Skip to main content

ஸ்டெர்லைட் வேதாந்தாவின் எதிர்ப்பும், நீதிமன்றத்தின் தீர்ப்பும்!

Published on 28/05/2019 | Edited on 28/05/2019

ஆஸ்திரேலியா. நமது நக்கீரனில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் முதலாளியும், மோடியின் நண்பருமான ஸ்டெர்லைட் அனில் அகர்வாலின் உலகளாவிய அயோக்கியத் தனங்களை பல கட்டுரைகளில் தோலுரித்துக் காட்டியுள்ளோம். 01-06-2018 தேதியிட்ட நக்கீரனில் ஸ்டெர்லைட் அகர்வாலின் நிறுவனம் சாம்பியா நாட்டில் உள்ள கோஃபி ஆற்றில் விஷக்கழிவுகளைக் கொட்டி 40,000 மக்களின் குடிநீரையும் அவர்களின் விவசாய நிலங்களையும் பாழ்படுத்தியதை அறிவியல் ஆதாரங்களுடன் எழுதியிருந்தோம்.  கடந்த 10-04-2019 அன்று இங்கிலாந்து உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் அகர்வாலுக்கு எதிராக வழங்கியுள்ள தீர்ப்பைப் பற்றி அறிவதற்குமுன் சாம்பியாவில், அகர்வாலின் வேதாந்தா நிகழ்த்திய கொடூரங்களைப் பற்றி ஒரு சிறிய முன்னோட்டம்.

 

vedanthaசாம்பியத் தாமிரம் 

உலகத்தில் உற்பத்தியாகும் மொத்த தாமிரத்தில் ஆறில் ஒரு பங்கு ஆஃப்ரிக்காவில் உள்ள சாம்பியாவில் உற்பத்தியாகிறது. அதில் பெரும்பங்கு சாம்பியாவின் காஃப்யூ நதிதீரத்தில் புதைந்துள்ளது. வேதாந்தா ரிசோர்சசின் துணை நிறுவனமான கேசிஎம் என்ற நிறுவனம்தான் தாமிரக் கனிமத்தை காஃப்யூ நதி தீரத்தில் வெட்டி எடுக்கிறது. இங்கிருந்து வெட்டி எடுக்கப்படும் தாமிரக் கனிமத்தைத் தான் செறிவூட்டி, ஸ்டெர்லைட் அகர்வால் தூத்துக்குடிக்கு கொண்டு வந்து தாமிரக் கம்பிகளை வார்த்தெடுத்தார். எந்தக் கனிமத்தையும் செறிவூட்டியதற்குப் பின்னர்தான் உலோகமாக உருக்க முடியும். வேதாந்தாவும் சாம்பியாவில் வெட்டி எடுக்கப் படும் தாமிரக் கனிமத்தை அங்கேயே செறிவூட்டியது. 

 

sterliteதாமிர விஷம் 

தாமிரக் கனிமத்தைச் செறிவூட்டும் பொழுது ஏராளமான விஷம் வெளியாகும். இந்த விஷம் சுற்றுப்புறச் சூழலைக் கெடுக்காத வகையில் அதனைப் பாதுகாப்பாகக் கையாள வேண்டும் என்ற ஆணையை ஒவ்வொரு சுரங்க நிறுவனத்திற்கும் உலகத்தில் உள்ள அத்தனை நாடுகளும் பிறப்பிக்கும். அப்படித்தான் வேதாந்தாவிற்கும் சாம்பிய அரசாங்கம் உத்தரவிட்டது. ஆனால், சுற்றுப்புறச் சூழலை உலகெங்கும் கொலை செய்யும் கொலைகார நிறுவனமான அகர்வாலின் வேதாந்தா தன் சுரங்க விஷக் கழிவுகளை காஃப்யூ நதியில் கொட்டியது. தன் விஷக் கழிவை வேதாந்தா குடிநீர் ஆற்றில் திறந்து விட்டதைப் போன்ற ஒரு கொடுமை உலகில் வேறெங்கும் இருக்க முடியாது.


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் பிதாமகன் அனில் அகர்வாலின் வேதாந்தா ரிசோர்சஸ் சாம்பியாவின் காஃப்யூ நதிக் கரையில் வாழும் மக்களின் குடிநீரையும், விவசாய நீர்ப் பாசன ஆதாரத்தையும் விஷமாக் கியது. தெள்ளத் தெளிவான தண்ணீர் ஓடிக் கொண்டிருக் கும் ஆற்றிலோ அல்லது அள்ளிப் பருகும் வண்ணம் தண்ணீர் தேங்கியிருக்கும் நீர் நிலைகளிலோ பச்சை, கடும் மஞ்சள், சிவப்பு நிறத்திலான விஷ நீரைக் கொட் டினால், அந் நீர்நிலைகள் அமில நீராக மாறி, இரத்தச் சிவப்பாக மாறும்.

  sterliteவேதாந்தாவின் அமிலநீர் கலந்ததால் பாழாய்ப் போன நீர்நிலை, சாம்பியா தரையில் கொக்கொ கோலாவைக் கொட்டினாலே அதில் உள்ள அமிலத் தன்மை அந்தத் தரையின் நிறத்தை மாற்றுவதை பலர் கண்கூடாகக் கண்டிருக்கலாம். அப்படி இருக்க, அமில நீரைத் தாங்கி நிற்கும் நிலம் என்ன ஆகும் என்பதை சாம்பியாவில் எடுக்கப்பட்ட இந்த படம் காட்டுகிறது. சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்படும் அமில நீரில் கரைந்து நாசமாகிப்போன நிலம், சாம்பியா. (நன்றி: விக்கிமீடியா காமன்ஸ்).

தாமிர விஷம் தரும் நோய்கள் 

தாமிரம் ஒரு விஷ உலோகம். ‘மயில் துத்தம்’ என்பது தாமிர விஷம். அந்த விஷத்தைக் கரைத்துக் குடித்து தற் கொலை செய்து கொண்டவர்கள் ஏராளம். தாமிரம், இரும்பு, கந்தகம் ஆகிய மூன்று தனிமங்களின் சேர்க்கையே தாமிரக் கனிமங்கள். தாமிரம், கந்தகம் இரண்டும், வாந்தி, இரத்தவாந்தி, குறைந்த இரத்த அழுத்தம், மஞ்சள் காமாலை, குடல் நோய்கள், சிறுநீரகப் பழுது, கல்லீரல் பழுது உள்ளிட்ட பல நோய்களை உருவாக்கும். மக்களைத் தாக்கும் இந்த நோய்கள் மண்ணை மட்டும் எப்படி விட்டு வைக்கும்? மண்ணும் பாழானது. வாழ்வாதாரமான விவசாய நிலங்களும் அழிந்தன. சாம்பிய அரசியல்வாதிகள் நம்முடைய அரசியல்வாதிகளைப் போலவே கடைந்தெடுத்த ஊழல் பேர்வழிகள். சாம்பிய மக்களோ பாவம் வாயில்லாப் பூச்சிகள். பொட்டுப் பூச்சிகளாய், புன்மைத் தேரைகளாய் வாழும் அவல நிலையில் உள்ளவர்கள். அவர்களின் நிலை கண்டு பதைபதைத்த சுற்றுப்புறச் சூழல், மனித உரிமை தன்னார்வ நிறுவனங்கள் சாம்பிய மக்களுக்காக போராட்டத்தை முன்னெடுத்தனர். 

சாம்பிய நீதிமன்றத்தின் தீர்ப்பு 

வேதாந்தாவின் நாசகாரச் செயல்களை எதிர்த்து, பாதிக்கப் பட்ட மக்களின் சார்பாக சாம்பியா உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார்கள். சாம்பிய நீதிமன்றம் சுற்றுப்புறச் சூழலை வேட்டையாடியதற்காக, வேதாந்தாவிற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு பத்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. வேதாந்தா அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறை யீடு செய்தது. மேல் முறையீட்டை குமாரசாமிகள் விசாரித்தார்கள். கீழ் நீதிமன்றம் வழங்கிய கண்ட னத்தை மட்டும் அப்படியே விட்டு விட்டு, உலகின் பரம ஏழையான அனில் அகர்வால் மக்களுக்கு வழங்கவேண்டிய நஷ்ட ஈட்டை ரத்து செய்தார்கள்.


வேதாந்தாவை ஒழிப்போம் 

வேதாந்தா ரிசோர்சசின் அக்ரமங்களை உலகிற்குத் தோலுரித்துக் காட்டுவதற்காக இங்கி லாந்தில் தோற்றுவிக்கப்பட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனம் "வேதாந்தாவை ஒழிப்போம்'. இந்நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும் மற்ற மனித உரிமை ஆர்வலர்களும் சாம்பிய நாட் டின் நீதி மன்றத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்காததால், லண்டன் நீதிமன்றத்தில் வேதாந்தாவை எதிர்த்து வழக்கு தொடுத்தார்கள். சென்ற ஆண்டு தூத்துக்குடியில் நடைபெற்ற 13 பேர் படுகொலைக்குப் பிறகு, லண்டன் பங்குச் சந்தையில் இருந்து அனில் அகர்வாலின் வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனம் வெளியேற்றப் பட்டது. 

இங்கிலாந்து நீதிமன்றத்தில் முதல் வழக்கு 

வேதாந்தாவால் நாசமாக்கப்பட்ட பகுதியில் வாழ்கிற, நான்கு சமுதாயங்களைச் சேர்ந்த 1826 சாம்பிய விவசாயிகளும் பொதுமக்களும், "நாங்கள் எங்கள் நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம்; ஆனால், அங்கே எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. வேதாந்தாவின் தலைமையகம் லண்டனில் தான் உள்ளது; லண்டனைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படுகிற வேதாந்தாவிற்கு, தன் துணை நிறுவனங்கள் செய்கிற தவறுகளால் பாதிக்கப் படுகிறவர்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு  இருக்கிறது. அந்த வகையில், வேதாந்தா ரிசோர்சஸ் தன்னுடைய கடைமையில் இருந்து தவறி விட்டது. எனவே, இங்கிலாந்தில் உள்ள இந்த நீதி மன்றம் எங்களுக்கு நியாயம் வழங்க வேண்டும்’’என்று இங்கிலாந்து நீதிமன்றத்தில் 2015ஆம் ஆண்டில் வழக்கு தொடர்ந்தார்கள். 

வேதாந்தாவின் எதிர்ப்பு 

இந்த வழக்கின் பிரதிவாதிகளான வேதாந்தா நிறுவனம், “இந்த வழக்கிற்கும் இந்த நீதி மன்றத் திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை; வாதிகள் பாதிக்கப்பட்டதாகக் கூறுவது சாம்பியா நாட்டில்; அந்த நாட்டில் ஏற்கெனவே இந்த வழக்கு நடந்து முடிந்துவிட்டது; ஆகவே இங்கிலாந்து நீதி மன்றத்திற்கு தன் அதிகார வரம்பிற்கு அப்பால் உள்ள சாம்பிய நாட்டின் வழக்கை விசாரிக்க உரிமையில்லை''’என்று வாதிட்டது. 

இங்கிலாந்து கீழ்நீதிமன்றத்தின் தீர்ப்பு 

கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் வழக் கறிஞர்கள் வாதிட்டாலும், இங்கிலாந்து கீழ் நீதி மன்றம் வேதாந்தாவின் வாதங்களைக் கொஞ்சமும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. சாம்பியா வில் வேதாந்தாவின் துணை நிறுவனமான KCM plc சுற்றுச்சூழல் கேடுகளை விளைவித்திருந்தாலும், தன்னுடைய துணை நிறுவனத்தின் செயல்பாடு களைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு வேதாந் தாவிற்கு உள்ளது. அதேபோல் அங்கே ஏற்பட்ட நாசகார அழிவுகளுக்கும், மக்களுக்கு ஏற்பட்ட கொடும் நோய்களுக்கும், தாய் நிறுவனம் என்ற முறை யில், லண்டனைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் வேதாந்தா ரிசோர்சஸ் பொறுப்பேற்க வேண்டும். ஆகையினால், வேதாந்தா ரிசோர்சசிடம் நஷ்ட ஈடு கேட்டு இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க சாம்பிய மக்களுக்கு உரிமையும் உள்ளது; அந்த வழக்கை இங்கிலாந்து நீதிமன்றங் கள் விசாரிக்க அதிகாரமும் உள்ளது''’என்று 2016-ஆம் ஆண்டு மே மாதம், இங்கிலாந்து நீதி மன்ற நீதிபதி கோல்சன் தீர்ப்பளித்தார். [2016] EWHC 975 (TCC)). இத்தீர்ப்பை எதிர்த்தும் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் வேதாந்தா மேல்முறையீடு செய்தது. ஆனால், இந்த மேல் முறையீடும் 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது.

இங்கிலாந்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு 

வேதாந்தா, மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து இங்கிலாந்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் முடிவை வேதாந்தா மட்டுமல்ல, உலகின் மிகப் பெரிய சுரங்க நிறுவனங்களான BHP, RioTinto போன்ற நிறுவனங் களும் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்தார்கள். இந்த வழக்கின் தீர்ப்பைக் கடந்த 10/04/2019 அன்று, இங்கிலாந்து உச்ச நீதிமன்றத்தின் மாட்சிமை தாங்கிய நீதிபதிகள் லேடி ஹேல் (தலைவர்), லார்ட் வில்சன், லார்ட் ஹோட்ஜ், லேடி ப்ளாக் மற்றும் லார்ட் பிரிக்ஸ் ஆகியோர் வழங்கினர் (வழக்கு எண்: [2019] UKSC 20). இந்தத் தீர்ப்பை மாண்பமை நீதிபதி லார்ட் பிரிக்ஸ் அவர்கள்தான் எழுதினார். அவருடைய தீர்ப்பை மற்ற நீதிபதிகள் அனைவரும் முழு மனதோடு ஏற்றுக்கொண்டு தீர்ப்பை வழங்கினார்கள். அந்தத் தீர்ப்பின் சாராம்சம்:

1. இங்கிலாந்தைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ஒரு நிறுவனம் (வேதாந்தா ரிசோர்சஸ்), அதன் துணை நிறுவனங்கள் வெளி நாடுகளில் (சாம்பியா) ஏற்படுத்தும் அழிவுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டுமா என்பது விவாதத்திற்குரியது. ஆனால், அந்த வாதத்தை ஏற் றுக் கொள்ள வேண்டும் என்றால், இங்கிலாந்தைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் (வேதாந்தா ரிசோர்சஸ்), தன்னுடைய துணை நிறுவனங்கள் சரியாகச் செயல்படுகின்றனவா என்பதைக் கடுமையாகக் கண்காணித்திருக்க வேண்டும். அடைப்புக் குறிக்குள் விளக்கத்திற்காக நிறுவனங்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

2. சில சூழ்நிலைகளில், இங்கிலாந்தைத் தலை மையகமாகக் கொண்டு செயல்படும் நிறுவனத்தின் துணை நிறுவனங்கள் எந்த நாட்டில் அழிவுகளை ஏற்படுத்தியிருந்தாலும், அந்த அழிவால் பாதிக்கப் பட்டவர்களின் வழக்கை விசாரிக்க ஆங்கிலேய நீதி மன்றங்களுக்கு அதிகாரம் உள்ளது. இந்தத் தீர்ப்பு, வேதாந்தா அகர்வாலை மட்டுமல்ல, உலகின் மிகப் பெரிய சுரங்க நிறுவனங்களையும் பெருங்கவலை கொள்ள வைத்துள்ளது. ஏனென்றால், இந் நிறுவனங்களின் தலைமையகமும் இலண்டனில் தான் உள்ளது. இந்தத் தீர்ப்பின் படி, தூத்துக்குடியில் ஸ்டெர் லைட்டின் விஷ மாசுக்களால் பாதிக்கப்பட்ட மக்கள் இங்கிலாந்தில் வழக்கு தொடர முடியும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது. 


-டாக்டர் அண்ணாமலை மகிழ்நன், Ph.D.,