Skip to main content

"விருந்து உண்ட மாப்பிள்ளை பொன்மாணிக்கவேல்..." - திலகவதி ஐபிஎஸ்

Published on 06/08/2018 | Edited on 06/08/2018

சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன்மாணிக்கவேல், விசாரித்து வந்த வழக்குகள் தமிழக அரசால் சி.பி.ஐக்கு மாற்றப்பட்டன. 'பொன்மாணிக்கவேலின் விசாரணை திருப்தியளிக்கவில்லையென்றும், அவரது விசாரணை திசைமாறிப் போவதாகவும் காரணம் கூறினார்கள் அமைச்சர்கள். மறுபக்கம், 'கடத்தப்பட்ட சிலைகள் விறுவிறுப்பாக மீட்கப்பட்டு, கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டு வந்த நிலையில் யாரையோ காப்பாற்றவே அரசு இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது' என்று பொன்மாணிக்கவேலுக்கு ஆதரவாக அரசுக்கு எதிராக விமர்சனங்கள் கிளம்பின. இந்த நிலையில், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியும், தமிழக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவில் தலைமைப் பதவியில் பணியாற்றியவருமான திலகவதியை சந்தித்து இதுகுறித்துப் பேசினோம். பொன்மாணிக்கவேல் நீக்கம் குறித்தும், தமிழக சிலைக் கடத்தல் பிரிவின் செயல்பாடு குறித்தும் அவர் கூறியது...  

 

thilagavahi

         

"பொன்மாணிக்கவேல், எனது டீமில் முன்பு பணிபுரிந்திருக்கிறார். வேலை என்று வந்துவிட்டால் திறம்படத்தான் செயல்படுவார், நல்ல மனிதரும்கூட ஆனால் அதிகமாகப் பேசுபவர். அதன் மூலம் ஊடகங்கள் முன் தன்னை அடையாளப்படுத்திக்கொள்கிறார். அதே போல் இதையெல்லாம் தனிப்பட்ட ஒருவரால் செய்யமுடியாது. ஒரு குழுவாகத்தான் இதை செயல்படுத்த முடியும், உதாரணத்துக்கு பத்தூர் நடராஜன் சிலை வழக்கை எடுத்துக்கொண்டால் 'ஸ்காட்லண்ட் போலீஸ், அமெரிக்கா போலீஸ், இந்திய போலீஸ், தமிழ்நாடு போலீஸ் மற்றும் அந்த மியூஸியத்தின் இயக்குனர்' என்று இத்தனை பேரின் உழைப்பால் கண்டுபிடிக்கப்பட்டது. இதையெல்லாம் தாண்டி 'டாக்டர். சந்திரசேகர்' என்னும் தடயவியல் நிபுணர் வந்து பிடிபட்ட சிலை பத்தூரில் தொலைந்த சிலைதான் என்று நிரூபித்தார். இப்படி ஒரு சிலை மீட்பதின் பின்னால், இத்தனை நபர்களின் உழைப்பு இருக்கிறது. இது வெறும் ஒரு தனி மனிதரால் முடியாது. பொன்மாணிக்கவேலை  பொறுத்தவரை, நான் முன்னமே சொன்னது போல அவர் நன்றாகப் பேசக்கூடியவர், அதனால் ஊடகங்களின் முன் அதிகம் பேசுகிறார். அதற்கு ஊடகங்களும் துணைபோகிறது என்பதுதான் வருத்தத்திற்குரியது. பொன்மணிக்கவேலைப் போல பல திறமையான அதிகாரிகள் இருக்கின்றனர். அவர் இல்லையென்றால் அந்தப் பிரிவு ஒன்றும் முடங்கிவிடாது. அவர் செய்திருக்கும் வேலையென்பது பலர் சமைத்துவைக்க இறுதியில் விருந்து உண்ட மாப்பிள்ளை போலதான். இப்பொழுது கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான சுபாஷ் கபூர் கைது செய்யப்ட்டதுகூட விபத்துதான்.  

 

அரசு, இந்த வழக்குகளை சிபிஐக்கு மாற்றியிருப்பதில் அரசியலொன்றும் இல்லை. எல்லாவற்றையும் அரசியல் ஆக்கக்கூடாது. சிலைக்கடத்தலைத் தடுப்பதற்கு அரசும் ஒத்துழைப்பு அளித்தே வருகிறது. ஆனாலும், ஆட்கள் எண்ணிக்கை, உபகரணங்கள் வசதி இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டால், இந்தப் பிரிவு அரசாங்கத்தால் கைவிடப்பட்ட பிரிவு என்றுதான் சொல்லவேண்டும். ஆனாலும் தமிழகத்திலிருந்து கடத்திக் கொண்டு செல்லப்பட்ட கலைச்செல்வங்கள் கண்டிப்பாக மீட்கப்பட வேண்டும். அது நடக்கும், ஏனெனில் முக்கிய குற்றவாளி இப்பொழுது நம் கையில் இருக்கிறான். அவன் மீதான குற்றச்சாட்டுக்கு வலுவான ஆதாரங்கள் இருக்கின்றன. அவனை வைத்து உலக அளவில் உள்ள நெட்ஒர்க்கை கண்டுபிடிக்கவேண்டும், அதுதான் பாக்கி"