நிர்மலா சீதாராமன் ராஜ்ய சபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது நிதியமைச்சராக உள்ளார். இந்நிலையில் இந்தியாவின் முதல் பெண் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்தான் என பலர் பதிவிட்டு வருகின்றனர்.
இதில் ஏராளமானோர் தமிழக பாஜகவினர். இதை நம்பி பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சிலர் இந்தியாவின் முதல் பெண் அமைச்சரான தமிழருக்கு வாழ்த்துகள் என்றும் கூறிவருகின்றனர். ஆனால் இவையனைத்தும் பொய்.
இந்தியாவின் முதல் பெண் நிதியமைச்சர் இந்திராகாந்தி, 1970 முதல் 1971 வரை அவர் அப்பதவியில் இருந்தார். வறுமையை ஒழிப்போம் என சூளுரைக்கொண்ட இந்திரா அரசில்தான் இந்தியாவிலிருந்த 14 வணிகரீதியிலான வங்கிகள் நாட்டுடமையாக்கப்பட்டன. அந்த 14 வங்கிகளும் முதன்மையான வங்கிகள்.
இந்திரா கொண்டுவந்த வறுமை ஒழிப்பு திட்டங்கள் இந்தியா எங்கும் பரவியது. அந்த தேர்தலில்கூட இந்திரா தேர்தல் பிரச்சாரத்தில் கூறினார், ‘நான் வறுமையை ஒழிக்கவேண்டும் என்று கூறுகிறேன், எதிர்கட்சியினர் என்னை ஒழிக்கவேண்டும் என்று கூறுகிறார்கள் யாருக்கு வாக்களிக்க போகிறீர்கள் என்று கேட்டார். இப்படியாக பல வரலாறுகளைக்கொண்டது அவரது அந்த பதவிக்காலம். ஆனால் இப்போது நிர்மலாதான் முதல் நிதியமைச்சர் என்றும் கூறுகின்றனர்.
இதில் இன்னொரு சுவாரசியம் என்னவென்றால் நிர்மலா சென்றமுறை பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்தார். அப்போதும் இந்தியாவின் முதல் பெண் பாதுகாப்புதுறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் என்று பலர் கூறினர். ஆனால் 1975 களிலும், 1980 முதல் 1982 வரையிலும் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்தவர் அதே இந்திராகாந்திதான்.