தமிழ்நாட்டில் அறிஞர் அண்ணாவுக்கும், தந்தை பெரியாருக்கும் வைக்கப்பட்டுள்ள சிலைகள் அளவுக்கு வேறு யாருக்கும் சிலைகள் இல்லை. அவர்களுக்கு அடுத்தபடியாக காமராஜருக்கும், அம்பேத்கருக்கும் சிலைகள் உள்ளன.
தந்தை பெரியார் நவீன தமிழகத்தை கனவு கண்டார் என்றால், அறிஞர் அண்ணா அவர்கள், பெரியாரின் கனவுகளை நிறைவேற்றும் ஆட்சியை அமைப்பதில் வெற்றி கண்டார். மிகக் குறுகிய காலமே ஆட்சிப் பொறுப்பில் இருந்ததால், அவருக்கு அடுத்து ஆட்சிப் பொறுப்பை ஏற்ற கலைஞர், பெரியாரின் கனவுகளை நிறைவேற்றுவதில் பெரிய அளவில் வெற்றிபெற்றார்.
அண்ணாவுக்கு அடுத்தபடியாக சீனியாரிட்டி பெற்ற தலைவர்கள் வரிசையில் இருந்தார்கள். ஆனால், அண்ணாவுக்கு அடுத்தபடியாக தந்தை பெரியாரின் அன்பைப் பெற்றவர் கலைஞர்தான் என்பதை 1968ல் அண்ணாவின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சமயத்திலேயே வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஆம், 1968 ஜனவரியில் சென்னையில் அண்ணா தலைமையில் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டின் நினைவாகத்தான், மெரினாவுக்கு இன்று அழகு சேர்த்துக் கொண்டிருக்கிற 10 சிலைகள் நிறுவப்பட்டன. அந்த மாநாடு முடிந்த கையோடு, முதல்வர் அண்ணாவுக்கு அன்றைக்கு மவுண்ட்ரோடு என்று அழைக்கப்பட்ட அண்ணாசாலையில் சிலை திறக்கப்பட்டது.
அண்ணாவுக்கு சிலை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, அன்றைக்கு பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த கலைஞருக்கு சிலை வைக்க அனுமதிக்க வேண்டும் என்று அண்ணாவிடம் கோரிக்கை வைத்து, அனுமதியும் பெற்றார். ஆனால், பெரியாரின் இந்த முயற்சியை அன்றைக்கு பிராமணர்கள் பலர் கடுமையாக விமர்சித்தார்கள். அண்ணாவுக்கு சிலை வைப்பதை ஏற்றுக்கொண்ட அவர்கள், கலைஞருக்கு சிலை வைக்கும் முயற்சியை விமர்சித்தார்கள் என்றால், அவர்கள் அன்றைக்கே கலைஞரை எந்த அளவுக்கு கற்பனை செய்திருக்கிறார்கள் என்பது புரியும்.
கலைஞரை கடுமையான வார்த்தைகளால் பிராமணர்கள் சிலர் அர்ச்சித்தற்கு காரணம் என்னவாக இருந்திருக்க முடியும்? அவரே எழுதியதுபோல அவர் பிறந்த சாதியைத் தவிர வேறு எதுவாக இருந்திருக்க முடியும். ஒருகட்டத்தில் பெரியாரின் சிலை வைக்கும் முயற்சி தேவையில்லாதது என்றும், சிலை வைக்கும் அளவுக்கு தான் தகுதி பெற்றவன் அல்ல என்றும் கலைஞரே மறுத்து அறிக்கை வெளியிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால், அந்த அறிக்கையைப் பெரியார் பொருட்படுத்தவில்லை. தனது முயற்சி குறித்து விடுதலை இதழில் தலையங்கமே எழுதினார். 1968 ஆம் ஆண்டு மே மாதம் 28 தேதியிட்ட விடுதலை இதழில் கலைஞரின் அறிக்கையைக் குறிப்பிட்டு, அவர் மறுத்தாலும், சிலை வைப்புக் கமிட்டியார் தொடர்ந்து பொதுமக்கள் ஆதரவுடன் அவருக்கு சிலை வைப்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என்று எழுதியிருந்தார்.
தந்தை பெரியாரின் ஆசை அண்ணா உயிருடன் இருக்கும்போதே வெளிப்பட்டது ஆகும். அதன்பிறகு, திமுகவின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவோடு, கலைஞர் முதல்வரானார். தந்தை பெரியார் 1973 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி மறைந்தார். அவருக்கு அரசு மரியாதை அளிப்பதற்காக தனது ஆட்சியையே பறிகொடுக்கவும் தயாராய் இருந்தார் கலைஞர். அந்த அளவுக்கு பெரியாரின் சீடராய் கலைஞர் இருந்திருக்கிறார் என்பதை அறியமுடியும். பெரியாரின் மறைவுக்குப் பிறகு, மணியம்மை, கி.வீரமணி ஆகியோர் தலைமையில் கலைஞருக்கு சிலை அமைக்கும் முயற்சி மீண்டும் உயிர்ப்பெற்று, அண்ணாசாலையில் 1975 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி மாபெரும் விழா எடுத்து, பேராசிரியர் தலைமையில், மணியம்மை முன்னிலையில், தவத்திரு குன்றக்குடி அடிகளார் கலைஞர் சிலையை திறந்துவைத்தார்.
அந்தச் சிலை பலருடைய வயிற்றெரிச்சலுக்கு தொடர்ந்து ஆளானது. கலைஞர் என்ற தலைவரின் வளர்ச்சி ஒரு பிரிவினரை தொடர்ந்து இம்சித்துக் கொண்டே இருந்தது. 1987ல் எம்ஜிஆர் இறந்தார். அவருடைய இறுதி ஊர்வலத்தை பயன்படுத்தி, கலைஞர் சிலையை உடைத்தெறிந்தனர். அந்தப் படம் ஏடுகளில் வந்தபோதுகூட எதிர்க்கட்சித் தலைவரான கலைஞர்,
"உடன் பிறப்பே,
செயல்பட விட்டோர்
சிரித்து மகிழ்ந்து நின்றாலும்
அந்த சின்னத்தம்பி
என் முதுகிலே குத்தவில்லை-
நெஞ்சிலே தான் குத்துகிறான்;
அதனால் நிம்மதி எனக்கு!
வாழ்க! வாழ்க!'' என்று கவிதை எழுதினார். அதன்பிறகு அதே இடத்தில் சிலை வைக்க திராவிடர் கழகம் முயற்சித்தபோது கலைஞர் அதை நிராகரித்துவிட்டார்.
கலைஞர் தனது ஆட்சியில் எத்தனையோ கலைநயமிக்க சிலைகளையும், நினைவுச் சின்னங்களையும், கட்டிடங்களையும் கட்டியிருக்கிறார். திமுக எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சமயத்திலேதான் திமுகவின் தலைமை அலுவலகமாக அண்ணா அறிவாலயம் என்ற மாபெரும் கட்டிடத்தை தொண்டர்களிடம் பெற்ற நிதியில் கட்டி எழுப்பினார். இதோ, அந்த அலுவலகத்தின் அருகிலே, தனது தலைவர் அண்ணாவின் அருகிலே அவரே சிலையாக மாறியிருக்கிறார்.