‘மேலை நாடுகளின் பொருளாதாரத்தை உயர்த்தும் நெல்லை மல்லிகை’ இந்தத் தலைப்பு ஆச்சர்யமாகத் தான் தோன்றும். காரணம் தமிழகத்தின் நெல்லை மல்லிகை நாடு தாண்டுமா என்கிற சந்தேகம் தானே. ஆம் தாண்டுகிறது என்று அடித்துச் சொல்கிறார்கள் நெல்லை மாவட்டத்தின் சங்கரன்கோவில் நகரின் பூ மார்க்கெட் சந்தையின் மொத்த வியாபாரிகள்.
இன்று நேற்றல்ல சுமார் அறுபது வருடங்களுக்கு மேலாக இந்த மொத்த மார்க்கெட்டின் அனைத்துப் பூ வகைகளும் பக்கத்திலிருக்கிற கேரளா பார்டர் வழியாகக் கேரளாவின் கொல்லம் புனலூர் சந்தை வரை சென்று அங்கு விற்பனையாகி வந்தன. அண்மைக் காலமாகத்தான் தினசரி திருவனந்தபுரம் சர்வதேச ஏர்ப்போட்டிற்கு அனுப்பப்பட்டு ப்ளைட் மூலமாக சிங்கப்பூர், மலேசியா, துபாய் என்று பல நாடுகளுக்கு அன்றாடம் பறக்கிறது. ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதனைக் கொண்டு அங்கு மணம் பரப்புகிற தரமான வாசனை சென்ட் தயாரிக்கப்பட்டு டிமாண்ட்டாக மார்க்கெட்டிங் செய்யப்படுகிறது என்கிறார் மொத்தச் சந்தை வியாபாரிகளில் ஒருவரான முருகன். இப்போது சொல்லுங்கள் அந்தத் தலைப்பு பொருத்தம் தானே.
திருவனந்தபுரத்திலிருந்து மதியம் சரியாகப் பனிரெண்டு மணியளவில் கிளம்புகிற சர்வதேச விமானத்தைப் பிடிப்பதற்காகச் சங்கரன்கோவிலிருந்து பூ லோடு வாகனங்கள் அரக்கப் பறக்கின்றன. பூக்களின் மூட்டைகளை லோடு செய்வதற்காக தினந்தோறும் அதிகாலை ஆறு மணி முதல் பரபரக்கின்றார்கள். காரணம் நிமிடம் போனால் ப்ளைட் பறந்திடும். அப்புறம் பூக்களை எங்கே கொண்டு செல்வது. அத்தனை பூ மூட்டைகளையும் குப்பையில் தான் கொட்டவேண்டும் மொத்தப் பணமும் நட்டம் தான். இதில் கரணம் தப்பினால் தலையில் துண்டைப் போடுகிற நிலையாகிவிடும். அதனால் தான் வாகனங்களின் டிரைவர்கள் ஏர்போர்ட்டை அடைய உயிரைப் பணயம் வைத்து ரிஸ்க் எடுக்கிறார்கள். உரிய நேரத்தில் பூலோடு வெளிநாடுகளைச் சென்றடைந்தால்தான் அவைகள் வாடுவதற்கு முன்பாக அதிலிருந்து வாசனை சென்ட் தயாரிக்க முடியும் என்கிறார் முத்தையா.
வாகனத்தில் கொண்டு போகப்படுகிறது. இதிலென்ன பரபரப்பிருக்கிறது என்று சொல்லத்தானே வருகின்றீர்கள். என நம்மிடம் எதிர் கேள்வியை வைத்த டிரைவர் ரவிச்சந்திரன், சரியான நேரத்திற்குள்ளாகச் சென்றடைந்து விடவேண்டுமென்றுதான் நாங்கள் ஸ்டீரியங்கைப் பிடிக்கிறோம். சாலையில் கண்களைப் பதியவைக்கிறோம். நேரம் தவறக்கூடாது என எப்போதும் உயர் ரத்த அழுத்தத்தோடிருக்கும் எங்களுக்கு அந்த லோடுகளைக் கொண்டு செல்கிறபோது பார்டர் செக்போஸ்ட்களில், வழியோரங்களில் எத்தனை தொல்லைகள் தெரியுமா?.
அதிகாலையில் ஐந்து மணிக்குள்ளாக தேனி, ராஜபாளையம் தேவாரம் நெல்லை போன்ற பகுதிகளிலிருந்து ஏற்றுமதிக்கான பூக்கள் வந்திறங்கிவிடும். அதோடு சங்கரன்கோவில் மார்க்கெட்களுக்கு விளைவிக்கிற பூ விவசாயிகளும் அவைகளைக் கொண்டு வந்து விடுவார்கள். உடனடியாக அவைகள் மார்க்கெட்டில் ஏலம் விடப்பட்டு அன்றாடம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு பேக்கிங் ஆனவுடன், காலை 6 மணிக்குள்ளாக லோடுகள் கிளம்பியாக வேண்டும். லோடுகளைக் கொண்டு செல்வதற்காக ஐம்பது முதல் அறுபது வாகனங்கள் நித்தம் ஈடுப்பட்டுள்ளன. நாளொன்றுக்குக் குறையாமல் நாங்கள் அறுநூறு கிலோ மீட்டர் தொலைவு வரை ஸ்டீரியங் பிடிக்கிறோம். நேரம் தவறாமை வேகம் தான் முக்கியம். இவைகளில் ஏர்போர்ட் செல்லும் லோடுகளைத் தவிர மற்றவைகளை கொல்லம் புனலூர் ஆற்றிங்கல் பத்தனம்திட்டா காயங்குளம் சந்தைகளுக்குச் சரியான நேரத்தில் கொண்டு சேர்க்க வேண்டும்.
வழியோரத்திலுள்ள செங்கோட்டை, இலத்தூர், புளியரைக் காவல் நிலையங்களுக்கு மாதம் மாமூல் ரெகுலராகக் கொடுத்து விடுவதோடு மாதமொரு முறை வண்டிக்கு ஒரு கேஸ். ஓவர் ஸ்பீட் சார்ஜ் ஷீட் போடுவதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். தொல்லை அத்துடன் நின்று விடவில்லை. கேரள, தமிழ்நாடு வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு வாகனம் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் மாமூல் கொடுப்பதோடு ரெகுலராக சாராய கேஸ் போன்று மாதம் ஒரு கேஸ் கொடுத்து விடவேண்டும். பிகு பண்ணுனோம்னு வையுங்க, அபராதத்தைத் தீட்டி விடுவார்கள். இவைகளை எல்லாம் வாகன முதலாளிகளே பார்த்துக் கொள்வார்கள். பாருங்கள், நாங்கள் கட்டிய அபராதத்தையும் சார்ஜ்ஷீட்களையும் அத்தனை தொல்லைகளையும் தாண்டித்தான் இந்த மூட்டைகளின் பூக்கள் வாடாமல் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது என்றார் ஏக் தம்மில். அடுத்த நொடி அவர் அங்கில்லை. அந்த வாகனம் தரையைத் தேய்த்தபடி சீறிக் கிளம்பி விட்டது.
இவர்கள் மட்டுமல்ல. இந்த மார்க்கெட் சந்தைக்கு அதிகாலை விளைந்த பூ மூட்டைகளைக் கொண்டு வந்து சேர்க்கிற விவசாயிகள் கூட காலில் வென்னீர் ஊற்றாத குறையாக விறு விறுவென்று நிற்கிறார்கள். இந்தப் பூ மார்க்கெட் சந்தையில் பூ வகைகளை மட்டும் அடையாளம் காட்டவில்லை. நேரிடையாகவும், மறைமுகமாகவும் சுமார் 400க்கும் மேலானவர்களுக்கு வேலை வாய்ப்பாகவும் இருப்பதோடு கணிசமான அளவு ஊதியமும் கிடைப்பதாகச் சொல்கிறார் பணியாளர் செல்லையா.
பரபரப்பாகச் செயல்படுகிற சங்கரன்கோவில் நகர பெரிய ஆலயத்தின் ஒரு பகுதியில் அமைத்திருக்கிற அந்தப் பூ மார்க்கெட் சந்தையின் உள்ளே நுழைந்த போதே வாசனை ஆளைத் தூக்குகின்றது. காலை 6 மணி தொடங்கி 10 மணிக்குள்ளாக அதிகாலை வயல் வெளிகளில் பயிரிட்டுள்ள பூஞ் செடிகளிலிருக்கும் பூக்களை பறித்துக் கொண்டு மார்க்கெட்டிற்கு வாகனங்களில் பறந்து வரும் விவசாயிகள் ஏராளம். ரோஜா, மல்லிப்பூ, பிச்சி, கேந்தி, சேவல்கொண்டை, பச்சைமல்லி, அரளி, சம்பங்கி என 16க்கும் மேற்பட்ட வகை வகையாக விளைந்த பூக்கள் சந்தைக்குக் கொண்டு வரப்பட்டு அங்குள்ள 34 கமிசன் கடைகளின் மூலமாக அன்றாட மொத்த விலை நிர்ணயிக்கபட்டு லோக்கல் மற்றும் வெளி மாநிலப் பார்ட்டிகளுக்கு விற்கப்படுகின்றன. ஒவ்வொரு கடைக்கும் சுமார் 300 முதல் 400 விவசாயிகள் தங்களின் பூக்களை விற்பனைக்காகத் தரும் ரெகுலர் பார்ட்டிகளைாக உள்ளனர்.
தோராயமாகப் பார்த்தால் சங்கரன்கோவிலின் 15 கிலோ மீட்டர் சுற்றளவிலிருக்கும் கிராமங்களிலுள்ள சுமார் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பூக்களைச் சாகுபடி செய்கிறார்கள். சாதாரணமாக பணப்பயிர் உணவுப்பயிர் சாகுபடிக்காக செலவாகும் தண்ணீரை விட 70 சதம் குறைவான தண்ணீரிலேயே இந்தப் பூக்கள் சாகுபடிக்குப் போதும் என்பதோடு சொட்டு நீர்ப் பாசானமும் பயனளிக்கும் என்பதால், வறட்சியிலும் பூஞ்செடிகள் தாக்குப்பிடிப்பதால் விவசாயிகள் இந்தச் சாகுபடியில் ஆர்வம் காட்டுகிறார்கள். மழைக் காலங்களில் பூ விளைச்சல் அதிகமிருப்பதால் விலை சுமாராகத்தானிருக்கும் வறட்சியில் விளைச்சல் குறைவு என்பதால் நல்ல விலை கிடைக்கும். எனவே இரண்டையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் சராசரி வருமானம் தான். தண்ணீர் மற்றும் பூ பறிப்பதற்கான ஆட்கள் பற்றாக்குறை, அதிக கூலி, அத்தோடு வாரத்திற்கு ஒரு விலையை வைக்கிறார்கள் உர விற்பனையாளர்கள். இந்தக் கணக்குகளைப் பார்த்தால் எங்களுக்கு உழக்குக் கூட மிச்சமில்லை. எங்களிடம் கொள்முதல் செய்கிற வியாபாரிகளுக்குக் கிடைக்கிற 12 சதம் கமிசன் அளவு லாபம் எங்களுக்கு இல்லை. அவர்களுக்கு வெள்ளத்திற்கு மேல் தோணி. ஊராரை வாசனைப் படுத்துகிற எங்கள் பிழைப்பில், அத்தனை வாசமில்லை. ஏதோ வயிற்றுப்பாடு கழிகிறது. யதார்த்தத்தைச் சொல்கிறார் புளியம்பட்டி பூ சாகுபடி விவசாயியான துரை.
சாதாரணமாகத் தினசரி 36 லட்சம் ரூபாய் வரை மதிப்பிலான பூக்கள் இந்தச் சந்தையிலிருந்து விற்கப்பட்டு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. என்கிற இந்தப் பூ மார்க்கெட் மொத்தச் சந்தையின் சங்கத் தலைவரான அருணாசலம் சொல்லும் தகவல்கள் விழிகளை விரிய வைக்கின்றன. சீசன் இல்லாத நாட்களில் கிலோ 30 முதல் 2800 ரூபாய் வரை விற்கப்படும் பூக்கள், முகூர்த்தம் பங்குனி, வைகாசி மாதங்கள் மற்றும் கேரளாவின் ஆவணி ஓணம் போன்ற தினங்களில் மூன்று நான்கு மடங்காக உயர்ந்து ஒரு கோடி ரூபாய் அளவுக்கு சேல்ஸ் ஏறிவிடும் தென் மாவட்டம் மட்டுமல்ல தமிழகத்திலேயே இந்தப் பூ மார்க்கெட்தான் பெரியது. விலை நிர்ணயமும் செய்யக்கூடியதாகவும் இருக்கிறது. குறிப்பாக மதுரையின் ஜாதி மல்லிகையை விட இங்கு விளையும் மல்லிகை, பிச்சிப் பூக்கள் தரம் கொண்டவை. முதல் தரம் கொண்ட செண்ட் தயாரிக்க உதவுபவை. காரணம் தண்ணீர், தென் மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து வீசுகிற சீதோஷ்ணம் கொண்ட காற்று அதனால் தான் மல்லிகைப் பூ, மற்றும் பிச்சிப் பூ சீசன் காலங்களில் கிலோ எட்டாயிரம் விலை வரை ஏறி விடுகிறது என்கிறார்.
பூக்களின், மங்களகரமான மணம் பரப்புகிற தெய்வாம்சத்தில், அதை விளைவிக்கிற விவசாயிகளின் அரும்பாடு, கஷ்ட நஷ்டம் தெரியாமல் போவதும் நெருடல் தான்.