இயக்குநர் விஷ்ணுவர்தன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் இயக்கியுள்ள படம் நேசிப்பாயா. இந்தப் படத்தில் மறைந்த நடிகர் முரளியின் மகனும் நடிகர் அதர்வாவின் சகோதரருமான ஆகாஷ் முரளி ஹீரோவாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர் நிறுவனம் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ ஆகாஷ் முரளியின் மாமனார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. ’நேசிப்பாயா’ படத்தின் இசை வெளியீட்டு விழா. இதில் கலந்து கொண்டு பேசிய ஆகாஷ் முரளி, “நிகழ்வு முழுவதும் இருந்து எங்கள் படத்திற்கு ஆதரவு கொடுத்திருக்கும் சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி. படத்தின் தயாரிப்பாளர் பிரிட்டோ அங்கிள் மற்றும் சிநேகா பிரிட்டோவிற்கு நன்றி. என் மேல் நம்பிக்கை வைத்த என் குரு விஷ்ணுவர்தன் சாருக்கு நன்றி. அற்புதமான அனுபவமாக இந்த படம் இருந்தது. நிறைய கற்றுக் கொண்டேன். அற்புதமான பாடல்கள் கொடுத்த யுவன் சாருக்கு நன்றி. அதிதி, சரத் சார், கல்கி எல்லோருக்கும் நன்றி. அண்ணா, அம்மா, அக்கா எல்லோருக்கும் நன்றி. என் தாத்தாவும் அப்பாவும் என்னையும் என் அண்ணனையும் சினிமாவில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். அவர்கள் இப்போது இல்லை என்றாலும் நிச்சயம் சந்தோஷம் அடைந்து இருப்பார்கள். படம் ஜனவரி 14 அன்று வெளியாகிறது. பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றார்.
பின்பு அவரிடம் அப்பாவிடம் பிடித்த விஷயங்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், “அப்பாவுடைய சிரிப்பு ரொம்ப பிடிக்கும். அவர் பயங்கர கோவக்காரர். சீக்கிரம் கோபப்பட்டுவிடுவார். ஆனால் தன்னுடைய சிரிப்பு மூலம் மயக்கிவிடுவார். அந்த சிரிப்பு எனக்கும் வரவேண்டும் என வேண்டிக்கிறேன். அவர்தான் என் ஹீரோ. அவரைத் தான் நான் பின்பற்றுகிறேன்” என நெகிழ்ச்சியுடன் பேசினார்.