Skip to main content

கமல் சொன்னது நடக்கலையே... கரோனாவுக்கொரு முடிவில்லையே...

Published on 24/09/2020 | Edited on 25/09/2020

 

kamal - neet - nep - farm bill - eia- there -is no end- to- the corona ...

 

01 ஜனவரி 2020, 12:00 AM “விஷ் யூ எ ஹேப்பிஈஈஈஈஈஈஈஈ நியூ இயர்” என உச்சஸ்தாயியில் கத்திக்கொண்டே, உற்சாகமாய் கமலஹாசன் புத்தாண்டு வாழ்த்துச் சொன்னார். அவர் வாழ்த்துச் சொல்லாமல் ஒரு வருடமும் விடிவதில்லை. ஆனால், இந்த வருடம், முடியவே போகிறது, இன்னும் விடியலைக் காணவில்லை. கரண்டு கம்பியில் கட்டி வைத்து அடித்துத் துவைக்கும் ஆனந்தராஜாக கரோனா அராஜகம் செய்ய, பாவப்பட்ட ரஜினியாய் நாம் வலுவிழந்து நிற்கிறோம். பீசு பீசா கரோனா கிழிச்சாலும், பச்ச குழந்தைமாதிரி சிரிக்கிறோம்.  

 

கரோனா நோய்ப் பரவல் இந்தியாவில் பரவ ஆரம்பித்ததும், உங்க டூத் பேஸ்ட்டுல உப்பு இருக்கா, உங்க டாய்லெட் சுத்தமா இருக்கான்னு தடாலடியா கதவ உடச்சிட்டு உள்ள வர்ற சமந்தா, அப்பாஸ் மாதிரி இந்தக் கரோனாவும் சொல்லாம கொள்ளாமா வந்துடும்னு ஆராய்ச்சியாளர்கள் அதிர வைத்தார்கள். வின்வெளியில் படை கட்டி பந்தா காட்டும் ட்ரம்ப் முதல் அம்மா வழியில் அசால்ட்டாக ஆட்சி நடந்தும் எடப்பாடி வரை, யாராலும் இந்த ஆனந்தராஜ கட்டுப்படுத்த முடியல.

 

கரோனா ஒரு இலுமினாட்டி சதின்னு சிலர் சொல்ல, இல்ல இல்ல இது பயோ வாரு’ன்னு பலர் சொல்ல, அதெல்லாம் இல்லப்பா இது சீனா வைரசுனு 'பெரியண்ணன்' ட்ரம்ப் ஒரே போடா போட, ‘போடா போடா புண்ணாக்கு போடாத தப்பு கணக்குனு’ ஜின்பிங் சொல்ல, முன்னாடில்லாம் காரணத்த சொல்லிட்டு அடிப்பாய்ங்க ஒரு ஆறுதலா இருக்கும், இப்ப ஏன் எதுக்குனு சொல்லாமலே அடிக்கிறாய்ங்களேனு மண்டைய பிச்சுட்டு நாமல்லாம் சுத்த, ச்சா... அதெல்லாம் ஒரு அழகிய நிலாக் காலம்.

 

சரி, நமக்கு எதுக்கு ஊர் வம்புனு ஆஃபிஸ் போனா, தம்பி நாளைலேந்து லாக்டவுன் நீங்க வீட்லேந்தே பாக்கலாம்னு ஆபிசர் சொன்னார். அப்பாடா, வீட்டுக்குப் போயி மல்லாக்க படுத்து விட்டத்த பாக்குறது என்ன சுகமா இருக்கும்னு நெனச்ச உடனே, ஊர்களுக்குச் செல்ல போக்குவரத்துத் தடை செய்யப்படுவதாகக் 'கரும்பு மனிதர்' பழனிசாமி அறிவித்தார். அடப் போங்கப்பா, எங்க ‘குலதெய்வம்’ மோடி காப்பாத்திடுவாருனு நம்பி இருந்துட்டேன்.

 

அடுத்த நாள் ‘இரவு 8  மணிக்கு’ மோடி பேசுறாருன்னு என் நண்பன் பதறி துடிச்சு சொல்ல, இருடா, இரு... எனக்கும் ஒரு மாதிரியாதான் இருக்கு, என்னன்னுதான் கேப்போம்னு அவன சமாதானப்படுத்தினேன். கொஞ்ச நேரம் கழிச்சு, மாண்புமிகு பிரதமர் தொலைக்காட்சியில் உதயமானார். அனைவரும் 21 நாள்கள் வீட்டுக்குள்ளேயே இருங்க, சமூக இடைவெளியோட இருங்க என அறிவுறுத்தியவர், சில நாட்களுக்குப் பிறகு மொட்டை மாடிக்குச் சென்று ‘அகல்’ விளக்கோ, செல் வெளிச்சமோ, 9 நிமிடம் காட்டச் சொன்னார். உடனே மொட்ட மாடிக்குப் போய் செல் வெளிச்சம் அடிச்சு பாத்தா, ஆத்தி! ஒரு ஊரே நெருக்கமா நிக்குது மாடியில. பிரதமர் கோச்சிக்கிட்டாலும் பரவா இல்லன்னு அந்தக் கூட்டத்துலேந்து தப்பி ஓடியாந்துட்டேன்.

 

அப்பறம் ஒரு நாள், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் எனும் புதிய நடைமுறை அமலுக்கு வந்தது. சரி, இ- பாஸ் எடுத்து ஊருக்குப் போகலாம்னு பார்த்தா, யாருக்காச்சும் ‘கல்யாணம்’ ஆகணும், இல்லன்னா ‘கருமாதி’ ஆகணும் அப்போதான் விடுவோம்னு அந்த அரசு இணையத்தில் போட்டுருந்துச்சு. ‘நண்பனுக்கு கல்யாணம்னு’ போட்டா கல்யாண பத்திரிகையைப் பதிவேற்ற சொல்லது... நண்பனோட கல்யாண பத்திரிகையைப் பதிவேற்றினால், உங்க அப்ளிகேஷன் ரிஜெக்ட்னு வந்துடுச்சு. அப்போ நல்ல வேலையா தூரத்துச் சொந்தத்துல ஒரு தாத்தா காலாவதியாக, கல்யாணத்துக்குதான் பாஸ் தரல, இப்ப மறைவுனு போட்டா அப்ரூவ் பண்ணிடுவாங்கனு நம்பி... அப்ளை பண்ணேன். ஆனா, அவரோட மரணச் சான்றிதழ் கேட்டதும், ‘எனக்கு அப்படியே ஒரு நிமிஷம் தல சுத்திடுச்சு’. அவர் சாகப் போறாருன்னு முன்கூட்டியேவா சான்றிதழ் எடுத்து வச்சிக்க முடியும், என்னங்க சார் உங்க சட்டம்னு கதவ மூடிக்கிட்டு ரூம்லேயே தங்கிட்டேன்.

 

இந்தக் கரோனாவுக்கு மருந்தே இல்லன்னு உலக நாடுகள், உதட்ட பிதுக்கிட்டு நின்னப்ப நம்ம ‘தேவ்’... அதாங்க பாபா ராம் தேவ்...., நாங்க இருக்கோம்னு சொன்னாரு. புதுசா மருந்து கண்டுபுடிச்சேன்னு சொல்லி நம்ம வயித்துல பால வாத்தாரு. ஆனா, அவரோட நெருக்கமா இருக்குற மத்திய அரசே அத கள்ளாட்டம் கள்ளாட்டம்னு சொல்லி எல்லா கோட்டையும் அழிச்சிடுடிச்சு. நமக்கு இருந்த ஒரே நம்பிக்க நட்சத்திரமும் ஃபியூஸ் போய்ட்டு. இப்போ ரஷ்யாவின் தடுப்பூசி வரட்டும்னு நாஞ்சில் போல காத்திருக்கோம். ஆனா, இன்னும் சிலர் கோமியம் குடிச்சா கோவிட் குணமாகும்னு சொல்லி குடிச்சே காமிச்சாங்களே. 

 

Ad

 

இந்த மாதிரி ஒரு கொடூர நோய் வரும்னு ஒருத்தர் முன்னாடியே சொல்லிட்டதா சில விவாதங்கள் போனது. உலக நடப்ப தெரிஞ்சிக்க ட்விட்டருக்குள்ள போனப்பதான் அந்த ரகசியம் தெரிஞ்சது. ஆமா, '#அன்றே_சொன்னார்_சூர்யா'. ஆனா சூர்யா எப்படித் தான் எல்லா நோயையும் முன்னாடியே சொல்றாருன்னு தெரியல, ‘கரோனா’ முதல் ‘நீட்’ வரை அத்தனையும் முன்னாடியே உணர்ந்து எச்சரித்துள்ளார். நாமதான் பெருசா எடுத்துக்கல. அதேநேரம், நீட் வேணாம்னு சொல்ற சூர்யாதான் நீட் உள்இடஒதுக்கீட்ட ஆதரிச்சு ட்வீட் போட்றாரு. அப்போ நீட் வேணுமா? வேணாமா? என புற்றீசல் போல பெருகிவரும் யூ- டியூபர்கள் சூடு பறக்க விவாதம் நடத்தி வருகின்றனர்.

 

முகத்துக்கு போட்ட மாஸ்க், வழுக்கி வழுக்கி வாய்க்கு வந்து இப்போ தாவாய்ல செட்டில் ஆயிடுச்சு. சானிடைசர் போட்டு போட்டு உள்ளங்கை தோல் எல்லாம் உறிஞ்சு போய்டுச்சு. இந்தக் கரோனா தான் நம்மை இப்படிப் படபடப்பா வச்சிருக்குன்னா, நம்ம அரசுகள் அதுக்கு மேல, நம்மை பதட்டமா வச்சிருக்கு. திடீர்னு ‘சுற்றுச் சூழல் வரைவு அறிக்கை’, ‘புதிய கல்விக் கொள்கை’, ‘மாஸ்க் வாங்கியதில் ஊழல்’, ‘கிசான் ஊழல்’, ‘விவசாய சட்ட மசோதா’ என எல்லாமே புது ஐட்டமா இருக்கு. இதுலேந்து நம்மள காப்பாத்த ஒரு ‘குருநாதர்’ வரமாட்டாரா?

 

 

 

Next Story

‘கங்குவா’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

Published on 16/01/2024 | Edited on 16/01/2024
Release of the second look poster of the movie 'Kangua'

சிறுத்தை சிவா இயக்கும் ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இப்படத்தில் கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 10 மொழிகளுக்கு மேலாக 3டி முறையில் சரித்திரப் படமாக வெளியாக உள்ள இப்படத்தை, ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் வருகிற ஏப்ரலில் வெளியாகவுள்ளதாகச் சொல்லப்படுகிறது.  

இப்படத்தின் படப்பிடிப்பு கோவா, கொடைக்கானல், உள்ளிட்ட பகுதிகளைத் தொடர்ந்து தாய்லாந்தில் நடந்ததாகத் தகவல் வெளியானது. இதையடுத்து சென்னையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. அதில் கடந்த நவம்பர் 22 ஆம் தேதி ரோப் கேமரா அறுந்து சூர்யாவின் தோள்பட்டையில் மோதியதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து, விபத்து குறித்து விளக்கமளித்த சூர்யா, உடல் நலம் தேறி வருவதாகவும், உங்கள் அன்புக்கு நன்றி எனவும் குறிப்பிட்டிருந்தார். 

இதனைத் தொடர்ந்து, இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஹைதாராபாத்தில் நடைபெற்று சமீபத்தில் முடிந்தது. இது குறித்து நடிகர் சூர்யா தனது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் குறிப்பிடும்போது, ‘இந்த படத்தை நீங்கள் திரையில் பார்க்கும் வரை என்னால் காத்திருக்க முடியாது’ என்று பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், பொங்கல் தினத்தை முன்னிட்டு கங்குவா படத்தின் புதிய போஸ்டரை வெளியிடுவதாக நேற்று (15-01-24) படக்குழு அறிவித்திருந்தது. அந்த வகையில், மாட்டுப் பொங்கல் தினமான இன்று (16-01-24) கங்குவா படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யா இடம்பெற்ற இந்த போஸ்டரால் ரசிகர்கள் மத்தியில் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. 

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.