Skip to main content

"நாங்குநேரியில் சாதி ஓட்டுக்கள் 'கை' கொடுக்குமா? வாட்ஸ் அப் ஆடியோவால் பரபரப்பு...

Published on 03/10/2019 | Edited on 03/10/2019

 

நாங்குநேரியில் வெற்றி தோல்வியை தீர்மானிப்பவர்கள் அங்கு மெஜாரிட்டியாக இருக்கும் நாடார் சமூகத்தினர் தான். இதனால் அதிமுக, காங்கிரஸ் என 2 பிரதான கட்சிகளும் நாடார் சமூகத்தினரை களம் இறக்கி உள்ளது. அதிமுக வேட்பாளர் நாராயணன் இந்து நாடார். காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் கிறிஸ்தவ நாடார். இது தவிர ராக்கெட் ராஜாவின் 'பனங்காட்டு படை' சார்பில் ஹரி நாடாரும் களம் இறங்கி உள்ளார். 

 

nanguneri



இப்போது, ஹரி நாடாருக்கு எதிராக அவரது சமூகத்திலேயே கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. "சிங் நாடார் அதன்பிறகு ராஜ் நாடார் உடன் கொஞ்ச நாள், அப்புறம் சுபாஷ் பண்ணையார் கூட கொஞ்ச நாள், இப்போது ராக்கெட் ராஜாவுடன் சுற்றித்திரியும் ஹரி நாடாருக்கும், நாடார் சமூகத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது?" என கேள்வி எழுப்பி உள்ளார் கோழி அருள். 

 

hari


 

கோழி அருள் வாட்ஸ் அப் மூலம் வெளியிட்டுள்ள உரையாடலில், "ஜாதிக்காக கட்சி நடத்துவதாக சொல்லும் ராக்கெட் ராஜா, 1990 கால கட்டத்தில் கராத்தே செல்வினின் ஆரம்பித்த கட்சியை வழி நடத்தி இருக்க வேண்டும். அல்லது செல்வின் கூட இருந்த நாராயணன் இப்போது அதிமுக வேட்பாளராக நிற்கிறார். அவருக்கு தான் ஆதரவு அளிக்க வேண்டுமே தவிர, ஒவ்வொருத்தரிடமும் சென்று பிரிவினையை ஏற்படுத்திய ஹரி நாடாருக்கு ஆதரவு அளிக்கலாமா? செல்வின் படத்தை வைத்து ஓட்டுக் கேட்கலாமா?"என்று கேள்வி எழுப்பி உள்ளார்.


 

சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியில் இருந்த எர்ணாவூர் நாராயணன் (இப்போது சமத்துவ மக்கள் கழகம்) 2011-ல் அதிமுக கூட்டணியில் நின்று நாங்குநேரி தொகுதியில் வென்றார். இம்முறை சமத்துவ மக்கள் கட்சி அதிமுக கூட்டணியில் இருப்பதால் நாடார் சமூக வாக்குகளை முழுமையாக அறுவடை செய்யலாம் என்பது ஆளுங்கட்சியின் திட்டம். ஆனால், அதற்கு செக் வைக்கும் வகையில் ஹரி நாடார் களம் இறங்கி உள்ளதால் ஓட்டுக்கள் சிதறும். இது காங்கிரசுக்கு 'கை' கொடுத்துவிடும். இதனாலேயே பனங்காட்டு படை கட்சிக்கு எதிராக கோழி அருளை ஆளுந்தரப்பே கொம்பு சீவி விடுவதாகவும் பேச்சு அடிபடுகிறது. 
 

யார் இந்த 'கோழி' அருள்?
 

பாளையங்கோட்டை பெருமாள்புரம் தாமஸ் தெருவைச் சேர்ந்த தேவராஜ், பூபதி தம்பதியரின் மகன் தான், ‘கோழி’ அருள். இவருடைய அண்ணன் பெருமாள்புரம் பகுதியில் கோழிக்கடை வைத்திருந்தார். அந்தப்பகுதியில், ஏற்கெனவே அருள் என்பவர் சிறிய தாதாவாக உலா வர, இவரை வித்தியாசப்படுத்திக் காட்ட,‘கோழி’ அருள் என்று அவரது சகாக்கள் கூப்பிட ஆரம்பித்தனர். 


 

நாசரேத் கபிலன், கராத்தே செல்வின் போன்றோரின் பாசறையில் முக்கியப் பங்கு வகித்த ‘கோழி’ அருள் பின்னர் வெங்கடேச பண்ணையாரின் அணியில் இடம் பிடித்தார். 2006-ல் பசுபதி பாண்டியனின் மனைவி ஜெஸிந்தா பாண்டியன் கொலை வழக்கிலும், 2012-ல் பசுபதி பாண்டியன் கொலை வழக்கிலும் 'கோழி' அருள் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.  கோழி அருள் மீது 7 கொலை வழக்குகள், 5 கொலை முயற்சி வழக்குகள் உள்பட 19 வழக்குகள் உள்ளன.