உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் காரணமாக இதுவரை 213 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 7,000 க்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில் இந்த வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இருந்து இந்தியா வரும் ஆயிரக்கணக்கான பயணிகள், முழு மருத்துவ பரிசோதனைக்கு பிறகு இந்தியாவில் அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல சீனாவில் உள்ள நூற்றுக்கணக்கான இந்தியர்களை இந்தியா கொண்டுவருவதற்கான பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
சீனா மற்றும் ஹாங்காங்கில் கடந்த 2002 ஆம் ஆண்டில் பரவிய சார்ஸ் நோயை ஏற்படுத்திய அதே வைரஸ் குடும்பத்தை சேர்ந்த வைரஸ் தான் இந்த கரோனா என கூறப்படுகிறது. சுவாச மண்டலத்தில் கோளாறுகளை ஏற்படுத்தி, கடும் காய்ச்சலை ஏற்படுத்தி மனித உயிர்களை பறிக்கக்கூடிய ஆபத்து உள்ளது இந்த கரோனா வைரஸ். இந்த வைரஸ்கள் பாம்புகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை இந்த வைரஸை கட்டுப்படுத்த அதிகாரபூர்வமாக எந்த மருந்துகளும் கண்டறியப்படவில்லை. இப்படியான சூழலில் பொதுமக்களும் தங்களை பாதுகாத்துக்கொள்ள தனிப்பட்ட கவனத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
கரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள உலக சுகாதார அமைப்பு சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.
அதன்படி, மக்கள் கரோனா வைரஸிடம் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள...
சோப்பு மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தியோ அல்லது சானிடைசரை பயன்படுத்தியோ அடிக்கடி தங்களது கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
இருமல் மற்றும் தும்மலின் போது கைகள் அல்லது திசு பேப்பரால் (tissue paper) வாய் மற்றும் மூக்கை மூடிக்கொள்ள வேண்டும். அத்தபின் கைகளை சுத்தமாக ஒருமுறை கழுவிவிட வேண்டும்.
காய்ச்சல் மற்றும் இருமல் உள்ள எவருடனும் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்கவும்.
உங்களுக்கு காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் இருந்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுங்கள் மற்றும் முந்தைய பயண வரலாற்றை உங்கள் மருத்துவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்;
விலங்குகளுடன் பாதுகாப்பற்ற நேரடி தொடர்புகளை தவிர்க்க வேண்டும்.
சமைக்காத அல்லது சரியாக வேகவைக்கப்படாத மாமிசங்களை சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். அதேபோல விலங்குகளில் பாலையும் நன்றாக கொதிக்கவைத்தே பயன்படுத்த வேண்டும்.
நேபாளம், இலங்கை உள்ளிட்ட இந்தியாவின் அண்டை நாடுகளிலும் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள சூழலில், நமது நாட்டில் இதன் பரவலை தடுக்க இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசின் இந்த நடவடிக்கைகளையும் கடந்து, மக்களும் தனிப்பட்ட வகையில் மேற்கூறிய முன்னெச்சரிக்கை அறிவுரைகளை பின்பற்றுவதும், வைரஸ் பரவலை தடுப்பதற்கு இன்றியமையாததாக பார்க்கப்படுகிறது.