Skip to main content

‘அண்ணா மறைவும்... உடைந்த ராஜாஜி அரங்கமும்..’ - அறந்தை ராஜனின் மலரும் நினைவுகள்..

Published on 03/02/2022 | Edited on 04/02/2022

 

‘Anna Maraivum .. Rajaji Arangamum ..’ - Aranthai Rajan's Memories ..

 

தி.மு.க. சொத்துப் பாதுகாப்புக்குழு தலைவரும், முன்னாள் ஒருங்கிணைந்த தஞ்சை மா.செ.வும், 12 ஆண்டுகள் ஒருங்கிணைந்த அறந்தாங்கி ஒன்றிய பெருந்தலைவரும்,  கலைஞருடன் இணைந்து பணியாற்றியவருமான அறந்தை ராஜன் (வயது 88). அறிஞர் அண்ணா பற்றிய மலரும் நினைவுகளை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

 

அவருடனான சந்திப்பில் வெளிவராத தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது. அறந்தை ராஜனின். குரலாகவே கேட்போம், “தஞ்சாவூர் ஜில்லாவில் அறந்தாங்கி அருகில் உள்ள சுப்பிரமணியபுரம் கிராமத்தில் வசதியான குடுபத்தில் பிறந்தவன் என்றாலும் அண்ணா, கலைஞர், தி.மு.க மீது கொண்ட பற்றால் திராவிடக் கொள்கையை ஏற்றுக் கொண்டவன். அதனால் தான் இன்று வரை என் குடும்பத்தில் பல்வேறு ஜாதியினரும் உறுப்பினர்களாக உள்ளனர். ஜாதி, மதம், சடங்குளில் நம்பிக்கை இல்லாதவன். 

 

அறிஞர் அண்ணா உடல்நலமின்றி மருத்துவமனையில் இருக்கிறார் என்ற தகவல் அறிந்து கட்சியின் தலைவர்கள், தொண்டர்கள் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் கூடி இருந்தோம். ஆனால் அண்ணா எங்களை விட்டு மறைந்தார். உடனே பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்க வேண்டும் என்று ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டது. அண்ணா மறைந்தார் என்ற தகவல் வானொலி மூலம் அறிந்த தமிழக மக்கள் கொந்தளித்து கிளம்பி சென்னை வர முயன்றனர். அதனால் முழுமையாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சென்னை முழுவதும் போக்குவரத்து தடைபட்டது. அந்த மக்கள் கூட்டம் தான் ரெக்கார்ட் ஆனது. லாரிகளில் ஏறி லட்சக்கணக்காண தொண்டர்கள் கடைசியாக ஒருமுறையாவது அண்ணாவின் முகத்தைப் பார்த்துவிட வேண்டும் என்று சென்னைக்கு வந்துவிட்டார்கள்.

 

ராஜாஜி ஹாலின் உள்ளே அண்ணாவின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு கலைஞர் மற்றும் தலைவர்கள் சுற்றி நின்று கொண்டிருந்த போது எப்படியாவது அண்ணாவின் முகத்தைப் பார்க்க வேண்டும் என்று வந்த தொண்டர்கள் அரங்கத்தின் மேலே ஏறிவிட்டனர். மேற்கூறைகள் உடைந்து கொட்டியது. முதலில் கலைஞர், அண்ணாவின் முகத்திற்கு நேராக குனிந்து நின்று கொண்டார். அடுத்து அனைவரும் அண்ணா உடலில் ஓடுகள் கொட்டாமல் குனிந்து நின்று எங்கள் முதுகில் தாங்கிக் கொண்டோம். அப்போது தான் தெரிந்தது. கடைசியாக அண்ணாவின் முகத்தை காண தொண்டர்கள் ராஜாஜி ஹால் மேலேயும் ஏறிவிட்டார்கள் என்பது. பாரம் தாங்காமல் ஓடுகள் உடைந்து கொட்டுகிறது என்று. உடனே கலைஞர், அண்ணாவின் உடலை நுழைவாயிலுக்கு கொண்டு சென்றால் அனைவரும் காணலாம் என்றார். அப்படியே குனிந்தபடியே அண்ணாவின் உடலை மறைத்துக் கொண்டே நுழைவாயிலுக்கு கொண்டு வந்து வைத்தோம். அதன் பிறகு லட்சக்கணக்கான தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். அதன் பிறகு தான் மறைந்த அனைத்து தலைவர்களின் உடல்களும் நுழைவாயிலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது என்பது வரலாறு” என்றார். 

 

 

Next Story

ஓ.பன்னீர்செல்வம் - சசிகலா திடீர் சந்திப்பு!

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
O. Panneerselvam - Sasikala sudden meeting

திமுக நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான பேரறிஞர் அண்ணாவின் 55 வது நினைவு நாள் இன்று (03.02.2024) தமிழக அரசு சார்பிலும், திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பிலும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி சென்னை, காமராஜர் சாலையில் உள்ள அண்ணா சதுக்கத்தில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்திற்கு அரசியல் கட்சியினர், அரசியல் தலைவர்கள், அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் வருகைப் புரிந்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி சென்னையில் திமுகவினர், அக்கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தலைமையில் சேப்பாக்கம் அரசினர் விடுதியில் இருந்து பேரறிஞர் அண்ணா நினைவிடம் வரை அமைதிப் பேரணி மேற்கொண்டு அண்ணாவின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செய்தனர். மேலும் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிலையில் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் மரியாதை செலுத்துவதற்கு ஒரே நேரத்தில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா ஆகியோர் வந்துள்ளனர். இந்த சூழலில் இருவரும் சந்தித்து நலம் விசாரித்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சசிகலாவிடம் நடிகர் விஜய் அரசியலுக்கு வருகை தந்துள்ளது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் வரவேற்பு தெரிவிக்கும் விதமாக, “ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்கலாம். அது வரவேற்கத்தக்க ஒன்று” என தெரிவித்தார்.

மேலும் ஓ.பன்னீர்செல்வம் உடனான சந்திப்பு குறித்த கேள்விக்கு, “நான் அனைவரையும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் தான் என்று ஆரம்பத்தில் இருந்து நினைத்துக் கொண்டிருக்கிறேன்” எனத் தெரிவித்தார். ஓ.பன்னீர்செல்வம் - சசிகலா இடையேயான இந்த திடீர் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

அண்ணா நினைவு தினம்; ஸ்பெயினில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை!

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
Anna Memorial Day to CM MK Stalin Respect In Spain 

திமுக நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான பேரறிஞர் அண்ணாவின் 55 வது நினைவு நாள் இன்று (03.02.2024) தமிழக அரசு சார்பிலும், திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி சார்பிலும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி சென்னையில் திமுகவினர், அக்கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தலைமையில் சேப்பாக்கம் அரசினர் விடுதியில் இருந்து பேரறிஞர் அண்ணா நினைவிடம் வரை அமைதிப் பேரணி மேற்கொண்டு அண்ணாவின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செய்தனர்.

இந்த அமைதிப் பேரணியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, கனிமொழி அமைச்சர்கள் சேகர்பாபு, கே.என்.நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், செஞ்சி மஸ்தான், உதயநிதி ஸ்டாலின், ராஜகண்ணப்பன், மா.சுப்பிரமணியன், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, மற்றும் ஏராளமான திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். அதே சமயம் ஸ்பெயினில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தமிழ்த்தாயின் தலைமகனாகப் பிறந்து, நமக்கெல்லாம் அண்ணனாக அறிவு மன்னனாக வழிகாட்டிய பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் நினைவுநாள். இன்று அமைதிப் பேரணியாகச் சென்ற திமுக உடன்பிறப்புகள், பேரறிஞர் அண்ணா சொன்ன கடமை - கண்ணியம் - கட்டுப்பாட்டோடு உழைத்து மாநில சுயாட்சியை வென்றெடுக்கும் மக்களுக்கான அரசு ஒன்றியத்தில் அமைய ஓய்வின்றி உழைக்க வேண்டும். எண்ணித் துணிக கருமம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.