Skip to main content

10 நாட்கள், 30 ஆயிரம் சதுரஅடி, 1,124 மரங்கள்! ​‘வனம்’ கொண்டாடிய பசுமைப் பொங்கல்!

Published on 15/01/2020 | Edited on 15/01/2020

வனங்கள் நிறைந்திருந்த இந்தப் பூவுலகில், மனிதர்கள் இயற்கையோடு வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இன்று மனிதர்கள் நிறைந்திருக்ம் வேளையில், வனங்களை தேடித்திரிய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி இருக்கிறோம்.  

அத்தனை இன்றியமையாதவை வனங்கள். அப்படிப்பட்ட வனங்களை உருவாக்குவதையே தன் வாழ்நாள் லட்சியமாகக் கொண்டு இயங்கிவரும் ‘வனம்’ அமைப்பின் இயக்குனர் கலைமணி, தனது சொந்த மாவட்டமான திருவாரூரில் பசுமைப் பொங்கல் விழாவைக் கொண்டாடி இருக்கிறார். 

 

pongal celebrations with forestation

 

 

அடுத்த பத்தாண்டுகளில் “மரங்கள் அடர்ந்த காவிரிப் படுகை மாவட்டங்கள்” என்ற குறிக்கோளுடன் வனம் அமைப்பு இயங்கி வருகிறது. தனது கல்லூரிக் காலத்தில் இருந்தே இயற்கையின் மீது தனிஆர்வம் கொண்டிருந்த கலைமணி, தொடர்ந்து மரங்களை நடுவதிலும், மரங்கள் தொடர்பான தேடலிலும் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக இந்தப்பணியை தன்னார்வத்தோடு செய்துவந்த நிலையில், நண்பர்கள், தன்னைப் போன்ற தன்னார்வலர்களின் உந்துதலோடு 2017, ஜூன் மாதம் ‘வனம்’ என்கிற அமைப்பைத் தொடங்கினார். அன்றிலிருந்து, கடந்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் ஒரு லட்சத்து 24 ஆயிரம் மரங்களை வனம் அமைப்பு நட்டிருக்கிறது. நீர்நிலைகளைப் பாதுகாக்கும் விதமாக லட்சக் கணக்கான பனை விதைகளையும் விதைத்திருக்கின்றனர் வனம் அமைப்பைச் சேர்ந்தவர்கள். 

வயது வித்தியாசமின்றி, பலரும் வனம் அமைப்பின் பணிகளில் பங்கெடுத்துக் கொள்கிறார்கள். வனம் கலைமணி என்ற தனிநபரால், இந்தப் பெரும்பணியை மேற்கொள்ள முடியாது என்பதால், மாவட்டத்தின் பல கிராமங்களில் வனம் அமைப்பின் கிளைகளாக ‘கிராம வனம்’ என்ற அமைப்பை நடத்திவருகிறார். இதன்மூலம் ஒரு கிராமத்தில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட இளைஞர்களிடம் வருடத்திற்கு நூறு மரக்கன்றுகள் ஒப்படைக்கப்பட்டு, அவற்றை நடுவது மற்றும் பராமரிப்பதற்கான பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. அதோடு, ஒரு குறுங்காடு ஒப்படைப்படுகிறது.  

அதன் ஒரு பகுதியாக, திருவாரூர் மாவட்டம் மணக்கரை ஒன்றியம், வடவேற்குடி என்கிற கிராமத்தில், சபா விநாயகர் கோவிலுக்கு சொந்தமான சுமார் 30 ஆயிரம் சதுரஅடி பரப்பளவு நிலம் நீண்டகாலமாக கருவேல புதர்கள் மண்டி, யாருக்கும் பயனற்றுக் கிடந்தது. அவற்றை நூறு நாள் வேலைத்திட்டப் பணியாளர்கள் மூலமாக முழுவதுமாக அகற்றி, குழிகள் தோண்டப்பட்டன. ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் செலவில், 10 நாட்களுக்கு தொடர்ந்த இந்தப்பணி நிறைவடைந்து மரக்கன்றுகளை நடும் பணியும் முடிந்தது. வனம் அமைப்பின் சார்பில் அமைக்கப்பட்டிருக்கும் வனம் கலைக்குழுவைச் சேர்ந்த பறையிசைக் கலைஞர்கள், கல்லூரி மாணவர்கள், கிராம மக்கள் ஒன்றுகூடி பசுமை பொங்கல் விழாவாக நடத்தி முடித்தனர். கருவேல மரங்கள் சூழ்ந்து கிடந்த அந்தப் பகுதி, இன்னும் சில ஆண்டுகளில் பறவைகளுக்கான குறுங்காடாக எழுந்து நிற்கப் போகிறது என்று தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள், வடவேற்குடி கிராம மக்கள்.  

 

pongal celebrations with forestation

 

இதுதொடர்பாக வனம் கலைமணியிடம் பேசியபோது, “பல ஊர்கள், அங்கு செழித்து வளர்ந்திருந்த நாட்டு மரங்களின் பெயர்களையே கொண்டிருக்கின்றன. உதாரணத்திற்கு, விவசாயத்துக்கு உதவும் இலுப்பை மரங்கள் அதிகம் இருந்த ஊர்கள் இலுப்பையூர் என்று அழைக்கப்பட்டன. கடம்ப மரங்கள் அதிகம் இருந்ததால், ஒரு காலத்தில் மதுரையே கடம்பவனமாக அழைக்கப்பட்டது. இதுபோல் அடுக்கிக் கொண்டே போகலாம். இன்று வெறும் பெயர்களாக மட்டுமே நாட்டு மரங்கள் இருக்கின்றன. அதை மீட்டெடுக்கும் பொருட்டு, நாட்டு மரங்களின் விதைகள், கன்றுகளை தேடிப்பிடித்து இலவசமாக வழங்கிவந்தோம். நோக்கம் முழுமையாக வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணத்தில், நாங்களே களப்பணியில் இறங்கினோம்.  

எங்கள் அமைப்பின் மிகமுக்கியமான பணியாக, விழிப்புணர்வு கண்காட்சிகள் நடத்துவதை எண்ணுகிறோம். இதில் 110 நாட்டு மரங்கள், அவற்றின் விதைகள், எந்தப் பகுதியைச் சார்ந்தவை என்பது போன்ற தகவல்களை காட்சிப் படுத்துகிறோம். வேளாண் மாணவர்கள் முதல் சாமான்யர்கள் வரை பலரும் அதன்மூலம் பயனடைந்துள்ளனர். அதேபோல், இயற்கை ஆர்வலரும், இயற்கை நெல்விதை மீட்பாளருமான நெல் ஜெயராமன் அவர்களின் நினைவாக, மயிலாடுதுறை மண்ணம்பண்டலில் உள்ள ஏ.வி.சி. கல்லூரியில் 124 நாட்டு மரங்களுடன் குறுங்காடு அமைத்திருக்கிறோம். இன்னும் சில ஆண்டுகளில், வேளாண் ஆராய்ச்சி மாணவர்களுக்கு அது பயன் தரப்போகிறது” என்றார் மகிழ்ச்சியுடன்.  

 

pongal celebrations with forestation

 

சில ஆண்டுகளுக்கு முன்னர் மும்பை மாநகரத்தில் மனிதர்களுக்கும், மரங்களுக்குமான விகிதம் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. நபர் ஒன்றுக்கு எத்தனை மரங்கள் இருக்கின்றன என்பது தொடர்பான கணக்கெடுப்பு அது. அதில், நான்கு நபர்களுக்கு ஒரு மரம் மட்டுமே இருப்பதாக அதிர்ச்சிகர முடிவு கிடைத்தது.  

இதுவே, அமெரிக்காவிலும், சீனாவிலும் எடுத்துக் கொண்டால், ஒரு தனிநபருக்கு முறையே 716 மற்றும் 102 மரங்கள் இருக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை சராசரியாக நபர் ஒன்றுக்கு ஏழு மரங்களாவது இருக்கவேண்டும் என்கிறது மும்பையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவு.  

இயற்கை மட்டுமே இனி எதிர்கால ஆதாரம். அதை மீட்டெடுக்க, பாதுகாக்க பலரும் முன்வர வேண்டும். அல்லது அதில் ஆர்வம் உள்ளவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று வனம் கலைமணி வைக்கும் வேண்டுகோளுக்கும், இந்த ஆய்வு முடிவுக்கும் ஒரு நேரடித் தொடர்பு இருக்கிறது.  

 

 

Next Story

பொங்கல் விடுமுறை அறிவித்த கேரள அரசு!

Published on 13/01/2022 | Edited on 13/01/2022

 

 Government of Kerala announces Pongal holiday!

 

தமிழகம் பொங்கல் பண்டிகைக்கு தயாராகி வரும் நிலையில் கேரளாவில் நாளை 6 மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

 

தமிழர் திருநாளான பொங்கல் விழா நாளை முதல் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. அதேபோல் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளும் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். கேரளாவில் தமிழ் பேசும் மக்கள் அதிகம் வாழும் திருவனந்தபுரம், கொல்லம், இடுக்கி, வயநாடு, பதனம்திட்டா, பாலக்காடு ஆகிய 6 மாவட்டங்களுக்கு பொங்கல் விடுமுறை அளிக்க வேண்டும் என  தமிழக முதல்வர் கோரிக்கை வைத்திருந்தார்.

 

முன்னதாக வரும் ஜனவரி 15 ஆம் தேதி விடுமுறை என கேரள அரசு அறிவித்திருந்த நிலையில், தற்பொழுது நாளை அதாவது 14 ஆம் தேதி கேரளாவில் தமிழ் பேசும் மக்கள் அதிகம் வாழும் திருவனந்தபுரம், கொல்லம், இடுக்கி, வயநாடு, பதனம்திட்டா, பாலக்காடு ஆகிய மாவட்டங்களுக்கு பொங்கல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

 

Next Story

கூலமேடு ஜல்லிக்கட்டு கோலாகலம்! 750 காளைகளுடன் 500 காளையர்கள் மல்லுக்கட்டு!!

Published on 18/01/2020 | Edited on 18/01/2020

ஆத்தூர் அருகே, கூலமேட்டில் ஜல்லிக்கட்டு விழா உற்சாகமாக நடந்தது. 750 காளைகள் களமிறக்கப்பட்ட நிலையில், 500 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை போட்டிப்போட்டு அடக்கினர்.

பொங்கல் பண்டிகையையொட்டி, சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கூலமேட்டில் சனிக்கிழமை (ஜன. 18) ஜல்லிக்கட்டு விழா நடந்தது. இதையொட்டி, கூலமேடு அரசு தொடக்கப்பள்ளிக்குச் சொந்தமான இரண்டு ஏக்கர் மைதானத்தில் வீரர்கள் விழுந்தாலும் காயம் ஏற்படாமல் இருக்க, தேங்காய் நார்க்கழிவுகள் பரப்பி ஜல்லிக்கட்டுக் களம் தயார் செய்யப்பட்டது.

 

koolamedu jallikattu

 

சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன், ஜல்லிக்கட்டு விழாவை துவக்கி வைத்தார். சேலம், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி, நாமக்கல், கரூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களைச் சேர்ந்த 500 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டுக் காளைகளை அடக்கினர். ஜல்லிக்கட்டு விழாவில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 750 காளைகள் களமிறக்கப்பட்டன. மாடுபிடி வீரர்கள், ஐந்து ஷிப்ட் முறையில் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை களத்தில் 100 வீரர்கள் இறக்கி விடப்பட்டனர்.

காளைகளை அடக்கும் வீரர்களுக்கும், பிடிபடாத ஜல்லிக்கட்டு காளைகளின் உரிமையாளர்களுக்கும் பீரோ, கட்டில், வெள்ளி குடம், குக்கர், வெள்ளிக்காசு, சைக்கிள், டிவி உள்ளிட்ட ஏராளமான பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

இதுகுறித்து கூலமேடு ஜல்லிக்கட்டு விழாக்குழுவினர் கூறுகையில், ''மதுரை அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஆகிய பகுதிகளில் நடக்கும் ஜல்லிக்கட்டு விழாவைப்போல் சேலம் மாவட்டம் ஆத்தூர் கூலமேட்டில் ஆண்டுதோறும் நடக்கும் ஜல்லிக்கட்டு விழாவும் புகழ் வாய்ந்ததாகும்.

போட்டி தொடங்குவதற்கு முன்பு மாடுபிடி வீரர்களுக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. அதேபோல் ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் கால்நடை மருத்துவர்கள் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. உரிய விதிகளைப் பற்றி ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்,'' என்றனர்.

மாவட்ட போலீஸ் எஸ்பி தீபா கனிகர் தலைமையில் 2 ஏடிஎஸ்பி, 4 டிஎஸ்பி, 15 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 300 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.