Skip to main content

‘ஆபரேஷன் சிந்தூர்’ எதிரொலி; குழந்தைக்கு ‘சிந்தூரி’ என்று பெயரிட்ட தம்பதி!

Published on 08/05/2025 | Edited on 08/05/2025

 

Bihar Couple names baby Sindoori Echoes of Operation Sindoor

‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா நேற்று நள்ளிரவு ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 25 நிமிடங்கள் நடத்திய இந்த தாக்குதலில், பயஙகரவாத முகாம்கள் தரைமட்டமானது மட்டுமல்லாமல், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய அமைப்புகளில் தொடர்புடைய 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் 26 சுற்றுலாப் பயணிகளை கொடூரமாக சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ’ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தாக்குதல் நடவடிக்கைக்கு எதிராக காஷ்மீர் எல்லையில், பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால், இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. 

ஆபரேஷன் சிந்தூர் பெயர் எதிரொலியால், புதிதாக பிறந்த பெண் குழந்தைக்கு சிந்தூரி என்ற பெயர் வைக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா தாக்குதல் நடத்திய அதே நாளில், பீகாரின் கதிஹார் மாவட்டத்தில் உள்ள மகேஷ்பூர் கிராமத்தில் வசிக்கும் குந்தன் குமார் மற்றும் சிம்பிள் தேவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்தியா நடத்திய தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயர் வைத்ததன் காரணமாக, தங்கள் மகளுக்கும் ‘சிந்தூரி’ என்று பெயர் வைத்துள்ளனர் குந்தன் குமார் மற்றும் சிம்பிள் தேவி. இது குறித்து அவர்கள் கூறுகையில், ‘பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலில் வெற்றியடைந்த அதே நாளில், எங்கள் குழந்தை பிறந்துள்ளது. இந்த இரட்னும் எங்கள் குடும்பத்திற்கு பெருமை சேர்க்கும் விஷயம்’ என மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளனர். 

பஹல்காம் தாக்குதலில் கணவரை இழந்த பெண்களுக்காகப் பழிதீர்க்கவே, ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணம் ஆன பெண்கள், நெற்றி வடுகில் வைக்கும் குங்குமத்திற்கு, ‘சிந்தூர்’ என இந்தி மொழியில் அழைக்கப்படும். பஹல்காம் தாக்குதலில் பல பெண்கள், கண் முன்னே தங்களது கணவர்களை இழந்ததாகவும், அவர்கள் நெற்றியில் வைக்கும் குங்குமத்தை குறிக்கும் ராணுவ நடவடிக்கைக்காகவும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

சார்ந்த செய்திகள்