ஆனால், அவன் அதையெல்லாம் அற்பமாக நினைத்து புறந்தள்ளினான். சுயமாக வேலைக்குச் செல்ல விரும்பினான். அவன் நினைத்தது போலவே நான்கு நிறுவனங்களில் இருந்து அவனுக்குப் பணியாணை வந்தது. அதில், அமெரிக்காவை தளமாகக் கொண்டு சென்னையில் இயங்கும் மிகப் பெரிய நிறுவனமான Grant Thornton Company-ல் பணியமர்ந்தான். ஒரு மாதத்திற்குப் பிறகு பெற்றோர்களை சந்திக்க சொந்த ஊர் திரும்பினான். அது, சட்டமன்றத் தேர்தல் நேரம். தனது முதல் வாக்கை (April 06 2021) செலுத்தி ஜனநாயகக் கடமையைப் பதிவு செய்தான். 

a young man passed away with dreams
                                                                           வைரவன் 


அப்போது, தனது முதல் மாதச் சம்பளத்தில் அப்பா, அம்மாவுக்கு வாங்கிவந்த புத்தாடைகளை சஸ்பென்ஸ் ஆகக் கொடுத்தான். ஒரு நிமிடம் அதிர்ந்த அப்பா ஆனந்தக் கண்ணீரை அந்தரங்கமாக துடைத்துக் கொண்டார். அம்மாவுக்கு அளவில்லாப் பெருமை. 3 நாள் விடுப்பு முடிந்தது. அப்போது அப்பாவுடன் ஒரு செல்ல 'டீல்' போட்டான். 'இனி அப்பா சம்பளம் எனக்கு; என் சம்பளம் அப்பாவுக்கு' எனச் சொல்லிக்கொண்டே நூடுல்ஸ் சாப்பிட்டான். பிறகு, பிஸ்கட், ஸ்நாக்ஸ் என அப்பா வாங்கிக் கொடுத்து பஸ் ஏற்றிவிட்டுள்ளார். நள்ளிரவு 1 மணிக்கு பேருந்து மோட்டலில் நிறுத்தப்பட்டது. பயணிகள் சிலர் டீ, காஃபி என வாங்கிக் கொண்டிருந்தனர். வைரவன் ரெஸ்ட் ரூம் சென்றுள்ளான். அதற்குள் பேருந்து சென்றுவிட்டது. 


கிடைத்த பஸ்ஸில் ஏறி மீண்டும் அந்த பஸ்சை பிடித்துள்ளான். அடுத்த பத்து நிமிடங்களில் அவன் வாழ்வுக்கு ஃபுல் ஸ்டாப் வைத்துவிட்டது ஒரு மீன்பாடி லாரி. கடலூருக்கு அருகில் போதையில் வண்டியை ஓட்டிவந்த லாரி ஓட்டுநர் அரசுப் பேருந்தின் மீது நேராக மோதியதில் வைரவன் உட்பட மூவர் பலியாகியுள்ளனர். வைரவனை தூக்கிப் பார்த்ததில் அவனது உடல், உடை, செல்ஃபோன், பேக் எதிலும் துளி சிராய்ப்போ காயமோ எதுவுமில்லை. ஆனால் உயிர்மட்டும் உருவப்பட்டு விட்டது. பெற்றோருக்குத் தகவல் சென்றது. நேற்றுவரை சிரித்துப் பேசிய பிள்ளையின் முகத்தைப் பெற்றோர்கள் பார்த்துப் பார்த்துக் குமுறினர். ஒரு லாரி ஓட்டுநரின் அலட்சியம் வைரவனின் பெருங்கனவில் பொத்தல் போட்டுவிட்டது. வைரவனின் உடலுடன் அவனது கனவுகளுக்கும் தீ வைக்கப்பட்டது. பென்சில் பிடித்துக் கிறுக்கிய பிஞ்சு விரலை இப்போது நெருப்பு தின்று கொண்டிருந்தது.

 

a young man passed away with dreams


அவனது அம்மா பெரிதாக யாரிடமும் பேசுவதில்லை. குடும்பமாக விளையாடிய கிரிக்கெட் மட்டையும் பாலும் கேட்பாரற்றுக் கிடந்தது. வீடு முழுவதும் சோகம் அப்பியிருந்தது. வைரவைனின் அம்மா கண்ணில் ஒரு கடிதம் பட்டது. அது வைரவன் கைப்பட எழுதியது. அதைப் படித்து முடிக்கும்போது அந்தக் கடிதம் கண்ணீரில் ஊறிப்போயிருந்தது. அக்கடிதத்தில், தனது வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களைப் பட்டியலிட்டிருந்தான் வைரவன். பள்ளியில் வென்ற பரிசுகள், அம்மாவுடன் கிரிக்கெட் விளையாட்டு, வேலை, புது வாழ்க்கை, புதிய மனிதர்கள், எதிர்காலக் கனவு என அனைத்தும் அதில் இருந்தது. கடிதத்தின் கடைசியில், 'இந்தப் பொக்கிஷ தருணங்களைக் கொடுத்த இறைவனுக்கு நன்றி' எனக் குறிப்பிட்டு இருந்தான் வைரவன். 


கருணையில்லாக் கடவுள் மீதும் இரக்கமற்ற மனிதர்கள் மீதும் வைரவனுக்குத்தான் எத்தனை நம்பிக்கை! 

 

 

 

Next Story

தேசிய விருது வென்ற மூத்த இயக்குநர் காலமானார் 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
pasi movie director durai passed away

தமிழ் சினிமாவில் கதாசிரியர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக பணியாற்றியவர் துரை. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உட்பட மொத்தம் 46 திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் 1979 ம் ஆண்டு வெளியான பசி திரைப்படம் பெறும் வரவேற்பை பெற்றது. 

ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை எதார்த்தமாக வெளிப்படுத்தியதாக பாராட்டை பெற்ற இப்படம் இரண்டு தேசிய விருதுகளை வென்றது. மேலும் இரண்டு மாநில விருது உட்பட சில விருதுகளையும் வென்றது.  இப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் துரை. மேலும் ரஜினியை வைத்து ஆயிரம் ஜென்மங்கள், கமலை வைத்து நீயா, சிவாஜியை வைத்து துணை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். 

கடந்த பல வருடங்களாக சினிமாவிலிருந்து ஓய்வுபெற்றிருக்கும் துரை (84) இன்று உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி திரைபிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். துரைக்கு மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“மலரும் தருணங்கள் நினைவுக்கு வருகின்றன” - ரஜினி

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
rajini condolence to kannada actor dwarkish passed away

கன்னட திரையுலகில் நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பல்வேறு சினிமா துறைகளில் பணியாற்றியவர் துவாரகிஷ். 1964 ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் நகைச்சுவை நடிகராக துவாரகிஷ் அறிமுகமானார். நடிகராக வெற்றி பெற்ற பிறகு, தயாரிப்பு மற்றும் இயக்கத்திலும் கவனம் செலுத்தினார். அவர் 48 படங்களைத் தயாரித்துள்ளார் மற்றும் கிட்டத்தட்ட 19 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் அவர் இறந்துள்ளார். அவருக்கு வயது 81. வயது மூப்புக் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அவர் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள அவரது வீட்டில், துவாரகிஷ் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

rajini condolence to kannada actor dwarkish passed away

இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தனது இரங்கலை பகிர்ந்திருந்தார். இதையடுத்து தற்போது ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள எக்ஸ் பதிவில், “எனது நீண்ட நாள் அன்பு நண்பர் துவாரகிஷின் மறைவு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. காமெடி நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, ஒரு பெரிய தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் தன்னை உயர்த்தியவர். அவருடனான மலரும் தருணங்கள் என் நினைவுக்கு வருகின்றன. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.