Skip to main content

“என்னை எதிர்த்தால் மீண்டும் 1989!” - சசிகலா திட்டவட்டம்!

Published on 02/03/2021 | Edited on 02/03/2021

 

dddd

 

பா.ஜ.க. நிர்வாகிகளுடன் அதிமுக அமைச்சர்கள் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தியிருக்கும் நிலையில், அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பி.எஸ்.ஸும் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியபோது வெளிப்பட்ட அதிருப்தியை, ஒரு தரப்பினர் தகவலாக நம்மிடம் சொன்னார்கள். 

 

“கூட்டணி முடிவாகி ஒப்பந்தத்தில் அமித்ஷா கையெழுத்திடும் நிலை ஏன் வரவில்லை தெரியுமா? சசிகலா அதிமுக பொதுச்செயலாளராகி, அதிமுக ஒருங்கிணைந்து செயல்படாவிட்டால், 16-ஆம் தேதி சசிகலா பொதுச்செயலாளர் ஆகக்கூடிய நிலை உருவாகும். இல்லையென்றால் இரட்டை இலை முடக்கப்படும்.’ என்று அதிரடியாகப் பேசிவிட்டு கிளம்பினார் அமித்ஷா. 

 

அதன்பிறகு, சீனியர் அமைச்சர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ‘தென்மாவட்டம் எப்படி இருக்கிறது?’ என்று கேட்டிருக்கிறார். அப்போது, ‘சின்னம்மாவ சேர்த்தா ஃபுல்லா வந்திடலாம். சேர்க்கலைன்னா தென்மாவட்டத்துல ஒரு சீட் கூட வராது..’ என்று தங்களிடம் ராஜேந்திரபாலாஜி சொன்னதை அப்படியே ஒப்பித்திருக்கிறார்கள், இரண்டு அமைச்சர்கள். அதற்கு ஈ.பி.எஸ். ‘நாலரை வருஷம் அவரை காப்பாத்தி மந்திரியா வச்சிருக்கோம். இப்படியா சொல்லிட்டிருக்காரு?’ என்று டென்ஷனாக, அதற்கும் ராஜேந்திரபாலாஜி வாய்ஸையே ரிபீட் செய்திருக்கின்றனர். ‘என்னை அமைச்சராக்கியது அம்மா. அவங்க பொதுச்செயலாளரா இருந்தப்ப.. முதலமைச்சரா இருந்தப்ப.. எனக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு தந்து மந்திரியாவும் ஆக்கினாங்க. ஈ.பி.எஸ். என்ன பண்ணுனாரு? மாவட்டச் செயலாளர் பொறுப்புல இருந்து என்னை நீக்கினாரு. அப்புறம் மாவட்டப் பொறுப்பாளர் ஆக்கினாரு. இப்ப என்னோட விருதுநகர் மாவட்டத்த ரெண்டாக்கிட்டாரு. சின்னம்மாவ கட்சியில சேர்த்தால்தான் முக்குலத்தோர் ஓட்டு. இல்லைன்னா அந்த சமுதாய ஓட்டு அதிமுகவுக்கு விழாது..’ என்று கூற,  ‘இந்த மாதிரி பேசிக்கிட்டிருந்தா அவரை தொலைச்சிருவேன்’னு ஈ.பி.எஸ்., கூடுதலாகக் கொதித்திருக்கிறார். 

 

கட்சியில் சேர்த்து ‘மீண்டும் சசிகலாவுக்கு எடுபிடிகள்’ ஆவதை விரும்பாத தங்கமணி, வேலுமணி, கே.பி.முனுசாமி, மனோஜ்பாண்டியன் போன்றவர்கள், எடப்பாடி பழனிசாமி பக்கம் உள்ளனர். ஆனாலும், மனோஜ்பாண்டியன் வெளிப்படையாக எந்தக் கருத்தையும் முன்வைக்காமல், ‘ஓ.பி.எஸ். எவ்வழியோ அதுவே என் வழி’ என்பதில் உறுதியாக இருக்கிறார். ‘சின்னம்மாவை சேர்த்தால் நல்லது..’ என்ற ராஜேந்திரபாலாஜியின் கருத்து, ஓ.பி.எஸ்.ஸுக்கு உள்ளுக்குள் ‘ஓ.கே.’ என்றாலும், வெளிப்படையாக ‘ரியாக்ட்’ பண்ணவில்லை.   

 

‘சசிகலாவை சேர்த்தால் முக்குலத்தோருக்கு எதிரான மனநிலையில் உள்ள பிற சமுதாய வாக்குகள் அதிமுகவுக்கு  விழாது. குறிப்பாக பட்டியலின மக்களின் வாக்குகள் மொத்தமாக எதிரணிக்குப் போய்விடும்.’ என்ற கோணத்தில் நிர்வாகி ஒருவர் பேச, ‘ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைத்தவர் எடப்பாடி பழனிசாமி. இவரை எந்த சமுதாய மக்களும் நம்ப மாட்டார்கள்.’ என்று ‘கமெண்ட்’ அடித்திருக்கிறார் இன்னொரு நிர்வாகி. 


சசிகலா நிலைப்பாடு என்னவாம்? இரட்டை இலைக்கு எதிராக வாக்கு கேட்பதை ஒருநாளும் செய்யமாட்டார். அதேநேரத்தில், பொதுச்செயலாளர் பொறுப்பு இல்லையென்றால், இரட்டை இலைச் சின்னத்தை முடக்கவும் தயங்க மாட்டார். சசிகலாவுக்கு எதிரான போக்கினை எடப்பாடி பழனிசாமி தொடர்ந்தால், ‘மீண்டும் 1989’ என்ற நிலை ஏற்பட்டு, இன்றைய அதிமுகவே மு.க.ஸ்டாலினை முதலமைச்சர் ஆக்கிவிடும்.” 


இப்படி புலம்பும் நிலைக்கு அதிமுகவினரைக் கொண்டுவந்துவிட்டார் சசிகலா! 

 

 

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.