Skip to main content

"கவிச் சக்கரவர்த்தியான கம்பனுமேகூட கைவிடப்பட்ட ஒரு மனிதனாகத்தான்..."

Published on 14/12/2018 | Edited on 14/12/2018

இலக்கியத்தில் உயரிய விருதான சாகித்ய அகாதமி விருது, எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு அவரின் சஞ்சாரம் நாவலுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அவருக்கு பல் வேறு தரப்புகளில் இருந்து பாராட்டுகள் வந்து குவிந்துக்கொண்டிருக்கிறது. அதன் ஒரு அங்கமாக சென்னை, ஆழ்வார்பேட்டையில் ரஷ்ய கலாச்சார் மையம் சார்பாக கடந்த 11-ம் தேதி ‘படைப்பாளர்களின் பாராட்டு விழா’ எனும் விழா நடந்தது. இதில், எழுத்தாளர் ச.கந்தசாமி, திரைக்கலைஞர் சிவக்குமார், கலை விமர்சகர் இந்திரன் மற்றும் சிலர் பங்குப் பெற்றனர். அதில் சாகித்ய அகாதமி விருது பெற்ற எஸ்.ராமகிருஷ்ணன் அவரின் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். அவர் பேசியதிலிருந்து.

 

 

ss

 

 

இந்த நகரத்திற்கு வரும்போது என் கைகளில் மாற்று ஆடைகளும் மற்றும் எழுத வேண்டும் என்ற ஆசையும் மட்டுமே இருந்தது. பொருளாதாரப் பின்புலம், தெரிந்த நபர்கள் என இங்கு எதும் இல்லை. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் இங்கு வந்த என் முன்னோடிகளுக்கெல்லாம் என்ன நடந்தது என்ற துயர கதையும் எனக்கு தெரியும். ஆனாலும் எப்படியும் எழுத்தை நேசிக்கக்கூடியவர்கள் எங்கிருந்தாலும் அதை நேசிப்பார்கள், அவர்கள் எனக்கான இடத்தை உருவாக்கித் தருவார்களென சென்னைக்குள் நுழையும்போது எனக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. இந்த நகரம் எனக்கு நிறைய நல்ல நண்பர்களை வழங்கியிருக்கிறது. இந்த மேடையில் இருக்கும் லிங்குசாமி, துணை இயக்குனராக இருந்தபோது அவர் அறைக்கு சென்றிருக்கிறேன் இன்றைக்கு வரை அவர் அப்படியே இருக்கிறார். அவரும் வளர்ந்திருக்கிறார், அவருடன் சேர்ந்து நானும் வளர்ந்திருக்கிறேன் என்றால் இவரைப்போல் எத்தனை நண்பர்கள் இருப்பார்கள். நான் அவ்வப்போது ‘ஒரு மனிதர் வெற்றி பெற வேண்டும் என்றால், அவனின் திறமை மட்டும் அல்ல அவனுடன் நல்ல நண்பர்களும் இருந்தால் நிச்சயம் வெற்றி பெற முடியும்’ என நினைப்பேன். 

 

இந்த நகரம் ஒரு வித்தியாசமான நகரம் யாரரும், யாரையும் நேசிக்கத் தயங்குவதே இல்லை. இரு கரம் நீட்டி நேசிக்கக்கூடிய நகரம். அதே நேரம் இந்த நகரம் யாரையும் அவ்வளவு எளிதில் அங்கீகரித்துவிடாது, எதற்காக வந்தாய் என்று துரத்தி அடிக்கத்தான் செய்யும், உங்கள் திறமைகளை எல்லாம் உதாசீனம்தான்படுத்தும். இன்னும் சொல்லப்போனால் அவமானங்களை நீங்கள் சந்திப்பதை வாடிக்கையாக்கிக்கொள்வீர்கள். இது எல்லாமே இந்த நகரம் உங்களுக்கு வைக்கக்கூடிய சோதனைதான். அந்த சோதனைகளைக் கடந்தபிறகு, உங்களுக்கான இடத்தை, உங்களுக்கான மனிதர்களை, உங்களுக்கான வாழ்க்கை, வசதிகளை வழங்கும் என்பதைத்தான் கண்டுகொண்டேன். 

 

நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் நல்ல ஆசிரியர்களால் பயிற்றுவிக்கப்பட்டவன். ஆசிரியர்கள், சில நேரங்களில் என்னை அவர்கள் வாகனத்தில் அமர வைத்து பள்ளிக்கு கூட்டி வருவார்கள். நான் முழுக்க என் ஆசிரியர்களை சார்ந்தவன். அந்த ஆசிரியர்களின் அக்கறை, வாஞ்சை, அன்பு இவை எல்லாம்தான் என்னை உருவாக்கியது. மற்றும் இலக்கியத்தை கற்றுக்கொடுத்த ஆசான்கள் என நீண்ட பட்டியல் இருக்கிறது. அதில் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள் இரண்டு பேர். ஒன்று தோழர் எஸ்.ஏ.பெருமாள், அவர்தான் எனக்கான இடத்தை உருவாக்கித் தந்தவர். இன்னொருவர் கவிஞர் தேவதட்சன், எனக்கு ஓரளவுக்கு இலக்கியம் சார்ந்து திறமை இருக்கிறது என்றால் நான், அந்த ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டவன். அவர்கள் என்னை வழி நடத்துகிறார்கள். வழி நடத்துகிறார்கள் என்றால் அன்று இல்லை இன்றவரையும் அவர்கள்தான் என்னை வழி நடத்துகிறார்கள், நான் நாளைக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைக்கூட அவர்களிடம்தான் கேட்பேன்.  

 


இந்த ஆசிரியர்களைப்போல் என்னை அரவணைத்துக்கொண்ட எழுத்தாளர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். குறிப்பாக முதல் கதைதானே என்று கண்டுகொள்ளாமல் விட்டுவிடாமல், என் முதல் கதையை எழுத்தாளர் அசோகமித்திரன்தான் தேர்வு செய்து வெளியிட்டார். அதுமட்டும் இல்லாமல் எனக்கு தபால் அட்டையில் வாழ்த்து அனுப்பினார். என்னுடைய கதை பத்திரிகையில் வந்தபோது சுந்தர் ராமசாமி, வாசகர் கடிதம் எழுதினார். அன்றைய தமிழ் இலக்கியத்தில் சுந்தர் ராமசாமி மிகப்பெரிய லெஜண்ட். இவர்கள் எல்லோருடைய ஆசியும், அன்பும் சேர்ந்து உருவாக்கிய ஒருவனுக்குத்தான் இந்த விருது கிடைத்துள்ளது. அடுத்தது என் குடும்பம், எழுத்தை மட்டுமே நம்பி, எழுத்தை மட்டுமே வாழ்க்கையாய் கொண்டு வாழக்கூடிய ஒவருவனுடன் வாழ்வது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. நான் கொஞ்சம் கற்பனையில் வாழக்கூடிய மனிதன். உண்மையில் எனக்கு இவ்வளவு பெரிய உலகம் தேவையில்லை. எனக்கு சின்னஞ்சிறு உலகம் போதும். அதில் எனக்கான மனிதர்கள், புத்தகம், இசை, சினிமா, உணவு என ஒரு சின்ன உலகம் போதும். ஆனால், நான் இந்த சின்ன உலகத்தில் இருந்துகொண்டே பெரிய உலகத்துடன் சமர் செய்கின்றவன். அந்த வகையில் அந்த சின்ன உலகத்தைப் பாதுகாத்து, அரவணைத்து, எழுதுகிறவனுக்காக எல்லாவற்றையும் தருகின்ற குடும்பமான என் மனைவி, குழந்தைகளுக்கு எல்லா தருணத்திலும் நன்றி சொல்லுகிறேன், இந்த மேடையிலும் நன்றி சொல்லுகிறேன். மேலும் ஊடகங்கள், பத்திரிகைகள், மற்றும் எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் என் மனம் நிறைந்த அன்பும், நன்றியும் தெரிவித்துக்கொள்கிறேன்.  

 

இந்த நாவலுக்கு விருது கிடைத்ததும் ஒரு நாதஸ்வரக் கலைஞர் ’தம்பி நீங்க எங்க வீட்டு புள்ளபோல, எங்களப் பத்தி எழுதியிருக்கிங்க. யாரய்யா எங்களப் பத்தி எழுதுவாங்க’ என்றார். நான் “உங்கள் நாதஸ்வரத்தை கேட்டுவிட்டு யாரோ ஒருவருக்கு நன்றாக இருந்தால் கை தட்டுவாங்க இல்லையா அதுபோல் உங்கள் நாதஸ்வரம் கேட்ட ஒரு எழுத்தாளரின் கை தட்டு என்று நினைத்துக்கொள்ளுங்கள்” என்றேன்.


”நான் டிவி-ல பார்த்தேன், முதலமைச்சர், எதிர்கட்சிதலைவர் எல்லாம் பாரட்டுறாங்க. எங்களுக்கு எல்லாம் அப்படி தெரியாதுங்க ஐயா; ஒன்னு வேணும்னா செய்றேன் நாலு பேர் வந்து உங்க வீட்டு வாசல்ல நாதஸ்வரம் வாசிக்கட்டுமா” என்றார். அவர்களின் மொழி என்பது அந்த இசைதான். அந்த மகிழ்ச்சி அவர்களின் மனது வரை சேருகிறது என்றால், எனக்குக் கிடைத்த மாலை என்பது என் கழுத்தில் மட்டும் விழவில்லை, என்னுடன் சேர்ந்து அவர்களுக்கும் விழுந்திருக்கிறது.

 

நான், தரைக்குத் தள்ளப்படுவேனோ என்று அச்சம் கொண்டதில்லை. காரணம், உயரத்தில் இருப்பவர்கள்தான் அச்சம் கொள்ள வேண்டும். நான் தரைக்கு அடியில் இருந்துதான் வந்திருக்கிறேன். என்னால் வானத்தில் பறக்கவும் முடியும், தரையில் இருக்கவும் முடியும்.  ஆனால், எவ்வளவு உயரத்தில் பறக்கக்கூடிய பறவையாக இருந்தாலும் அது வானத்தில் குடியிருக்க முடியாது. அது மரத்திற்கு வந்துதான் ஆகவேண்டும். ஆனால், நிச்சயம் பறக்கும்போது ஒரு பறவை, இன்னொரு பறவையோடு போட்டியிடாது, அதை அடித்துவிட்டு நாம் பறந்துவிட வேண்டும் என நினைக்காது. ஓராயிரம் பறவைகள் பறந்தாலும் வானத்தில் இடமுண்டு தமிழ் இலக்கியம் அப்படிப்பட்டதுதான். வைரச் சுரங்கங்கள் அடியில் செல்ல செல்லதான் பெரிய வைரம் கிடைக்கும். அதுபோல்தான் தமிழ் இலக்கியத்தில் நீங்கள் எவ்வளவு பின்னால் போகிறீர்களோ அவ்வளவு பெரிய வைரங்கள் கிடைக்கும். ஈராயிரம் வருடங்களுக்கு பின்னால் போய்விட்டால் உலகத்திலே இவ்வளவு சிறப்பான கவிதைகளை எழுதிய இன்னொரு மொழி இருக்குமா என தெரியாது. அந்த மொழியில்தான் நான் எழுதுகிறேன் என்றால் எவ்வளவு பெரிய பெருமை எனக்கு. உண்மையில் எனக்கு நிகரான சக்கரவர்த்தியே கிடையாது என்றுதான் நான் நினைப்பேன். காரணம், என்னிடம் தமிழ் எனும் மாபெரும் மொழி இருக்கிறது. நம்மிடம் எல்லாம் இருக்கிறது என சும்மா சொல்லிக்கொண்டிருக்கிறோம். ஆனால், நம்மிடம் இருக்கும் வைரத்தின் மதிப்பு நமக்கு தெரியவில்லை. தமிழர்களுக்கு உண்மையில் பழந்தமிழ் இலக்கியங்களில் இருக்கக்கூடிய மதிப்பு தெரியவில்லை. அதை நீங்கள் உணர்ந்தால் உங்கள் பிள்ளைகளிடம் காட்டி, உங்களிடம் எவ்வளவு பெரிய சொத்து இருக்கிறது என்று மகிழலாம். இந்த மொழியில் கௌரவமே கிடைக்காமல், அங்கீகாரமே கிடைக்காமல், தமிழின் மாபெரும் கவிச் சக்கரவர்த்தியான கம்பனுமேகூட கைவிடப்பட்ட ஒரு மனிதனாகத்தான் எங்கோ ஒரு ஊரில், யாரும் இல்லாமல், ஒரு நாட்டரசன் கோட்டையில் ஒரு சின்ன கோவிலில் அடங்கியிருக்கிறான். கவிச் சக்கரவர்த்திக்கே அதுதான், தமிழ் சமூகம் கொடுத்த இடம். அவன் சோழ நாட்டில் இருந்து பாண்டிய நாட்டுக்கு சென்று பாண்டிய மன்னனை பாடி புகழ் பெற்று அங்கு ஒரு மாளிகையை கட்டியெல்லாம் வாழவில்லை. கம்பன், பாரதியார், புதுமைப்பித்தன், என எல்லோருக்கும் அதுதான் நடந்தது. என் காலத்திலும் அதுதான் நடக்கும் அதைப் பற்றியெல்லாம் நான் கவலைப்பட்டதில்லை. நீங்கள் எவ்வளவுதான் ஒரு எழுத்தாளனை புறக்கனித்தாலும் அவன் அதை ஏற்றுக்கொள்வான். அவன், அவனின் படைப்பை அங்கீகரிக்காமல் இருப்பதைத்தான் ஏற்றுக்கொள்ள மாட்டான். எப்படி ஒரு மழை ஒரு ஊரையே சந்தோஷம் படுத்துகிறதோ அதுபோல்தான் எழுத்தாளனும், எல்லோரையும் சந்தோஷம் படுத்திவிட முடியுமா என பேராசைகொண்டவனாக இருக்கிறான். இந்தத் தருணத்திலும் என் சொற்களைக்கொண்டுதான் உங்களை தொடுகிறேன், சொற்களின் வழியாகத்தான் நான் பிரிந்துபோகிறேன். சொல் இருக்கும் வரை நான் இருப்பேன், என் மொழி இருக்கும்.