கஜா புயலின் கோரத்தாண்வத்தினால் டெல்டா மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான மின் கம்பங்கள் சரிந்துள்ளன. பெரும்பாலான மின்கம்பங்கள் வயல்களில் விழுந்துள்ளன. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மின் ஊழியர்கள் அவற்றை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
உணவு அருந்தக்கூட நேரம் இல்லாமல் அவர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அம்மாவட்டங்களில் தொடர்ந்து அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலையிலும் மின்வாரிய பணியாளர்கள் சாலையில் இருந்து 200 மீட்டர் தூரத்திற்கும் மேல் மிகுந்த சிரமத்திற்கு இடையில் மின்கம்பங்களை எடுத்துச்சென்று குழிபறித்து ஒவ்வொரு மின்கம்பமாக நட்டு வருகின்றார்கள்.
நாகப்பட்டிணத்திலல் மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட ஊழியர் ஒருவர், சாப்பிடக்கூட நேரம் இல்லாமல் மின்கம்பத்தின் மேலே உட்கார்ந்தப்படியே உணவருந்தினார். இந்தக் காட்சி இணையத்தில் தீயாக பரவி பலரையும் மெய்சிலிக்க வைத்துள்ளது. மின்வாரிய ஊழியர்களை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பாராட்டியுள்ளனர். சமூக வலைதலங்களிலும் அவர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
மழை தூறல்களுக்கு மத்தியில் காலை முதலே, கஜா புயல் பாதித்த கிராமங்களுக்கு மின் இணைப்பு கொடுக்க வயலில், சேற்றில், தண்ணீரில் இறங்கி, உயிரை பணயம் வைத்து சேவையாற்றிய மின்சார ஊழியர்களை இன்று காலை நாகை எம்எல்ஏவும், மஜக பொதுச்செயலாளருமான தமிமுன் அன்சாரி சந்தித்து நலம் விசாரித்தார்.
அவர்களுக்கு பிஸ்கட் பாக்கெட்டுகளை கொடுத்து, அவர்களின் தேவைகளை கேட்டறிந்தார். அப்போது அவர்களை, கஜா புயலின் பாதிப்பை நிவர்த்தி செய்யும், கதாநாயகர்கள் நீங்கள் தான் என பாராட்டி உற்சாகப்படுத்தினார்.
நாங்கள் ஒப்பந்த தொழிலாளர்களாக மட்டுமே இருப்பதாகவும், தங்களை பணி நிரந்தரம் செய்ய சட்டமன்றத்தில் பேசுங்கள் எனவும் மின் ஊழியர்கள் தமிமுன் அன்சாரியிடம் கோரிக்கை வைத்தனர். எங்கள் பகுதி மக்களுக்காக அயராது பாடுபடும் உங்களுக்காக, நிச்சயமாக குரல் கொடுப்பேன் என அவர்களிடம் தெரிவித்தார்.
இதனிடையே கடந்த 16ஆம் தேதி நாகையை சேர்ந்த வயர்மேன் சண்முகம் என்பவர் சீரமைப்பு பணியின்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். 20ஆம் தேதி புதுக்கோட்டையில் மின் கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நாமக்கல்லைச் சேர்ந்த முருகேசன் என்பவர் மின்சாரம் தாக்கி கீழே விழுந்த நிலையில் அவர் மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுதொடர்பாக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், சீரமைப்பு பணியின்போது உயிரிழந்த சண்முகம், முருகேசன் ஆகியோர் குடும்பத்துக்கு நிவாரண நிதியாக தலா ரூபாய் 15 லட்சம் வழங்கப்படும். அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு நிறுவனத்தில் வேலை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.