Skip to main content

16ஆம் நூற்றாண்டில் போரில் வீரமரணம் அடைந்தவர்களின் வீரக்கல் கண்டுபிடிப்பு!

Published on 11/07/2018 | Edited on 11/07/2018

சேலம் இரும்பாலை அருகே போரில் வீரமரணம் அடைந்தவர்களுக்கான வீரக்கல் சேலம் வரலாற்று ஆய்வு மையத்தால் கண்டறியப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. கெங்கவல்லி மின்வாரியத்தில் பணிபுரியும் செந்தில்குமார், ராமச்சந்திரன் ஆகியோர் கொடுத்த தகவலின் பேரில் சேலம் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த ஆறகழூர் பொன்.வெங்கடேசன், பெருமாள் ஆசிரியர், மருத்துவர் பொன்னம்பலம், ஜீவநாராயணன், கவிஞர் மன்னன், வீரமணி ஆகியோர் அடங்கிய குழு சேலம் இரும்பாலைக்கு அருகே உள்ள திருமலைகிரி ஊராட்சி வேடுகாத்தான்பட்டி கிராமத்தில் 8/07/2018 ஞாயிற்று கிழமை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு உள்ள தாமரை ஏரியின் கிழக்கு பகுதியில் சாலையின் அருகே ஒரு வீரக்கல் கண்டறியப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.
 

 

 

பெருங்கற்காலம் துவங்கி இறந்தவர்களுக்கு உலகமெங்கும் நினைவுகற்கள் எடுக்கப்பட்டாலும் போரில் இறந்த வீரர்களுக்கு வீரக்கல் எடுப்பது சிறப்பான ஒன்றாகும். பழங்காலத்தில் இருந்தே ஆநிரை மீட்டல், ஆநிரை காத்த வீரர்களுக்கு நடுகல் எடுக்கும் வழக்கம் இருந்து வந்துள்ளது. புலியோடு போரிட்டு இறந்த வீரர்கள், பயிர்களை அழித்த காட்டுப்பன்றி வேட்டையின் போது இறந்த வீரர்களுக்கும் நடுகல் எடுக்கப்பட்டது. வேடுகாத்தான்பட்டி கிராமத்தில் கண்டறியப்பட்டுள்ள நடுகல்லானது போரில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு எடுக்கப்பட்டுள்ள வீரகல்லாகும்.

 

 


  In the 16th century, the heroic discovery of the war heroes!


 

ஒரு பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக வீரக்கல் செதுக்கப்பட்டுள்ளது. இக்கல்லின் உயரம் 95 செ.மீ, அகலம் 126 செ.மீ. இதில் போர் புரியும் நிலையில் தரையில் நின்றபடி இரு வீரர்களும், குதிரையில் அமர்ந்து போர்புரியும் ஒரு வீரனும், தனியாக ஒரு குதிரையும் காட்டப்பட்டுள்ளது. வலது புறம் வீரக்கல்லானது மேற்புறம் உடைந்துள்ளது. வலது ஓரத்தில் உள்ள வீரனின் உயரம் 64 செ.மீ. தலை முடியானது அள்ளி முடியப்பட்டு உருண்டை வடிவில் கட்டப்பட்டுள்ளது. காதுகளில் அணிகலன், கழுத்தில் சவடியும் சரபளியும், தோள்களில் தோள் வளையமும் காட்டப்பட்டுள்ளது. வலது கரமானது ஓங்கிய நிலையில் உள்ளது. மணிக்கட்டுக்கு மேல் உள்ள பகுதி உடைந்திருப்பதால் கையில் உள்ள ஆயுதம் எது என்பதை அறிய முடியவில்லை. இடது கரத்தால் அருகே குதிரை மீது அமர்ந்துள்ள வீரனின் தலைமுடியை பிடித்து அவனை கொல்லும் நிலையில் உள்ளது. இடுப்பில் குறுவாள் உள்ளது. அரை ஆடை அணிந்துள்ளான். ஆடைமுடிச்சு வலதுபுறம் பறக்கும் நிலையிலும் மற்றொரு முனை இரு கால்களுக்கு நடுவிலும் காட்டப்பட்டுள்ளது. வலதுகால் சற்று மடித்து பின்னோக்கிய நிலையிலும் இடது காலை மடித்து முன்னேறி போரிடும் நிலையில் வீரன் உள்ளான். இந்த வீரனின் இடதுபுறம் இரண்டாவதாக குதிரையின் மீது அமர்ந்த நிலையில் ஒரு வீரன் உள்ளான். இவன் உயரம் 43 செ.மீ ஆகும். இந்த குதிரை வீரன் முடியை அருகில் உள்ள எதிரி வீரன் பற்றியுள்ளான். குதிரை வீரன் முகம் வலது புறம் திரும்பிய நிலையில் தன் வலது கையில் உள்ள வாளால் எதிரி வீரனின் மார்பில் குத்துவதைப்போல் போர்காட்சி உள்ளது. இந்த இரு வீரர்களுக்கு அருகே மூன்றாவதாக ஒரு வீரன் உள்ளான் இவன் உயரம் 65 செ.மீ. அள்ளி முடிந்த உருண்டை வடிவமான கொண்டை, காதிலும், கழுத்திலும் அணிகலன்கள் தேய்ந்த நிலையில் உள்ளது. தோள் வளையம் காட்டப்பட்டுள்ளது. வீரனின் வலது கையை உயர்த்திய நிலையில் ஒரு வாளை பற்றி எதிரியை வீழ்த்த தயாரான நிலையில் உள்ளது. இடது கையில் ஈட்டி ஒன்றை பற்றியுள்ளான். வயிற்று கட்டு, அரையாடை, இடுப்பில் குறுவாள் உள்ளது. ஆடை முடிச்சு இரு கால்களுக்கு நடுவே உள்ளது. வலது காலை பின் வைத்து இடது காலை முன்வைத்து எதிரியை தாக்க செல்லும் நிலையில் வீரன் காட்டப்பட்டுள்ளான். இந்த வீரனின் இடது புறம் குதிரை ஒன்று காட்டப்பட்டுள்ளது. இதன் உயரம் 38 செ.மீ ஆகும். குதிரையானது முன்னிறு கால்களில் ஒரு காலை உயர்த்தி பாய்ந்து செல்ல தயாராகும் நிலையில் உள்ளது. குதிரையின் மீது வீரன் காணப்படவில்லை. அவன் போரில் இறந்து கீழே விழுந்திருக்கலாம். போரில் இறந்த வீரர்களுக்காக எடுக்கப்பட்ட வீரக்கல் இதுவாகும்.


 

In the 16th century, the heroic discovery of the war heroes!


 

16ஆம் நூற்றாண்டில் மதுரை நாயக்க மன்னர்களின் ஆட்சியின் கீழ் பாளையக்காரர்களாக  இப்பகுதியை கெட்டிமுதலி வம்சத்தை சேர்ந்தவர்கள் ஆண்டுவந்தனர். அப்போது போர் ஏற்படும் காலங்களில் மதுரை நாயக்கர் மன்னர்களுக்கு ஆதரவாக இவர்கள் போரில் ஈடுபட்டனர். கி.பி. 1659 மற்றும் கி.பி. 1667 ஆம் ஆண்டுகளில் மதுரை நாயக்க மன்னருக்கும் மைசூர் உடையார் மன்னருக்கும் போர் நடைபெற்றது. அந்த போரில் கெட்டி முதலி படையினர் மதுரை மன்னருக்கு ஆதரவாய் போரில் கலந்து கொண்டனர். அந்த போரில் இறந்த கெட்டிமுதலி படை வீரர்களுக்கு எடுக்கப்பட்ட வீரக்கல்லாக இதை கருதலாம். 13 ஆம் நூற்றாண்டுக்கு பின் நடுகற்களில் கல்வெட்டு பொறிக்கும் வழக்கம் குறைந்து போனதால் இறந்த வீரர்களின் பெயர்களை அறிய முடிவதில்லை. இந்த வீரக்கல்லுக்கு அருகே சுண்ணாம்பு கோட்டை என ஒரு பகுதி இருந்ததாக ஊர் மக்கள் கூறுகிறார்கள். இது ஆயுதங்கள் பாதுகாத்து வைக்கும் இடமாக இருந்திருக்கலாம். இந்த பகுதி இப்போது சுடுகாடாக உள்ளது. இப்பகுதியில் மேலும் ஆய்வு செய்தால் இன்னும் பல வரலாற்று தடயங்கள் கிடைக்கலாம் என சேலம் வரலாற்று ஆய்வுமையத்தினர் தெரிவித்தனர்.