Skip to main content

போதை நெட்வொர்க்கில் நட்சத்திரங்கள்! சிக்கும் தமிழக பிரபலங்கள்! பிரபலமானவரின் தலைமையில் பெரும் பட்டாளமே இருப்பதால் பரபரப்பு!

Sushant Singh Rajput

 

 

நடிகர்களின் போதை மருந்து விவகாரம் பாலிவுட் எனப்படும் மும்பை பட உலகம் தொடங்கி சாண்டல்வுட் எனப்படும் கர்நாடக திரையுலகம் வரை கடுமையாக தாக்கியிருக்கிறது. தற்பொழுது மல்லுவுட் எனப்படும் கேரள திரையுலகில் மையம் கொண்டுள்ள அந்த புயல், தமிழக திரையுலகமான கோலிவுட்டை தாக்கும் என போதை தடுப்பு வட்டார வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

 

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், மும்பையில் தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலைக்கு காரணம், பீகார்காரரான அவருக்கு மும்பை படவுலகம் சரியான வாய்ப்புகளை ஏற்படுத்தி தரவில்லை என முதலில் சொல்லப்பட்டது. அத்துடன், பாலிவுட்டில் நிலவி வரும் போதைப்பொருள் பழக்கம்தான் அவரை மரணத்திற்கு தள்ளியது என்றும், இந்த போதைப்பொருள் நெட்வொர்க் சிவசேனா ஆட்சியில் வெகுவேகமாக பரவி வருகிறது எனவும், பால்தாக்கரேவின் பேரனான ஆதித்யா தாக்கரேதான் இந்த போதைப்பொருள் கும்பலின் பின்னணியாக செயல்படுகிறார் எனவும் நடிகை கங்கனா ரணாவத் தனது பல ட்வீட்களிலும் பேட்டிகளிலும் சொல்லி வந்தார்.

 

சுஷாந்த் சிங்கின் மரணத்தை அமலாக்கத்துறை, சி.பி.ஐ. போன்ற ஏஜென்சிகள் விசாரித்து வந்தன. மோடி ஆதரவாளரான கங்கனா ரணாவத்தின் வெளிப்படுத்தலைத் தொடர்ந்து, போதைப்பொருள் தடுப்புத்துறை என்கிற மத்திய அரசு நிறுவனமும் களத்தில் குதித்தது. சுஷாந்த் சிங் காதலியான ரியா சக்கரவர்த்தியை, அவர் சுஷாந்த் சிங்கிற்கு கஞ்சா வாங்கிக்கொடுத்தார் என கைது செய்தது.

 

மாநிலத்தை ஆட்சி செய்யும் சிவசேனாவுக்கு எதிராக கங்கனா ரணாவத் பேசியதால் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம், போராட்டம், ஸ்டூடியோ இடிப்பு என சிவசேனா களத்தில் இறங்கியது. இப்படி பாலிவுட்டை கலக்கிக் கொண்டிருக்கும் போதைப்பொருள் விவகாரம், இந்திரஜித் லங்கேஷ் மூலம் கர்நாடக படவுலகிற்குள் நுழைந்தது. இவர், இந்துத்வா கும்பலால் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் கௌரி லங்கேஷின் சகோதரர். அவர், கன்னட சினிமா உலகில் சுமார் 15 பேர் போதைப்பொருட்களை உபயோகிக்கிறார்கள் என வெளிப்படையாக அறிவித்ததுடன், காவல்துறையிலும் புகார் செய்தார். அவரிடம் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார், ஐந்து மணி நேரம் விசாரித்தனர்.

 

 

sss

 

இதுபற்றி இந்திரஜித் லங்கேஷை தொடர்பு கொண்டு பேசினோம். "மரீஜூவானா எனப்படும் கஞ்சா, அமெரிக்காவில் எட்டு மாகாணங்களில் மருந்து பொருள் போல உபயோகிக்கப்படுகிறது. அந்த போதை அப்படியே இந்தியாவிற்குள் வந்துவிட்டது. ஃபேஷன் மற்றும் சினிமா ஆகிய துறைகளில் ஈடுபடுபவர்கள் மத்தியில் கஞ்சா புகைப்பது சாதாரணமான விஷயமாகிவிட்டது. கஞ்சா மட்டு மல்ல ஓ.பி.எம்., எல்.எஸ்.பி., எம்.டி.எல் .எஸ்.டி., பிரவுன்சுகர் என 200 வகை போதை மருந்துகள் திரையுலகத்தின ரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக தனித்தனி நெட்வொர்க்குகள் இருக்கின்றன. பல்வேறு நாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் இந்த போதைப்பொருட்களை திரையுலகத்தினர் அவர்கள் கையில் அதிகமாக காசு புழங்குவதால் பயன்படுத்துகின்றனர்.

 

திரையுலகத்தினர் நடத்தும் பார்ட்டிகளில் தவறாமல் போதைப் பொருட்கள் இடம்பெறுகிறது. போதைப்பொருள் பயன்படுத்தாத நடிகர்களை உடல் ரீதியாக பலமில்லாதவர்கள் என நினைக்கும்போக்கு திரையுலகில் நடக்கிறது. எனக்கு தெரிந்து கன்னடத் திரையுலகில் 15 பேர் இந்த போதைப்பொருட்களை பயன்படுத்துகிறார்கள். அதுபற்றி நான் போலீசாரிடம் தெரிவித்தேன்'' என்றார்.

 

 

sss

 

இந்திரஜித் லங்கேஷ் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்த பிறகு, பா.ஜ.க.வுக்கு மிக நெருக்கமான ராகினி திவேதி என்கிற நடிகை கைது செய்யப்பட்டார். சங்கர் என்பவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ராகினி திவேதி கைது செய்யப்பட்டார். அதன்பிறகு ராகுல் ஷெட்டி என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில் "டார்லிங்' என்கிற தமிழ்ப்பட கதாநாயகியான நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி கைது செய்யப்பட்டார்.

 

இந்த இரண்டு நடிகைகளும் கைது செய்யப்படுவதற்கு முக்கிய காரணம், அனுப் மற்றும் அங்கிதா என்கிற ஜோடிதான். ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தலூம் பெப்பர் சாண்டி என்கிற நபர் பெல்ஜியம் நாட்டில் இருந்து கடத்திக்கொண்டு வரும் போதைப் பொருட்களை அனுப் மற்றும் அங்கிதா, ராகுல் ஷெட்டி மற்றும் சங்கர் மூலம் ராகிணிக்கும், சஞ்சனா கல்ராணிக்கும் கொடுத்தார்கள். இதுவரை இரண்டு நடிகைகள் உள்பட 19 பேரை கைது செய்த பெங்களூரு மாநகர போலீசார். அங்கிதா- அனுப் ஜோடி கர்நாடகாவில் மட்டும் போதைப் பொருட்களை சப்ளை செய்யவில்லை. கேரளாவிலும் அவர்களது திருவிளையாடல்கள் தொடர்ந்ததை மத்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை கண்டுபிடித்தது. கேரள உள்துறை அமைச்சரான கொடியேரி பாலகிருஷ்ணனின் மகன் தினேஷ் கொடியேறிக்கும் அனுப்புக்கும் நெருங்கிய நட்பு இருந்தது. தினேஷ் கொடியேறி, அனுப்பின் வங்கிக் கணக்கில் ஆறு லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் கொடுத்திருந்தார். அவரை மத்திய போதை தடுப்புப் பிரிவு போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த அனுப்புக்கும் தங்க கடத்தலில் சிக்கிய ஸ்வப்னா சுரேஷுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது மத்திய அரசு அதிகாரிகளின் விசாரணை புள்ளியாக இருக்கிறது. கேரளாவை ஆளும் கம்யூ னிஸ்ட் அரசுக்கு எதிராக ஏதாவது சிக்காதா என கண்ணில் விளக்கெண்ணை விட்டு ஆராய்ந்து கொண்டிருந்த மத்திய அரசின் அதிகாரிகளுக்கு, காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதையாகிவிட்டது இந்த போதை விவகாரம்.

 

ddd

 

இதுபற்றி மத்திய போதைத்தடுப்பு அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்தோம். இந்த போதைப் பொருள் விவகாரம் தமிழக திரையுலகமான கோலிவுட், தெலுக்கு திரையுலகமான டோலிவுட் ஆகியவற்றிற்கும் தொடர்பு இருக்கிறது. போதைப்பொருள் என்பது ஒரு மிகப்பெரிய சர்வதேச வணிகம். ஓ.பி.எம் என்கிற போதைப் பொருளை ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தி வருவதுதான் தாலிபான்களின் தொழில். விலை உயர்ந்த துப்பாக்கிகளை வாங்குவதற்கு உலகில் இயங்கும் பல்வேறு தீவிரவாத குழுக்கள் போதைப்பொருட்களை கடத்துவதைத்தான் ஆயுதமாக பயன்படுத்தி வருகின்றன. ஆசிய நாடுகளான இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகியவற்றில் போதைப்பொருள் கடத்தலுக்கு சரியான மார்க்கெட் இருக்கிறது.

 

ddd

 

இந்தியாவில் இந்த போதைப் பொருட்களின் தலைநகராக இருப்பது கோவா மாநிலம். அங்கிருந்து மும்பைக்குள் நுழைந்து மேற்கு கடற்கரை ஓரமாக கர்நாடகா, கேரளா என கடல் வழியாக போதைப்பொருட்கள் கடத்தப்படுகின்றன. பல சமயங்களில் அவை சாலை மார்க்கமாக ஆந்திரா, தமிழ்நாடு போன்றவற்றை வந்தடைகிறது. இதுவரை சுற்றியுள்ள சினிமா நட்சத்திரங்கள் மற்றும் தினேஷ் கொடியேறி போன்ற வலுவான அரசியல்வாதிகளின் பிள்ளைகள் ஆகியோரின் நெட்வொர்க்கை ஆராய்ந்ததில் தமிழகமும் அந்த போதைக்கடத்தல் கும்பலின் நெட்வொர்க்கில் இருக்கிறது. சென்னையில் குறிப்பாக கல்லூரி மாணவர்கள், சினிமா நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் ஆகியோர் இந்த போதை வளையத்தில் சிக்கியிருக்கிறார்கள்.

 

dd

ஒரு பாடலாசிரியரின் இரண்டு மகன்கள் தமிழ் சினிமாவில் டைரக்டராகவும், நகைச்சுவை நடிகராகவும் இருக்கிறார்கள். அவர்கள் தலைமையில் பெண்கள் பட்டாளமே தமிழ் சினிமாவில் இந்த போதைப் பழக்கதிற்கு அடிமையாக இருக்கிறது. அஷ்டவதானி எனப் பெயர் பெற்றவரின் மகன் போதைக்காக அடிக்கடி லண்டன் சென்று வருகிறார். பிரபலமான ஒரு இளம் இசையமைப்பாளர் இந்த போதைக்கும்பலின் தொடர்பில் உள்ளார். இவையெல்லாம் ஆரம்பக்கட்ட தகவல்கள்.

 

இந்த போதைக் கடத்தல் கும்பலின் முக்கியப் புள்ளிகளான அனுப் மற்றும் அங்கிதா ஆகியோரை தீவிரமாக விசாரித்து வருகிறோம். அவர்கள் வரும் நாட்களில் தமிழ் திரையுலகமான கோலிவுட் பற்றியும் தெலுங்கு திரையுலகமான டோலிவுட் பற்றியும் மலையாள திரையுலகமான மல்லுவுட் பற்றியும் வாய் திறப்பார்கள். அதன்பிறகு நாங்கள் தமிழகத்திலும் ஆந்திராவிலும் கேரளாவிலும் பாய்வோம். இந்தி திரையுலகத்திலும் இதுவரை சிக்காத புள்ளிகளையும் கங்கனா ரணாவத் சொன்னதன் அடிப்படையில் கைது செய்வோம். இந்தியா முழுவதும் இந்த போதைக் கடத்தல் கும்பல்கள்தான் தங்கக் கடத்தல் கும்பலைப்போல தீவிரவாதத்தை வளர்த்து வருகின்றன. இதை நாங்கள் நிச்சயமாக முறியடிப்போம் என்கிறார்கள்.