Skip to main content

கருத்தைக் கருத்தால் வெல்ல முடியாதவர்கள் தனி மனிதத் தாக்குதலை முன்னெடுப்பார்கள்- ஆளூர் ஷாநவாஸ் பேச்சு!

Published on 06/06/2020 | Edited on 06/06/2020

 

io


தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்துகொண்ட காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியை பா.ஜ.க.வை சேர்ந்த கரு.நாகராஜன் தனிப்பட்ட முறையில் அவதூறாகப் பேசியதாகச் சர்ச்சை எழுந்துள்ளது. இதுதொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷானவாஸிடம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில் வருமாறு,
 


தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்துகொண்ட காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியை பா.ஜ.க.வை சேர்ந்த கரு.நாகராஜன் தனிப்பட்ட முறையில் அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகின்ற நிலையில், அந்த விவாதத்தில் பேசிய ஜோதிமணி, எதிர்க்கட்சிகள் மக்களுக்கு இந்தக் கரோனா நேரத்தில் உதவி செய்யவில்லை என்றால் பிரதமர் உள்ளிட்டவர்களைப் பொதுமக்கள் கல்லால் அடித்திருப்பார்கள் என்று பேசினார். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்? 

"ஜோதிமணி மோடி குறித்து தனிமனித தாக்குதல் செய்யவில்லை. 'பப்பு' எனச் சொல் என்று குழந்தையைச் சொல்லச் சொல்லி தனிமனித தாக்குதலை முதலில் செய்தவர் பிரதமர் மோடி. அவர்கள் தனிமனித தாக்குதல் என்று சொல்வதுதான் எனக்கு ஆச்சரியமாக இருக்கின்றது. ராகுல் ஒன்றும் மோடியைப் பார்த்து தனிமனித தாக்குதல் செய்யவில்லை. சோனியா காந்தியை இத்தாலி இறக்குமதி என்று பா.ஜ.க.-வினர் இன்றைக்கும் பேசி வருகின்றது. ஆனால் அதுகுறித்து சோனியா காந்தி இதுவரை பேசியதில்லை. எனவே நாகரிகத்தைப் பற்றி, பண்பாட்டைப் பற்றி யாருக்கும் பாடமெடுக்கும் இடத்தில் பா.ஜ.க. இல்லை. அவர்களுக்கு அந்தத் தகுதி எப்போதும் இருந்தது இல்லை. விவாதங்களில் அவர்கள் கட்டற்று பேசுகிறார்கள். என்ன நினைக்கிறார்களோ அதைப் பேசுகிறார்கள். அநாகரிகமாகத் தொடர்ந்து பேசி வருகிறார்கள். 
 

 


அவர்களுக்கு விவாதங்களின் மீது நம்பிக்கை கிடையாது. ஊடகங்களில் போய்த் தகராறு செய்வதும், தொலைக்காட்சி அலுவலகங்களின் மீது அவர்கள் ஆதராளர்கள் தாக்குதல் நடத்துவது என்றும் தொடர்ச்சியாக இந்த மாதிரி சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது. அவர்களுக்கு அடுத்தவர்கள் பேசுவதைக் கேட்கவே விருப்பம் இல்லை என்பது மட்டும் நூறு சதவீதம் உண்மையாக இருக்கிறது. கருத்தைக் கருத்தால் வெல்ல முடியாதவர்கள் இந்த மாதிரி தனி மனிதத் தாக்குதலை முன்னெடுப்பார்கள். கரு. நாகராஜன் தொலைக்காட்சி விவாதங்களில் எப்படி எல்லாம் நடந்து கொண்டுள்ளார் என்ற வீடியோக்கள் தற்போது வாட்ஸ் அப்பில் வெளியாகிக் கொண்டுள்ளது. ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் திருமுருகன் காந்தியைத் தேவையில்லாமல் வம்பிழுக்கும் காட்சியை அனைவரும் பார்த்திருப்போம். இப்போது ஜோதிமணி கூறிய ஒரு வார்த்தையைப் பிடித்து தொங்கிக்கொண்டிருக்கும் இவர்கள், திருமுருகன் காந்தி நாகரிகமாகத்தானே பேசி கொண்டு வந்தார். அவர் என்ன மோடியைத் தரக்குறைவாக பேசினாரா, அவரை ஏன் அவமானப்படுத்த முயன்றீர்கள். இந்த மாதிரியான ஆட்கள் மக்கள் முன் நிச்சயம் தலைகுனிவார்கள்" என்றார்.