Skip to main content

ஊர்களை அழித்து சாலை அவசியமா?

Published on 19/06/2018 | Edited on 19/06/2018

மக்களுக்கு எது பிடிக்கும்? எது பிடிக்காது? மக்களுக்கு எது அவசியம்? எது அனாவசியம்? என்பதையெல்லாம் பார்த்துப் பார்த்து செய்யவேண்டிய அரசுகள் இப்போது மக்கள் கருத்தையே கேட்க மறுப்பது வேதனைதானே…
 

ஒரு அரசு மக்களுடைய விருப்பத்தை அறிந்து முடிவெடுக்க வேண்டும் என்பது அவசியம்தான். ஆனால், அதுபோல ஏதேனும் நடக்கிறதா? அரசு நிர்வாகத்துக்கு பயந்து, அரசு கொண்டுவரும் திட்டங்களைப் பற்றிய புரிதல் ஏதுமில்லாமல் ‘செவனே’ என்று ஏற்றுக்கொண்ட காலம் இருந்தது.

 

edappadi

 

 

 

அணைகளும், சாலைகளும், தொழிற்சாலைகளும் வளர்ச்சிக்கானவை என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது. வைகை அணைக்காகவும், மேட்டூர் அணைக்காகவும், சேலம் இரும்பாலைக்காகவும், அதற்கு பிறகான பல திட்டங்களைக் கொண்டுவந்த போதெல்லாம் அந்தந்தப் பகுதி மக்கள் பெரிய அளவில் இழப்புகளைச் சந்தித்தவர்கள்தான். அதேசமயம், அந்தத் திட்டங்களால் இழந்தவர்களே பெரிய அளவில் பயன்பெற்றார்கள். மக்கள் இழந்தாலும் அவர்களுக்கான அரசுக்கும் வருவாய் வழியை திறந்துவிட்டது.
 

ஆனால், சமீபகாலமாக மக்களுக்கான திட்டங்கள், அந்தப் பகுதிக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்கள் என்று கொண்டுவரப்பட்ட பல திட்டங்கள் இப்போது, மக்களுடைய உயிரைக் கொல்லும் நச்சுக் கிருமிகளாக மாறிக்கொண்டிருப்பதை காண முடிகிறது.
 

அரசு கொண்டுவரும் திட்டங்கள் மக்களைப் பாதிக்காதபடி, சுற்றுச்சூழலை பாதிக்காதபடி பார்த்துக்கொள்ள வேண்டிய துறை அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் இந்த ஆபத்துகள் விளைந்தன என்பது கண்கூடாக தெரிகிறது. மேலும் ஒரு திட்டத்தை அனுமதி கொடுப்பதற்கு முன் மக்களுக்கோ, அரசுக்கோ அந்தத் திட்டத்தால் என்ன பயன் என்பதை மட்டும் பார்க்கிற மக்கள் பிரதிநிதிகள் இப்போது இல்லை. மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் எவ்வளவு ஆபத்து விளைவிக்குமோ, அவ்வளவுக்கு அதிகமாக லஞ்சம் அல்லது கமிஷன் என்பது நடைமுறையாகிவிட்டது.
 

அந்த வரிசையில் இப்போது 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் சென்னை தாம்பரத்திலிருந்து திருவண்ணாமலை வழியாக சேலம் வரையிலான 274 கிலோ மீட்டர் தூர 8 வழிச் சாலை திட்டம் சேர்ந்திருக்கிறது.

 

road

 

 

 

சென்னையிலிருந்து சேலத்துக்கு 7 மணி நேரம் பயணிக்க வேண்டும். ஆனால் 8 வழிச்சாலை வந்தால் 3 மணிநேரத்தில் பயணிக்கலாம் என்று அரசு சொல்கிறது. ஆனால் அவ்வளவு வேகமாக சென்னைக்கு போக வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லையே என்று மக்கள் சொல்கிறார்கள்.
 

இப்போதெல்லாம் அரசு ஒரு திட்டத்தை கொண்டுவருகிறது என்றால் மக்கள் நலனைக் காட்டிலும் கார்பரேட்டுகளின் நலனைத்தான் முக்கியமாக கருதுகிறது என்பது மக்களுக்கே தெரிந்துவிட்டது. தகவல் தொழில்நுட்ப யுகத்தில் ஒரு திட்டம் எதற்காக கொண்டுவரப் படுகிறது என்ற அறிவு இன்றைய இளைஞர்களுக்கு உடனே கிடைத்துவிடுகிறது.
 

 

 

குறிப்பாக தமிழ்நாட்டின் கனிம வளங்களை கொள்ளையடிப்பதிலேயே அரசியல்வாதிகளும், கார்பரேட்டுகளும் குறியாக இருக்கின்றன. கனிம வளங்களை பயன்படுத்துவதால் அரசுக்கும் மக்களுக்கும் லாபம் கிடைக்க வேண்டும். அப்படியில்லாமல் இன்றைக்கு நிலத்தடி கனிமங்கள் அனைத்தும் கார்பரேட்டுகளுக்கு விற்கப்படுகிறது. மலைகளையும், நதிகளையும் காணாமல் போக்கினார். இதை கண்ணெதிரே மக்கள் பார்கிகறார்கள். நதிகள் மணலை இழந்து, சாக்கடை சகதியாக மாறிவிட்டன. மலைகள் தரைமட்டமாகிவிட்டன. இப்போது சுத்தமான காற்றையும் நிலத்தடி நீரையும் மாசுபடுத்துகிறார்கள்.
 

குளிர்பானங்கள் என்றும் பாட்டில் குடிநீர் என்ற பேரிலும் நிலத்தடி நீரை உறிஞ்சி பூமியின் இயகைத் தன்மையை சீரழித்துவிட்டார்கள். இப்போது சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
 

இந்நிலையில்தான், ஏற்கெனவே 4 வழிச்சாலை இருக்கும்போது, அதனுடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் தனியாக ஒரு 8 வழிச்சாலை அமைக்கிறார்கள் என்றால் அது யாருக்காக இருக்கும் என்று சிந்திக்கத் தெரியாத நிலையில் மக்கள் இ்போது இல்லை.
 

அந்தச் சாலைக்காக 22 கிராமங்களையும், ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலத்தையும், லட்சக்கணக்கான மரங்களையும் வனம் மற்றும் மலைப்பகுதியையும் நாசப்படுத்தி இப்போது இந்தச் சாலை தேவையா என்றே மக்கள் வினா எழுப்புகிறார்கள்.
 

கிராமத்தில் இப்போது இருக்கிற வீட்டை இழந்துவிட்டு, வேறு ஒரு இடத்தில் போய் இதே வசதிகளுடன் வீடு கட்ட முடியுமா? நான் ஏன் என் பரம்பரை வீட்டையும் கிராமத்தையும் விட்டு வேறு பகுதிக்குச் செல்ல வேண்டும் என்று கேட்கும் மக்களை அரசு அச்சுறுத்தத் தொடங்கியிருக்கிறது.
 

SALEM

 

 

 

 

காட்டை அழித்து ஊராக்கினார்கள். இப்போது ஊரை அழித்து சாலையாக்கப் பார்ப்பது எந்தவகையில் சரியாக இருக்கும் என்ற கேள்விக்கு அரசிடம் சரியான பதில் இல்லை. ஏனென்றால் இந்தச் சாலையே மக்களுக்கானது இல்லையே. இந்தச் சாலையின் இருபுறமும் இருக்கிற நிலத்தடி கனிமங்களை கார்பரேட்டுகள் சுரண்டுவதற்கே அரசு அவசர அவசரமாக மக்களை அச்சுறுத்தி நிலத்தை பறிக்கப் பார்க்கிறது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.
 

 

 

செயற்கைக் கோள் உதவியுடன் இந்தியாவில் எந்தெந்தப் பகுதிகளில் என்னென்ன கனிமங்கள் குவிந்திருக்கின்றன என்பதை கார்பரேட்டுகள் அறிந்திருக்கிறார்கள். அவர்களுக்கு அரசாங்கத்தின் அறிவியல் தொழில்நுட்பத் துறையே உதவிசெய்கிறது.
 

தமிழகத்தை பாலைவனமாக்கி, மக்கள் வாழமுடியாத மாநிலமாக்குவதற்கே மத்திய அரசு திட்டமிடுகிறது. அதற்கு மாநில அரசும் கைகட்டி சேவகம் புரிகிறது என்ற உண்மை மக்களுக்கு புரிந்துவிட்டது. மக்களை வஞ்சிக்க நினைத்தால் அரசியல்வாதிகள் தப்பமுடியாது என்பதை பல சமயங்களில் காலம் உணர்த்தியிருக்கிறது. இனியும் உணர்த்தும்.