கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நித்யா மெனன், ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காதலிக்க நேரமில்லை’. ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தில் யோகி பாபு, வினய், லால், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இப்படம் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விளைவாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் முதற்கொண்டு வெளியான அனைத்து போஸ்டர்களிலும் நித்யா மெனன் பெயரை முதலில் குறிப்பிட்டு அடுத்ததாக ஜெயம் ரவி பெயரை படக்குழு குறிப்பிட்டிருந்தனர்.
இந்தப் படத்தின் முதல் பாடலான ‘என்னை இழுக்குதடி...’ பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஏ.ஆர் ரஹ்மான் மற்றும் தீ குரலில் துள்ளல் கலந்த இசையுடன் அமைந்துள்ள இப்பாடல் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து இரண்டாவது பாடலாக ‘லாவெண்டர் நேரமே...’ என்ற பாடல் வெளியானது. இதுவும் ரசிகர்களின் கவனத்தை பெற்றது.
இந்த நிலையில் இப்படத்தின் அடுத்த பாடலாக ‘இட்ஸ் பிரேக் அப் டா...’(IT'S A BREAK-UP DA) லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. இப்பாடலை ஸ்ருதிஹாசன், ஆதித்யா ஆர்.கே. ஆகியோர் பாடியுள்ளனர். சினேகன் வரிகள் எழுதியுள்ளார். காதல் தோல்விக்குப் பிறகு நித்யா மேனன் மற்றும் ஜெயம் ரவி பாடும் விதமாக இப்பாடல் அமைந்துள்ளது. இப்படம் பொங்கலை முன்னிட்டு வருகிற 14ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.