8 ஆவது 20 ஓவர் உலகக்கோப்பை தொடர் வரும் 16ம் தேதி துவங்கி நவம்பர் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 16 நாடுகள் இதில் பங்கேற்கின்றன. இந்திய அணி தனது முதல் போட்டியை அக்டோபர் 23ம் தேதி விளையாடுகிறது.
ஆஸ்திரேலியா செல்வதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த ரோஹித் சர்மா “இப்போது இருக்கும் வீரர்களில் 7 முதல் 8 வீரர்களுக்கு ஆஸ்திரேலியா புதிய களம், அதனால் தான் விரைவாக ஆஸ்திரேயாவிற்கு செல்கிறோம். முதலில் பெர்த் சென்று அங்கு மைதானத்தின் தன்மையை பார்க்க உள்ளோம். இரண்டு பயிற்சி ஆட்டங்களில் ஆட உள்ளோம். வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இல்லாதது இந்திய அணிக்கு இழப்புதான் எனினும் அவருக்கு மாற்றாக நம்மிடம் நல்ல பவுலர்கள் உள்ளனர். ஆஸ்திரேலிய மைதானத்தை பொறுத்தே யாருக்கு அணியில் இடம் என்பது தெரியும்” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் மேற்கு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று உலகக் கோப்பையில் தனது பயணத்தை துவங்கியுள்ளது.
பெர்த்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் பயிற்சி ஆட்டத்தில் விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஆட்டத்தை ரோஹித் சர்மா மற்றும் ரிஷாப் பண்ட் துவக்கி வைத்தனர். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 158 ரன்களை எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 52 ரன்களை எடுத்திருந்தார்.
இதன் பின் களமிறங்கிய மேற்கு ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 145 மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக சாம் பின்னிங் 59 ரன்களை எடுத்தார். இதன் மூலம் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. சிறப்பாக பந்து வீசிய இந்திய அணியில் அர்ஷ்தீப் 3 ஓவர்களில் ஒரு மெய்டன் ஓவரை வீசி 6 ரன்களை விட்டு கொடுத்து 3 விக்கெட்களை எடுத்தார். புவனேஷ்வர்குமார் மற்றும் சாஹல் தலா 2 விக்கெட்களை எடுத்தனர்.