Skip to main content

50 வருடங்களுக்கு முன்பு தலைப்புச் செய்தியில் வந்த விஷ ஊசி வழக்கு - திலகவதி ஐபிஎஸ் பகிரும் தடயம்: 06

Published on 10/04/2023 | Edited on 10/04/2023

 

 Thilagavathi IPS (Rtd) Thadayam : 06

 

1970-களில் தமிழ்நாட்டின் தலைப்புச் செய்தியாக வந்த பிரபலமான ஒரு வழக்கு குறித்து தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி நம்மிடம் விவரிக்கிறார்.

 

வேணுகோபாலின் வீட்டில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது ஒரு கடிதம் சிக்கியது. கொலை செய்யப்பட்ட உள்ளான் செட்டியார் தான் செய்த தவறுகள் அனைத்தையும் ஒப்புக்கொள்வது போல் எழுதிய கடிதம் தான் அது. அவர்களுக்கு அப்போது அந்தக் கடிதத்தின் முக்கியத்துவம் தெரியவில்லை. செங்கல்பட்டு போலீசாரிடம் அதுகுறித்த தகவலைத் தெரிவித்துவிட்டு அவர்கள் சென்றனர். திடீரென்று தங்களுடைய வீட்டிற்கு வந்த அதிகாரிகள் ஏன் சோதனை செய்தனர் என்று வேணுகோபாலும் மர்ம கும்பலும் யோசித்தனர். தட்சிணாமூர்த்தியின் மீது சந்தேகம் வந்தது.

 

தட்சிணாமூர்த்தியைக் கொலை செய்ய முடிவு செய்தனர். அவரை ஏமாற்றி பெங்களூருக்கு அழைத்துச் சென்றனர். சித்தூர் பாலத்திற்கு அருகில் அவரைக் கொலை செய்து, உடலை எரித்து தூக்கி வீசினர். தட்சிணாமூர்த்தியைக் காணவில்லை என்று அவருடைய தந்தை போலீசில் புகார் கொடுத்தார். ஆனால் அந்த வழக்கில் முன்னேற்றமில்லை. இந்த நேரத்தில் மர்ம கும்பலைச் சேர்ந்த அயூப் என்பவன் காதர் என்பவனை அழைத்து வந்து மர்ம கும்பலில் உள்ள மற்றவர்களை சுங்க அதிகாரிகள் என்று அவனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தான். ஆனால் காதர் உண்மையிலேயே சுங்க அதிகாரிகளுக்குத் தகவல் கொடுப்பவன். 

 

கடத்தல் தொடர்பாக என்ன தகவல் தெரிந்தாலும் தங்களிடம் சொல்ல வேண்டும் என்று இந்த கும்பல் காதரிடம் சொல்கிறது. இதுபோன்றே தம்பி என்பவர் குறித்து காதர் இந்த கும்பலிடம் தெரிவிக்கிறான். அவரையும் இந்த கும்பல் கடத்துகிறது. வழக்கம்போல் ஊசி செலுத்துகிறது. அவரைக் கொன்று சித்தூரில் வீசிவிட்டுச் செல்கிறது. இந்த முறை காதருக்கு பணத்தில் நிறைய பங்கு வழங்கப்பட்டது. சதக் இப்ராகிம் என்பவர் பற்றியும் காதர் இதேபோன்ற தகவல் கொடுத்து அவரும் மர்ம கும்பலால் கொல்லப்படுகிறார். ஆந்திராவில் வீசப்படுகிறார்.

 

அதன் பிறகு முகமது சாலிக் என்பவர் பற்றி காதர் தகவல் கொடுக்கிறான். அவரையும் வழக்கம்போல் கடத்திக் கொன்று ஆந்திராவில் வேறு ஒரு இடத்தில் வீசிவிட்டுச் செல்கின்றனர். இதுவரை அவர்கள் ஆறு கொலைகள் செய்துள்ளனர். தைக்கா தம்பியின் வழக்கில் முகமத் தம்பி, காதர் தான் தங்களை சுங்கத்துறை அதிகாரிகளிடம் அழைத்துச் சென்றதாகக் கூறியதால் அந்த சுங்கத்துறை அதிகாரிகளை சந்திக்க வேண்டும் என்று போலீசார் முடிவு செய்தனர். போலீசாரைக் கண்டவுடன் அந்த கும்பலில் இருந்த வேணுகோபால் அப்ரூவராக மாற முடிவு செய்கிறான்.

 

இதன் மூலம் மீதமுள்ள அத்தனை பேரையும் கண்டறிந்து போலீசார் கைது செய்தனர். அனைவரும் அவர்களாகவே நீதிமன்றத்தில் உண்மைகளைச் சொல்லிவிட்டனர். அவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. போலீசார் பல்வேறு மாநிலங்களுக்கும் நாடுகளுக்கும் பயணம் செய்து கொல்லப்பட்டவர்கள் குறித்த உண்மைகளைக் கண்டறிந்தனர். வழக்கு விசாரணையில் நான்கு பேருக்குத் தூக்கு தண்டனை வழங்கப்படுகிறது. மற்றவர்களுக்கும் ஏழு வருடம், ஐந்து வருடம் என்று தண்டனைகள் வழங்கப்பட்டன. வேணுகோபால் அப்ரூவராக மாறியதால் தண்டனையில்லை.

 

உயர்நீதிமன்றத்திலும் இந்த தண்டனைகள் உறுதி செய்யப்பட்டன. குடியரசுத் தலைவருக்குக் கருணை மனு போட்டனர் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள். அதன்மீது எந்த நடவடிக்கையும் இல்லை. அதனால் அவர்கள் உச்சநீதிமன்றம் சென்றனர். நீண்ட காலம் அவர்கள் சிறையில் இருந்ததால் மரண தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக மாற்றியது உச்சநீதிமன்றம். 'விஷ ஊசி வழக்கு' என்று அந்த காலகட்டத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட வழக்கு இது.