
திருவள்ளூர் மாவட்டத்தில் வீரராகவ பெருமாள் கோயில் என்ற பிரசித்தி பெற்ற கோயில் உள்ளது. இந்த கோயிலில், கடந்த 2ஆம் தேதி முதல் சித்திரை மாத பிரம்ம உற்சவம் நடைபெற்று வருகிறது. இதற்காக சென்னை சேலையூரில் உள்ள பாடசாலையில் பயின்று வந்த 5 மாணவர்கள், வேத பாராயணம் செய்வதற்காக, இந்த கோயிலுக்கு வந்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று (06-05-25) அதிகாலை சந்தியா வந்தனம் செய்ய 4 பேர் அந்த கோயில் குளத்தில் வந்துள்ளனர். அப்போது, மூன்று மாணவர்கள் கால் தவறி குளத்தில் விழுந்துள்ளனர். இதனை கண்டு மேல்படிக்கட்டில் இருந்த மற்றொரு மாணவர், கூச்சலிட்டுள்ளார். உடனடியாக அங்கிருந்தவர்கள் ஓடிவந்து குளத்தில் விழுந்த மாணவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால், மூன்று மாணவர்களும் சடலமாக மீட்கப்பட்டனர். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவல் அறிந்து விரைந்து வந்த திருவள்ளூர் நகர காவல்துறையினர், உயிரிழந்த 3 பேரின் உடலையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த மூன்று பேர் சேலையூரைச் சேர்ந்த ஹரிஹரன், வீரராகவன், வெங்கட்ராமன் ஆகியோர் என்பது தெரியவந்தது. கோயில் உற்சவ விழாவிற்காக வேத பாராயணம் பாடுவதற்காக வந்த மூன்று பேர் கோயில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.