Skip to main content

பள்ளிக்கல்வியைக் கெடுக்க பள்ளிக்கல்வித்துறை, நெடிய வயல்களை அழிக்க நெடுஞ்சாலைத்துறை, சபாஷ் சரியான அரசு!!!

Published on 13/06/2018 | Edited on 13/06/2018

தற்போது இருக்கும் அரசு யாருக்காக இருக்கிறது என்ற கேள்வி நமக்குள் பிறந்து பல நாட்கள் ஆகிவிட்டன. விளம்பரத்தில் மட்டுமே கவனம் செலுத்தும் அரசு மக்களை மறந்தும் நெடுநாள் ஆகிவிட்டது. ஜல்லிக்கட்டு, நீட், மீத்தேன், ஸ்டெர்லைட், காவிரி இப்படி பல பிரச்சனைகளில் அவர்களின் செயல்பாடு எப்படி இருந்தது என்பதை மீண்டும் சொல்லித்தான் தெரியவேண்டும் என்றில்லை. தற்போது இரு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ஒன்று பள்ளிக்கல்வியை அழிக்க, மற்றொன்று விவசாயத்தை அழிக்க....
 

eps and sengotaiyan


 

 


இனி மொழிப்பாடங்களில் ஒரு தேர்வு மட்டுமே நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர். அதன்படி இனி முதல்தாள், இரண்டாம் தாள் என்று பிரிந்து இருக்காது, இரண்டும் ஒன்றாக இணைக்கப்படும். இது மாணவர்களின் படிப்புச்சுமையை குறைக்கும் என்று கூறியுள்ளார் அமைச்சர். அப்படியானால் நீட்டிற்காக ராஜஸ்தான் வரை சென்றது சுமை இல்லையா, அல்லது அது சுமையாக தெரியவில்லையா என்ற கேள்வி எழுகிறது. இன்னொரு குறிப்பு பாடப்பகுதியில் எந்த மாற்றமும் இருக்காது, அனைத்தையும் ஒருங்கிணைத்தவாறு கேள்வித்தாள்கள் அமைய வேண்டும் என்பது. இங்கு இன்னொரு கேள்வி எழுகிறது. அதெப்படி 200 மதிப்பெண்களை 100 மதிப்பெண்களாக மாற்றுவீர்கள், எதையும் விடாமல் அனைத்தையும் ஒருங்கிணைத்து? இலக்கணம் என்பது ஒவ்வொருவரும் கண்டிப்பாக கற்றுக்கொள்ளவேண்டிய பாடம். அதற்காகத்தான் மொழிப்பாடங்களை இரண்டாகப் பிரித்து இலக்கணத்திற்கு அதிக கவனம் கொடுத்தனர் முன்பு இருந்தவர்கள். ஏற்கனவே மொழியறிவு, மொழி ஆளுமை என்பது தற்காலத்தில் குறைந்து வரும் நிலையில் இந்த முடிவு சரியானதா இல்லையா என்பதை கல்வியாளர்கள் சொல்ல வேண்டும்.  

 

 

 

நாட்டின் முதுகெலும்பு விவசாயம், உழுபவனே கடவுள்... இனி இந்த வார்த்தைகளையெல்லாம் காகிதத்தில் மட்டும்தான் விதைக்கமுடியும்போல... நெடுஞ்சாலைக்காக வயலை அழிப்பதை எதிர்த்து மக்கள் போராடும்போதும் முதல்வர் அந்த முடிவிலிருந்து மாறாமல் இருக்கிறார். கேட்டால் வளர்ச்சி முக்கியம் என்கிறார். வளர்ச்சியைவிட உயிரும், உணவும் முக்கியம் என்பதும், இந்த சாலை இல்லையென்றால் இன்னொரு சாலை வழியே செல்லலாம், ஆனால் விவசாய நிலம் போனால் வருமா என்பது கூடவா தெரியாது விவசாய குடும்பத்திலிருந்து வந்த முதல்வருக்கு என்று கேட்கிறார்கள் நிலத்தை இழக்கவிருக்கும் விவசாயிகள். இப்படி பல கேள்விகள் எழுகின்றன. மொத்தத்தில் இந்த அரசு மக்களுக்கு ஆதரவாக இருக்கிறதோ, இல்லையோ, மக்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது.