உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 19 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 300-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 10,000-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக சமூக ஆர்வலர் பியுஷ் மனுஷ் தெரிவித்துள்ளதாவது,
கரோனா தொற்றில் மராட்டியம், மத்திய பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் இத்தாலி, சீனாவுடன் போட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இறப்பு விகிதம் என்பது அந்த நாடுகளுக்கு உள்ளதைப் போன்றே இந்த மாநிலங்களில் இருக்கிறது. கேரளா, தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் இறப்பு சதவீதம் என்பது கட்டுக்குள் இருக்குகிறது. இது நமக்கு ஆறுதல் தருகின்ற ஒரு செய்தி ஆகும். கேரளாவை பொறுத்த வரையில் இறப்பு விகிதத்தை விட பாதிக்கப்படுபவர்களின் விகிதத்தையே அவர்கள் வெகுவாகக் குறைத்துள்ளார்கள். தமிழ்நாடு அந்த நிலமைக்கு வருமா என்று கொஞ்சம் பேசுவோம். கேரளா, தமிழ்நாடு என்ன செய்கிறார்கள், மத்திய பிரதேசம், குஜராத், மராட்டியம் முதலிய மாநிலங்கள் என்ன செய்யாமல் இருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும்.
எனக்கு இந்தச் செய்தியை அரசு மருத்துவர்கள் சொல்லவில்லை, சிகிச்சையில் இருக்கும் நபர்களிடம் இருந்து வந்த தகவலின் அடிப்படையில் சொல்கிறேன், அலோபதி மருந்தைத் தவிர இஞ்சி, தேன் முதலியவற்றைப் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தொடர்ந்து காலையில் கொடுத்து வருகிறார்கள். அதையும் தாண்டி கப சுர குடிநீரை அவர்களுக்கு கொடுக்கிறார்கள். அது நல்ல பலனளிப்பதாகக் கூறுகிறார்கள். கேரளாவும் ஆயுர்வேத முறையை உள்வாங்கிக் கொண்டுள்ளார்கள். அங்கே யாராக இருந்தாலும் தொற்று இருந்தால் அவர்கள் நோயாளியாகத்தான் பார்க்கப்படுகிறார்கள்.
அவர்களை இந்து, முஸ்லிம், ஜாதி, தப்லீக் ஜமாத் மாநாட்டுக்குச் சென்று வந்தவர்கள் என்று பிரித்து பார்ப்பதில்லை. அதே போன்று அனைவரும் இருக்க வேண்டும். கரோனாவில் அரசியல் என்பது மக்கள் உயிருடன் விளையாடுவதற்குச் சமம். தமிழ்நாட்டைப் பொறுத்த வரைக்கும் நாம் நன்றாக வாய்ப்பு கொடுத்துவிட்டோம். அதைத் தவிர்க்க வேண்டும். அனைவரும் இஞ்சி, தேன், துளசி முதலியவற்றைச் சாப்பிடுவதற்கு முயற்சி செய்யுங்கள். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் உணவுப் பொருட்களைத் தொடர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள்.