
காஷ்மீரில் ‘மினி சுவிட்ஸர்லாந்து’ என அழைக்கப்படும் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த மாதம் 22ஆம் தேதி பயங்கரவாதக் கும்பல் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில், 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு எதிராக இந்திய அரசியல் தலைவர்கள் அல்லாது உலக அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். இத்தாக்குதல் தொடர்பாக இந்தியாவும் பாகிஸ்தானும் பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்தனர். இதனால் இரு நாடுகளின் எல்லையில் பதற்ற நிலை உருவானது.
இதையடுத்து இப்போது பயங்கரவாதிகளின் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் சார்பில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று (07.05.2025) நள்ளிரவு 01.44 மணி அளவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் முப்படைகள் கூட்டாக இணைந்து அதிரடி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 70 பயங்கரவாதிகள் உயிரிழந்ததாகவும், 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் இந்த பதில் தாக்குதலுக்கு இந்தியர்கள் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் திரைப்பிரபலம் ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான், சிவகார்த்திகேயன் ஆகியோர் தங்களது எக்ஸ் பக்கம் வாயிலாக வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில் இளையராஜா, “மன்னன் எவ்வழியோ, மக்கள் அவ்வழி” என தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.