
ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய கன்னடப் படம் 'காந்தாரா'. கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பரில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. கன்னடத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டும் வெளியானது. இப்படத்தைப் பார்த்த திரை பிரபலங்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் படக்குழுவினரை வெகுவாக பாராட்டினர். இப்படம் உலகம் முழுவதும் ரூ.400 கோடி வசூலித்ததாகக் கூறப்பட்டது.
இந்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் ‘கந்தாரா தி லெஜண்ட் - சாப்டர் 1’ என்ற தலைப்பில் உருவாகி வருகிறது. காந்தாரா படத்தின் ப்ரீக்குவலாக உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் மற்றும் போஸ்டர் முன்னதாக வெளியானது. கன்னடம், தமிழ், இந்தி உள்ளிட்ட ஏழு மொழிகளில் இப்படம் வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கர்நாடகாவில் நடந்து வருவதாக கூறப்படும் நிலையில் அதில் ஜூனியர் ஆர்டிஸ்ட் ஒருவர் இறந்துள்ளார். கேரளாவை சேர்ந்த கபில் என்றவர் படப்பிடிப்புக்கு இடைவேளையில் மதிய உணவுக்குப் பிறகு கர்நாடகா உடுப்பி மாவட்டம் கொல்லூரில் உள்ள சௌபர்ணிகா ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது நீரில் சிக்கிக்கொண்டுள்ளார். அவரை உள்ளூர் வாசி ஒருவர் காப்பாற்றினார். ஆனால் பின்பு அவர் இறந்துவிட்டார். இந்த சம்பவம் படக்குழுவினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கொல்லூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.