Skip to main content

அத்துமீறும் பாகிஸ்தான்; நீடித்து வரும் போர் பதற்றம்!

Published on 06/05/2025 | Edited on 06/05/2025

 

the tension of continues and Pakistan is transgressing

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதக் கும்பல் நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியுள்ளது. அதே சமயம் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாட்டுத் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, பஹல்காம் உள்ளிட்ட ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு தீவிர கண்காணிப்பில் இந்திய ராணுவப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தானுக்கு எதிராக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. 

தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை பிடிக்கும் பணியில் இந்திய ராணுவம் முனைப்பு காட்டி வருகிறது. இதனிடையே, பஹல்காம் தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு கடந்த மூன்றாம் தேதி அன்று எதிர்பாராத விதமாக பாகிஸ்தான் ஏவுகணை சோதனை நடத்தி இருந்தது. அதனை தொடர்ந்து, நேற்றும் (05-05-25) இரண்டாவது முறையாக ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் நடத்தியதாக தகவல் வெளியானது. இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகைகளை நாளை (07-05-25) நடத்த வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

மத்திய அரசு வெளியிட்ட அந்த உத்தரவில், வான்வெளி தாக்குதல் குறித்து எச்சரிக்கை சைரன்களை இயக்கி ஒத்திகை செய்வது; தங்களை தாங்களே பாதுகாத்தல் குறித்த பயிற்சியை மக்களுக்கு தரவது; முக்கிய தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றை எதிரிகள் கண்ணில் இருந்து மறைக்க ஏற்பாடு செய்வது தொடர்பான ஒத்திகை; போர் நேரத்தில் அவசரக் காலத்தில் மக்களைப் பாதுகாப்பாக எப்படி வெளியேற்றுவது என்பது குறித்த ஒத்திகை; எதிரிகள் தாக்குதலின் போது மின்விளக்குகளை அணைப்பது குறித்த ஒத்திகை; உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்களை சேமித்து வைப்பது; தாக்குதல் நடந்தால் தீயணைப்பு துறை, பேரிடர் மீட்புத்துறை எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்த ஒத்திகை உள்ளிட்ட பாதுகாப்பு ஒத்திகைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு உத்தரவிட்ட சம்பவம், உலக தலைவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

இந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் இன்று அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து, தொடர்ந்து 12வது நாள்களாக அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தி வரும் பாகிஸ்தான், நேற்று இரவும் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சார்ந்த செய்திகள்