ஃபுட் ஸ்டெப்ஸ் புரொடைக்ஷன் தயாரிப்பில், இயக்குநர் சிவராமன் இயக்கத்தில், சோனியா அகர்வால், விக்ராந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வில்’ (உயில்). கோர்ட் ரூம் டிராமாவாக உருவாகியுள்ள இப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது. ஒரு குடும்பத்தில் ஒரு உயில் ஏற்படுத்தும் பிரச்சனை, நீதிமன்றத்திற்கு வழக்காக வருகிறது. அந்த வழக்கு என்ன ஆனது? உயிலின் பின்னால் இருக்கும் தியாகம் என்ன? என்பது தான் இந்தப்படம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்றப் பின்னணியில், விக்ராந்த், சோனியா அகர்வால் பாத்திரங்கள் ஓவியமாக வரையப்பட்டிருக்கும், வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. இப்படத்தில் சோனியா அகர்வால் முதன்மைப் பாத்திரத்தில், நீதிபதியாக மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சிறப்புத் தோற்றத்தில் விக்ராந்த் போலீஸ் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
வழக்கறிஞராக பணியாற்றிய சிவராமன், தான் சந்தித்த உண்மையான வழக்கை, மையமாக வைத்து இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். சோனியா அகர்வால் சகோதரர் சௌரப் அகர்வால் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். முழுக்க முழுக்க கோர்ட் டிராமாவாக உருவாகியுள்ள இப்படம் சென்னை மற்றும் கோத்தகிரியில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் விரைவில் திரைக்கு கொண்டு வரும் வேலைகள், தற்பொது பரபரப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் டீசர், டிரெய்லர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.