Skip to main content

இதேநிலை நீடித்தால் அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகளும்... பொங்கலூர் மணிகண்டன் பேட்டி..!

Published on 30/09/2020 | Edited on 01/10/2020

 

 PONGALUR MANIKANDAN - eps - ops

 

கூட்டணிக் கட்சிகள் அ.தி.மு.க தலைமை மீது கடும் அதிருப்தியில் உள்ளதாக, அரசியல் விமர்சகர் பொங்கலூர் மணிகண்டன் கூறியுள்ளார்.

 

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பாக, அ.தி.மு.க.வில் எழுந்துள்ள பிரச்சனை குறித்து பொங்கலூர் மணிகண்டன் கூறுகையில், 

 

அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில், கடந்த செப்.,28ல் செயற்குழுக் கூட்டம் நடந்தது. இதில் அ.தி.மு.க.வினர் அனைவரும் ஒன்றுபட்ட சிந்தனையோடு, ஒற்றுமையாய்ப் பணியாற்றி, தமிழ்நாட்டில் மீண்டும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் ஆட்சி மலர்ந்திட அயராது உழைப்போம் எனத் தீர்மானம் நிறைவேற்றினார்கள். 

 

தீர்மானம் நிறைவேற்றிய சிறிது நேரத்தில், முதல்வர் வேட்பாளர் குறித்து கடும் விவாதம் நடந்துள்ளது. தற்போதைய நிலையில் கொங்கு மண்டலத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அதிகமாக இருக்கிறது. மற்ற இடங்களிலும் ஆதரவை பெற்றுள்ளார் எடப்பாடி. ஓ.பன்னீசெல்வமும் அவர் பகுதியில் ஆதரவை திரட்டியுள்ளார். அவர் தர்மயுத்தம் நடத்தியபோது இருந்த ஆதரவு இப்போது இல்லை. 

 

இருந்தாலும் இவர்களுக்குள் தற்போது நடக்கும் இந்த மோதல் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தும். தி.மு.க மிகவும் எளிமையாக ஆட்சிக்கு வந்துவிடும். தி.மு.க நல்லதொரு வெற்றிபெற்று ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பை இவர்கள் உருவாக்கியுள்ளனர். 

 

ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் ஆகிய இருவருக்கும் நடக்கும் பஞ்சாயத்து அ.தி.மு.க.வினருக்கு மட்டுமல்ல, ஓட்டு போடும் சாமானிய மக்கள் வரைக்கும் சென்றுள்ளது. பதவிக்காக அடித்துக் கொள்கிறார்கள் என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள். இந்த சலசலப்பு தேர்தலில் மிகப்பெரிய அளவில் எதிரொலிக்கும். அ.தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் அ.தி.மு.க தலைமை மீது கடும் அதிருப்தியில் உள்ளது. இதேநிலை நீடித்தால் அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகளும் படுதோல்வியைச் சந்திக்கும். 

 

Ad

 

அ.தி.மு.க தைரியமாக தேர்தலை சந்திக்க வேண்டும் என்றால், இப்போது உள்ளவர்கள் ஒற்றுமையாக இருப்பதுமட்டுமல்ல, சசிகலாவும் இணைய வேண்டும். பா.ஜ.க கூட்டணியில் இருந்தும் வெளியே வர வேண்டும். பா.ஜ.க கூட்டணியில் அ.தி.மு.க இருந்தால் நிச்சயம் தோல்விதான்.

 

பா.ஜ.க கூட்டணியில் இருப்பதை தாங்கள் விரும்பவில்லை என்று சில அ.தி.மு.க அமைச்சர்களே என்னிடம் தனிப்பட்ட முறையில் பேசும்போது சொல்கின்றனர். இவ்வாறு கூறினார்.