சமகால அரசியல் செயல்பாடுகளைப் பற்றியும், கலைஞர் குறித்த நினைவுகளையும், திமுக மூத்த உறுப்பினர் காசி முத்துமாணிக்கம் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
கலைஞரின் இறப்பு எங்கள் அனைவரையும் மிகவும் பாதித்தது. கண்ணீர் என்பது தொடர்ந்துகொண்டே இருந்தது. மாற்றாக தளபதி கிடைத்ததால் அது இப்போது கொஞ்சம் குறைந்திருக்கிறது. ஆனாலும் தலைவர் கலைஞர் அவர்களை எப்போதும் மறக்க முடியாது. எங்களின் ரத்தத்தோடும் நரம்போடும் சதையோடும் அவர் எப்போதும் கலந்திருக்கிறார். அண்ணாவின் மறைவுக்குப் பிறகு நாவலர் உட்பட அனைவரும் கலைஞர் தான் கழகத்தை வழிநடத்த தகுதியானவர் என்கிற முடிவுக்கு வந்தனர். ஒருமுறை கூட சட்டமன்றத் தேர்தலில் தோற்காத தலைவர் கலைஞர்.
அனைத்து விதமான வெற்றி தோல்விகளையும் பார்த்தவர் கலைஞர். அனைவரையும் அரவணைத்துச் செல்பவர். வரலாற்றின் ஒரு பகுதியையே கலைஞர் எழுதினார். தன்னுடைய கடைசி காலத்தில் கூட அண்ணாவின் பெயரையே அதிகம் உச்சரித்தார். சிறிய கட்சிகளைக் கூட வாழவைத்தவர் கலைஞர். தன்னை விட்டுச் சென்ற தலைவர்களைக் கூட, அவர்கள் திரும்பி வந்த பிறகு அன்போடு அரவணைத்தவர். சாதாரண தொண்டனான என்னுடைய மனம் கூட நோகக்கூடாது என்று நினைத்து கலைஞர் பேசுவார்.
அவர் மறைந்தாலும் அவருடைய எழுத்துக்கள், பேச்சுக்கள், வசனங்கள் எப்போதும் வாழ்ந்துகொண்டே இருக்கின்றன. கலைஞர் போல் இன்னொருவர் வர முடியாது. எதிர்க்கட்சித் தலைவர்களையும் மதிக்கக்கூடியவர் அவர். கலைஞர் போலவே தளபதியும் அனைவரையும் அரவணைக்கக் கூடியவர். தமிழ்நாட்டில் கம்யூனிஸ்டுகள் உட்பட அனைவரையும் கூட்டணிக்குள் கொண்டுவந்தார். அதுபோல் இன்று இந்திய அளவில் இந்தியா கூட்டணி உருவாகியுள்ளது. ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்று சரியாக அறிவித்தார். இன்று இந்தியாவின் தலைவராக ராகுல் காந்தி வரும் வாய்ப்பு இருக்கிறது.
இப்போது இந்தியாவே ராகுல் காந்தியை ஏற்றுக்கொண்டு விட்டது. அதற்கு அடித்தளம் அமைத்தவர் தளபதி தான். இன்று தேசிய அளவில் திமுகவை ஒரு முக்கியமான கட்சியாக உருவாக்கியுள்ளார் தளபதி. கலைஞர் இருந்திருந்தால் என்ன செய்திருப்பாரோ, அதைவிட அதிகமாக உழைக்கிறார் தளபதி. திராவிடத்தை இந்திய அளவில் வளர்க்கும் வேலைகளை அவர் செய்து வருகிறார். கலைஞர் இறந்த பிறகு எங்களுடைய வாழ்வு இருண்டுபோனது என்று நினைத்தோம். தளபதி ஒரு மெழுகுவர்த்தியாக இருப்பார் என்று நினைத்தோம். ஆனால் அவர் ஆகாயத்தீயாக இருக்கிறார். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு நிறைவேறியிருக்கும் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற திட்டம் அனைத்து பகுதிகளுக்கும் சென்றடைய வேண்டும்.