Skip to main content

பேஸ்புக் அடுத்து கூகுள் பிளேவில் தகவல் திருட்டு!!!

Published on 18/04/2018 | Edited on 18/04/2018
OS

  

 

நமது கம்ப்யூட்டர் அனைத்தும் விண்டோஸ் (Windows) என்ற இயங்குதளத்தின் (operating system) மூலம் செயல்படுகிறது. இந்த ஆப்ரடிங் சிஸ்டத்தின் ஒரு தளத்தில் இயங்கும் இணையத்தளத்தில் (இன்டர்நெட்) முதன்மை பகுதிகளாக வலைதளங்கள் (வெப்சைட்) இயங்குகின்றன. அதுபோல பெரும்பாலான மொபைல் போன்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டு செயல்படுகின்றன. அதில் இயங்கும் கூகுள் பிளே (Google Play) பதிவிறக்கம் மற்றும் அப்டேட் மூலம் அனைத்தும் கைப்பேசி செயலிகளும் (Mobile app) இயங்குகின்றன. இணையம் அல்லது நெட்ஒர்க் மூலமாக ஒரு கம்ப்யூட்டரிலிருந்து தகவல்களை திருடமுடியும். குறிப்பிட்ட கம்ப்யூட்டரை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியும். அதன் செயல்பாட்டை கூட முடக்கிவிட முடியும். அதுபோலதான் நமது கைப்பேசி செயலிகளின் மூலமாக வேறு நபரால் நமது கைப்பேசியிலிருக்கும் தகவல்களை திருடமுடியும். தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியும். கைப்பேசி  செயல்பாட்டை கூட முடக்கிவிட முடியும். ஆக கைப்பேசி செயலிகளை  ஸ்லீப்பர் செல்களாக பயன்படுத்த முடியும். இப்படி நடந்து விடக்கூடாது என்று பல அடுக்கு சோதனைகளும். அதிரடி நடவடிக்கைகளும் எடுத்துவருகிறது கூகுள் நிறுவனம். சமீபத்தில் கூட சீனா தனது செல்போன் தயாரிப்புகள் மூலமாக இந்தியர்களின் தகவல்களை திருட வாய்ப்புள்ளதாக செய்திகள் உலாவியது. ஆனால் அது உண்மையில்லை. அந்த காரியத்தை சீனா செய்யாது, ஆனால் அமெரிக்கா செய்யும். சரி கூகுள் பிளேவுக்கு வருவோம்.         

 

கூகுள் நிறுவனத்தின் ஆன்ட்ராய்ட் இயங்குதளத்தில் ஒரு டிஜிட்டல் சந்தையாக 2008 இல் துவக்கப்பட்டதுதான் கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store). இது ஒரு டிஜிட்டல் பரிவர்த்தனை சேவை தளம். இதற்கு முன்னர் இதன் பெயர் ஆண்ட்ராய்டு மார்கெட் (Android Market). 2017 புள்ளி விவரத்தின்படி,  கூகுள் பிளேவில் 3.5 மில்லியன் கைப்பேசி செயலிகள் உள்ளன. இப்பொழுது இன்னும் அதிகரித்திருக்கும். தினம்தோறும் புதுபுது சேவைக்களுக்கான செயலிகள் இணைக்கப்பட்டு வருகின்றன. அதேபோல நாள்தோறும் லட்சக்கணக்கான செயலிகள் பதிவிறக்கம் செய்யப்பட்டும் வருகின்றன. ஆக இந்த டிஜிட்டல் சந்தை மிக பரபரப்பாக இருந்து வருகிறது. இதன் மூலம் செயலிகளின் உரிமையாளர்களுக்கும், கூகுள் நிறுவனத்திற்கும் லாபம் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. சினிமா, இசை, டிஜிட்டல் புத்தகங்கள், செய்தித்தளம், விளையாட்டு, நிதிசேவை, வாட்ஸ் ஆப், டார்ச்லைட் என இன்னும் பல வகையான செயலிகள் கூகுள் பிளேவில் கொட்டிக் கிடக்கின்றன. இப்போது பிரச்சனை கூகுள் பிளேதான். சென்ற ஆண்டு இண்டர்நெட்டிலிருந்து பாதுகாப்பற்ற சாப்ட்வேர் பதிவிறக்கம் செய்தால் அதன் மூலம் உலகளவில் ரேன்சம்வேர் (ransomware attack) வைரஸ் தாக்குதல் நடந்தது நினைவிருக்கலாம். மைக்ரோசாப்ட் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும் கம்ப்யூட்டர்களில் ரேன்சம்வேர் தாக்குதல் மூலம் முக்கிய தகவல்கள் முடக்கப்பட்டது. ரேன்சம்வேர் பாதிப்பிலிருந்து விடுவிக்க மென்பொருள் நுண்நாணயமான கிரிப்டோகரன்சி பிட்காயினில் கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்தியது. இந்த தாக்குதல் மட்டும் 150 நாடுகளில் 2,30,000 மேற்பட்ட கம்ப்யூட்டர்களில் பாதிப்பை ஏற்படுத்தியது. 

 

 

bit coin


 

அதேபோல் கூகுள் பிளேவில் உள்ள  செயலிகள் மூலமாக இந்த காரியத்தை செய்யமுடியும் என்பதுதான் இப்போது அதிர்ச்சியான தகவல். இந்த பிரச்சினையை கூகுள் நிறுவனத்திற்கு மென்பொருள் ஆய்வு நிறுவனங்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன. இதன் ஒருகட்டமாக மூன்று மாதத்திற்கு முன்னர் பாதுகாப்பற்ற சட்டவிரோதமான 7,00,000 செயலிகளை கூகுள் பிளேவிலிருந்து நீக்கியது கூகுள் நிறுவனம். இருப்பினும் தாங்கள் எச்சரிக்கையாக இருப்பதாக கூகுள் நிறுவனம் தொடர்ந்து உத்தரவாதம் அளித்து வருகிறது.  இன்னொரு பிரச்சினை இன்று உலக பணப்பொருளாதாரத்தையே ஆட்டிப்படைத்து வருவது மின்னணு பணமான பிட்காயின்.  இந்த கிரிப்டோகரன்சியின் மென்பொருள் C++ மொழியில் எழுதப்பட்டது. உலகின் எங்கிருந்தும் எந்த நாட்டிற்கும் அனுப்பலாம். இந்த பிட்காயின் தீவிரவாதிகள் தங்களுக்கான நிதியை திரட்டுவதற்கு பயன்படுத்துகின்றனர். கருப்பு பணம் கூட இப்பொது பிட்காயினாக மாறிவருகிறது. இதனால் பிட்காயின் உட்பட அனைத்து கிரிப்டோகரன்சிகளை இந்திய அரசு அண்மையில் தடை விதித்தது. இந்த பிட்காயினை கூகுள் பிளேவில் உள்ள செயலிகள் மூலமாக அனுப்பமுடியும் என்பது இன்னொரு பூதாகரமான பிரச்சினை.


 

online theft




பொதுவாக நாம் பயன்படுத்தும் பல்வேறு செயலிகள் நமது மொபைல் போனை பயன்படுத்திக் கொள்கிறது. இந்த செயலிகள் மூலமாக நமது கைரேகை பதிவு, காலண்டர், தொடர்பு முகவரி, இருக்கும் ஏரியா, செல்போன் எண், இமெயில் முகவரி போன்ற தகவல்கள் பெறப்படுகின்றன. தற்போது கிளம்பியுள்ள பிரச்சினையே ஆயிரத்திற்கும் மேற்பட்ட செயலிகள், அதிலும் பிரபலமான குழந்தைகளின் செயலிகள் சட்டவிரோதமாக குழந்தைகளின் தகவல்களை சேகரிக்கின்றன என்பதுதான். பிரபல அமெரிக்க ஆய்வறிக்கையில் 6,000 குழந்தைகளுக்கான செயலிகளில் குழந்தைகளின் ஆன்லைன் தனியுரிமை பாதுகாப்பு சட்டம் (Children's online privacy protection Act (COPPA) சட்டத்தை மீறி சட்டவிரோதமாக குழந்தைகளின் தகவல்களை சேகரிப்பதாக தெரிவித்துள்ளது. அதிலும் 13 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் தகவல்கள் அவர்களின்  பெற்றோர்களின் அனுமதி இன்றி பெறப்படுவதாக அந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இப்போது பேஸ்புக் அடுத்து கூகுள் பிளேவிலும் தகவல் திருடப்படுவதாக குற்றச்சாட்டு பரபரப்பாக எழுந்துள்ளது.