Skip to main content

“அதானிக்காக எரிக்கப்படும் மணிப்பூர்” - ஆண்டாள் பிரியதர்ஷினி

Published on 22/07/2023 | Edited on 22/07/2023

 

Manipur issue Andal Priyadharshini blaming bjp

 

மணிப்பூர் வீடியோ விவகாரத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, பிரதமர் மோடி உள்ளிட்டோர்களின் கருத்து குறித்து தி.மு.க  மாநிலச் செய்தி தொடர்பு துணைத் தலைவர் ஆண்டாள் பிரியதர்ஷினி  நமக்கு அளித்த பேட்டி;

 

குற்றவாளிகளைக் கண்டிப்பாக நீதிமன்றம் முன் நிறுத்துவோம் என்று ஸ்மிருதி இராணி கூறுகிறாரே?


பிரிஜ் பூஷண் என்ன புனிதராக இருந்தாரா?. பிரிஜ் பூஷண் மீது நம் வீராங்கனைகள் எத்தனை மாதமாக கதறிக்கொண்டு குற்றச்சாட்டு வைத்தார்கள். இப்பொழுது தான் அவருக்கு எதிராக 1000 பக்கத்தில் குற்றப்பத்திரிக்கை கொடுத்திருக்கிறார்கள். அவரை என்ன செய்து விட்டார்கள். இவர்களை எல்லாம் பாதுகாப்பது அல்லது இப்படி வன்புணர்வு செய்தவர்களை கையில் விளக்கேற்றி வரவேற்பது தான் இவர்களுடைய வேலையாக இருக்கிறது என்பதை 9 வருடமாக நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இனிமேல், இவர்கள் பொய் சொன்னால், மக்கள் அவர்களை நம்பத் தயாராக இல்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  அதுமட்டுமல்லாமல், சுமிருதி ராணி தற்போதுதான் வாய் திறந்து கண்டனத்துக்குரியது என்று சொல்கிறார். ஏன் இவ்வளவு மாதமாக என்ன செய்தார்.

 

Manipur issue Andal Priyadharshini blaming bjp

 

தேசிய ஜனநாயக கூட்டத்தில், ‘நான் தவறுகள் செய்திருப்பேன் ஆனால் உள்நோக்கத்தோடு எந்தத் தவறும் செய்யவில்லை’ என்று பிரதமர் கண்ணீர் விட்டு அழுது பேசுகிறார். எதற்காக அவர் அழ வேண்டும். இந்த 9 வருடத்தில் ஏதாவது ஒரு நல்ல காரியம் செய்திருந்தால் பொது மக்களே உங்களுக்கு ஆதரவு தந்திருப்பார்கள். எதையுமே அவர் செய்யவில்லை. இப்பொழுது மணிப்பூர் பிரச்சனைக்கு காரணம் என்னவென்றால், அங்குள்ள வளங்களை, சுரங்கங்களை தன்னுடைய நண்பர் அதானிக்கு அள்ளிக் கொடுக்க வேண்டும். மணிப்பூரை அதானிக்கு எழுதிக் கொடுக்க வேண்டும். அதற்காக செய்யக்கூடிய சூழ்ச்சி தான் இந்த பிரச்சனை. ஆனால், மக்கள் விழித்துக் கொண்டார்கள். இந்திய மக்கள் இனிமேல் ஏமாறத் தயாராக இல்லை. 

 

நாங்கள் சொல்லுகின்ற குற்றச்சாட்டுக்கு  நீங்கள் உண்மையான பதிலைச் சொல்லுங்கள். அதன் பிறகு, நீங்கள் சொல்லுவதைக் கேட்க வேண்டுமா? வேண்டாமா? என்று நாங்கள் யோசிக்கிறோம். அதிலும், அந்த எளிய பெண்கள் எதை நோக்கி அவர்கள் குரல் கொடுக்க முடியும். இந்த 21ம் நூற்றாண்டிலும் கூட அந்த காணொளியில் இருக்கும் வன்புணர்வு செய்தவனை ஏன் இன்னும் வெளி கொண்டு வரமாட்டிக்கிறோம். அவனுக்குத் தான் இது அவமானம் என்ற மாற்றுச் சிந்தனை ஏன் நமக்கு வரவில்லை. அவர்களை நிற்க வைத்து காரித் துப்ப வேண்டும் அல்லது இஸ்லாமியர்கள் தேசங்களில் இருப்பது போல் கல்லால் அடித்துக் கொள்ள வேண்டும் என்ற தண்டனையை வழங்க வேண்டும்.

 

அதைச் செய்யாமல்,  இவன் மேல் வழக்கு தொடர்ந்து அது பல காலமாக இழுத்து அதன் பிறகு அவன் மேல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, ஜாமீன் வாங்கி இப்படியான ஒரு டிராமா தான் நடக்கப் போகிறது. போக்ஸோ சட்டம் என்று சொல்கிறார்கள். எந்த வழக்கில்  உடனடியாக அவர்கள் தீர்ப்பை கொடுத்திருக்கிறார்கள். பிரிஜ் பூஷணை இன்னமும் காப்பாற்றி தான் வைத்திருக்கிறார்கள். காரணம், உத்தர பிரதேச மாநிலத்தில்  அவர் எம்.பி.யாக இருக்கிறார். அவரது செல்வாக்கில் 6 தொகுதிகளில் இருக்கக்கூடிய வாக்கு வங்கி அவரை வைத்து தான் கிடைக்கப் போகிறது என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். அவர்கள் 6 தொகுதியை மட்டும் நினைக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் இருக்கக்கூடிய அத்தனை தொகுதிகளில் அவர்கள் வாக்குகளை இழப்பார்கள்.

 

அதையும் தாண்டி, இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லாம் நேர்மையாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் இல்லை. ஒவ்வொரு மாநிலத்தில் இருக்கக்கூடிய கட்சிகளை எல்லாம் உடைத்து, அவர்கள் செய்த  சகுனி சூழ்ச்சியை மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள். அதில் கூடுதலாக இப்போது இருக்கக்கூடிய மணிப்பூர் பிரச்சனை கூட அவர்கள் உருவாக்கியது தான்.

 

என்னுடைய  மணிப்பூர் நண்பர்கள் எல்லாரும், அங்கு படைப்பாளிகளாகவும், கவிஞர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களிடம் நான் கள நிலவரத்தை கேட்டு கொண்டு தான் இருக்கிறேன். அதில், ‘நாங்கள் நிம்மதியாக தான் இருந்தோம். இவர்கள் செய்த அரசியல் சூழ்ச்சியால் தான் எங்களுக்குள் பிரச்சனையை உண்டாக்குகிறார்கள். இதை எங்களுடைய பிரச்சனை என்பது போல் அவர்கள் விலகி நிற்கிறார்கள். பிரச்சனையை உருவாக்கியது ஒன்றிய அரசும், இங்கு இருக்கக்கூடிய மாநில அரசும் தான்’ என்று அவர்கள் தெளிவாக சொல்கிறார்கள். 

 

இவர்கள் எப்போதுமே நெருப்பைப் பற்ற வைத்துவிட்டு பற்றி எரியும் போது பக்கத்தில் நின்று வேடிக்கை பார்ப்பார்கள். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி இருக்கும்போதுதான் பிரதமருக்கும், சுமிருதி ராணிக்கும் தெரிகிறது. எனக்கு மனசு வலிக்குது என்று பிரதமர் சொல்கிறார். பிரதமர் விதவிதமாக தொப்பி போட்டுக்கொண்டு நடிப்பார் என்று தெரியும். ஆனால் ஆஸ்கார் விருதுக்கு ஏற்றவாறு நடிப்பார் என்பதை இன்றைக்குத் தான் பார்க்கிறோம்.