Skip to main content

"விஜய் வளர வளர எனக்கு அந்த ஆசை வந்தது... ஜெ.,விடம் 15 சீட் கேட்டது உண்மைதான்..." - எஸ்ஏசி பேட்டி!

Published on 07/10/2021 | Edited on 07/10/2021

 

ுி

 

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர் எஸ்.ஏ சந்திரசேகர் அடிக்கடி அரசியல் தொடர்பான கருத்து மேடைகளில் பேசும் வழக்கம் உடையவர், தன்னுடைய படங்களைப் போலவே எதையும் மறைத்து பேசத் தெரியாதவர். தற்போது அவரது மகனும், நடிகருமான விஜய் இடையே வருத்தம் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், விஜய் அரசியல் வருகை பற்றி அவரிடம் கேள்விகளை எழுப்பினோம். எவ்வித தயக்கமுமின்றி நம்மிடம் அவர் பேசியதாவது, " எனக்கு அரசியல் ஆசை எப்போதும் இருந்ததில்லை என்பதை பலமுறை தெளிவுப்படுத்தியிருக்கிறேன்.

 

விஜய்க்கு ஆரம்பத்தில் படத்தில் நடிப்பதற்கு பல்வேறு இயக்குநர்களிடம் நானே பேசினேன். அதற்கு தகுந்த சூழ்நிலை அமையாத காரணத்தால் நானே அறிமுகப்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. முதல் படம் சுமாராகப் போனது, பிறகு அடுத்தடுத்து நல்ல படங்கள் வந்து, இன்றைக்கு அவர் இந்த நிலையில் இருப்பதற்கு நான் ஒரு காரணமாக இருந்தேன் என்பது உண்மை. அவரின் வளர்ச்சியை அருகில் இருந்து பார்த்து வந்ததால் அவர் வளர வளர அவரை அரசியலுக்கு அழைத்து வந்து மக்கள் சேவை ஆற்ற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்தது உண்மைதான். நான் எதையும் மறைத்து பேச மாட்டேன் என்பது உங்களுக்கு தெரியும். 

 

எனவே அந்த எண்ணம் எனக்கு வந்ததை எடுத்து, சினிமாவில் அவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றதை போல அரசியலிலும் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் சில முயற்சிகளை எடுத்தேன். அதில் அவருக்கு உடன்பாடில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அவர் நடிக்கும் படத்தின் கதை கேட்பது, நல்ல கதையை பரிந்துரை செய்வது என்று இருந்தேன், சில ஆண்டுகளாக அவரே பார்த்துக்கொள்கிறார். நான் எதிலும் தலையிடுவதில்லை. எனவே இதற்கு பிறகு அவர் அரசியலுக்கு வருவாரா என்று அவர் சொன்னால்தான் எனக்கே தெரிய வரும். தற்போது உள்ளாட்சி தேர்தலில் அவரது ரசிகர்கள் போட்டியிடுவதாக தகவல் வந்திருக்கிறது. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 2011ம் சட்டப்ரேவை தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்தோம்.

 

நாங்கள் எங்களுக்கு 15 சீட் கேட்டோம். அவர்கள் 3 தருவதாக கூறினார்கள். நாங்கள் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. நாங்கள் ஆதரவு தருகிறோம், ஆனால் எங்களுக்கு இந்த எண்ணிக்கையில் சீட் வேண்டாம்,  ஆதரவு மட்டும் முழுவதுமாக தருகிறோம் என்றோம். என்னை 40 இடத்தில், அதாவது திமுக வலிமையாக இருந்த இடங்களில் பேச சொன்னார்கள், நானும் பேசினேன். தேர்தல் வெற்றிக்கு பிறகு அவர்களின் வெற்றிக்கு அணிலாக இருந்தோம் என்று தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டோம். அதையே அந்த அம்மாவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை" என்றார்.