திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க. மகளிரணிச் செயலாளராக இருப்பவர் வளர்மதி. அ.தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினராகவும் இருக்கும் இவர், சமீபத்தில் வத்தலக்குண்டு காவல்நிலையத்தில் சொந்தக் கட்சியினர் மீதே பரபரப்பு புகார் ஒன்றைக் கொடுத்திருக்கிறார்.
அதில், “உள்ளூரில் இருக்கும் அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலர் என்னை டார்ச்சர் செய்து வந்தனர். அவர்களின் தூண்டுதலில்தான், அடையாளம் தெரியாத சிலர் செய்தியாளர்கள் என்று சொல்லிக்கொண்டு என் வீட்டைப் பலமுறை படம் எடுத்தார்கள். காரணம் கேட்டதற்கு, தகாத வார்த்தைகளால் பேசியதோடு கொலை மிரட்டலும் விடுத்தார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
புகாரோடு நிறுத்தாமல், இந்த விவகாரத்தை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் காதுக்கும் கொண்டு சென்றிருக்கிறார் வளர்மதி. இருந்தும் காக்கிகள் நடவடிக்கை எடுக்க ஆர்வம் காட்டவில்லை.
ஆளுங்கட்சி மகளிரணி மா.செ.வுக்கே இந்த நிலையா? என மாவட்டத்தில் பரபரப்பு தொற்றியிருக்கும் நிலையில், வளர்மதியிடம் இதுபற்றி கேட்டோம். "ஆசிரியரான எனது அப்பா வேங்கை மாரப்பன், தலைவரின் விசுவாசியாக இருந்து அ.தி.மு.க.வில் இணைந்தவர். நானும் சிறுவயதிலேயே கட்சிப்பணிகளில் சிறப்பாக ஈடுபட்டதால், என்னைப் பாராட்டி 96-ல் கவுன்சிலர் சீட் கொடுத்தார்கள். அதில் வெற்றி பெற்றேன். எனக்குக் கிடைத்த அரசு வேலையை உதறித் தள்ளிவிட்டு, முழு நேர அரசியல்வாதியாகச் செயல்பட்டதால், திண்டுக்கல் மகளிரணி மா.செ. பதவி கொடுத்தார் அம்மா. அதன்மூலம் நகரங்கள் முதல் கிராமங்கள் தோறும் சுழன்றடித்து மாவட்டத்தில் மகளிரணியை உருவாக்கினேன். இதனால், எனக்குத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் பதவி கிடைத்தது. என் மூத்தமகன் அருண்குமாருக்கு ஏ.பி.ஆர்.ஓ. வேலையும், இளையமகன் வருண்குமாருக்கு அறநிலையத் துறையில் வேலையும் போட்டுக் கொடுத்தார் அம்மா.
தொடர்ந்து உற்சாகமாக கட்சிப்பணியில் ஈடுபட்டு வந்தபோதுதான், என்னுடைய வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாத நகரச் செயலாளர் பீர்முகம்மதுவும், அவரது ஆதரவாளர்கள் சிலரும் முன்னாள் முப்பெரும் துறை அமைச்சராக இருந்த நத்தம் விஸ்வநாதனைச் சந்தித்து, வளர்மதி திண்டுக்கல் சீனிவாசனின் ஆதரவாளராக இருக்கிறார் என்று சொல்லி ஒதுக்கத் தொடங்கினார்கள். அதிலிருந்து கட்சி நிகழ்ச்சிகளுக்கு என்னை அழைப்பதில்லை. தங்களை மட்டும் வளர்த்துக் கொண்டார்களே தவிர, கட்சித் தொண்டர்களுக்கும், மகளிரணிக்கும் எந்தப்பலனும் அவர்களால் கிடைக்கவில்லை.
மாமா (அமைச்சர் சீனிவாசனை மாமா என்றுதான் கூப்பிடுவார்) மந்திரியான பிறகும்கூட, கட்சிக் கூட்டங்களுக்கு தகவல் கொடுக்காமலும், மாமாவைச் சந்திக்க விடாமலும், ஒதுக்கிவைத்து, சிலரைத் தூண்டிவிட்டு டார்ச்சர் கொடுத்தார் ந.செ. பீர் முகமது. இதன் உச்சமாக, என் மூத்தமகன் அருண்குமாரை போதைப்பொருள் விற்றதாக மாட்டிவிட்டனர். இதனால் மனம் நொந்திருந்த என்னை, கட்சியில் இருந்தே வெளியேற்றக்கோரி பெட்டிஷன் போட்டார்கள். அரசு மூலம் வரக்கூடிய சலுகைகளை பீர்முகம்மது செய்து கொடுப்பதில்லை.
தன்னை வளர்ப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டுவதால், கட்சிக்காரர்கள் பலர் மாற்றுக்கட்சிகளுக்கு சென்று விட்டனர். அதைவிடக் கொடுமையாக, அ.தி.மு.க. கோட்டையாக இருந்த வத்தலக்குண்டு நகரம், தற்போது தி.மு.க. கோட்டையாக மாறிவிட்டது. சட்டமன்ற இடைத்தேர்தலிலும் தி.மு.க. ஆயிரம் ஓட்டுகள் கூடுதலாக வாங்கியது. அதேபோல், உள்ளாட்சித் தேர்தலிலும் வத்தலக்குண்டு யூனியனை தி.மு.க.வே கைப்பற்றியது. ஆளுங்கட்சியாக இருந்தும் பலவீனம் அடைகிறோமே என்கிற கவலை இல்லாமல், என்னைக் கட்சியிலிருந்து விரட்டுவதிலேயே ந.செ. ஆர்வம் காட்டுகிறார். இதற்காக தனது ஆதரவாளர்களைத் தூண்டிவிட்டு மிரட்டல் விடுகிறார்.
ஒருகட்டத்தில் பொறுமை இழந்து, போலீசில் கொடுத்த நான் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்கச்சொல்லி, இன்ஸ்பெக்டர் பிச்சைப் பாண்டியிடம் மந்திரி மாமா சொல்லியும்கூட, எதுவும் நடக்கவில்லை. அந்தளவுக்கு லோக்கல் போலீஸ் ஸ்டேஷனை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் ந.செ. முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் இதைத் தெரியப்படுத்த இருக்கிறேன். கட்சித் தலைமைதான் என்னைக் காப்பாற்றவேண்டும். இல்லையென்றால், ந.செ. பீர் முகம்மது, அவருடைய ஆதரவாளர்கள் டார்ச்சரால் தற்கொலை செய்ததாக எழுதி வைத்துவிட்டு போகிறேன். அம்மா இருந்திருந்தால் என்னைப்போன்ற மகளிரணியினருக்கு இந்தநிலை வந்திருக்காது'' என்றார் கண்ணீருடன்.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து நகரச் செயலாளர் பீர்முகம்மதுவிடம் கேட்டபோது, "எனக்கும் அந்தம்மாவுக்கும் எந்தச் சம்மந்தமும் கிடையாது. என்னுடைய வளர்ச்சியைப் பிடிக்காமலும், சிறுபான்மையினர் என்பதாலும் இப்படியொரு குற்றச்சாட்டை பரப்பிவருகிறார். மாவட்டத் தலைமையின் சொல்படியே நான் நடக்கிறேன். தன்னிச்சையாக எதுவும் செய்வதில்லை. அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அந்தம்மாவுக்குத் தகவல் சொல்லிவிடுவேன். இருந்தும், தி.மு.க.-வினரின் தூண்டுதலால் இப்படிப் பேசிவருகிறார்'' என்று மறுக்கிறார்.
வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் இதுபற்றி பேசியபோது, "வளர்மதி கொடுத்த புகார்மீது நட வடிக்கை எடுக்கச் சொல்லியிருக்கிறேன். அதேபோல், வேறெந்த பிரச்சனையாக இருந்தாலும் என்னிடமும், மா.செ. மருதராஜிடமும் சொன்னால் செய்துதர தயாராக இருக்கிறோம்'' என்றார்.
மாவட்ட மகளிரணிச் செயலாளர் வளர்மதியின் இந்தக் குமுறல், ர.ர.க்கள் மத்தியில் அனுதாபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.