Skip to main content

லக்ஷ்மன் என்றைக்கும் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் தான்! ஏன் தெரியுமா..?- கோல்டன் கிரிக்கெட்டர்ஸ் #3

Published on 07/11/2020 | Edited on 07/11/2020

 

vvs

 

v.v.s லக்ஷ்மன் என்றால் வங்கிபுரப்பு வெங்கட சாய் (vangipurapu venkata sai ) லக்ஷ்மன் என்றுதான் பொருள். ஆனால், அது அவர் இந்திய அணிக்கு வருவதற்கு முன்பு வரைதான். இந்திய அணியில் நுழைந்த பிறகு அவரின் v.v.s எனும் முதலெழுத்துக்களுக்கு அர்த்தம் very very special என மாறிப்போனது. அந்தளவிற்கு சிறப்பான ஒரு வீரர்.

 

இந்திய டெஸ்ட் அணியின் மிடில் ஆர்டர் மும்மூர்த்திகளில் சச்சின், டிராவிட்டோடு இவரும் ஒருவர். சச்சின் கொண்டாடப்பட்ட அளவிற்கு டிராவிட் கொண்டாடப்படவில்லை. டிராவிட் பேசப்பட்ட அளவிற்கு லக்ஷ்மன் பேசப்பட்டதில்லை. மரத்திற்கு ஆணி வேர் முக்கியம்தான். அதற்காக மற்ற வேர்களின் துணை தேவையில்லை என அர்த்தம் இல்லை. அவை தன்னுடைய வேலையைச் சரியாகச் செய்துகொண்டிருக்கும். அதுபோலத்தான் இந்திய அணி என்னும் ஆலமரத்தின் ஆணிவேராக இருந்த சச்சினும் ட்ராவிட்டும் தடுமாறும்போதும் கூட லக்ஷ்மன் என்னும் வேர் அணியைப் பல முறை தாங்கிப் பிடித்துள்ளது. 

 

லக்ஷ்மன் என்ற  பெயரைக் கேட்டாலே பலருக்கும் நினைவுக்கு வருவது 2001 கொல்கத்தா டெஸ்ட் போட்டிதான். தொடர்ந்து 16 டெஸ்ட் வெற்றிகளோடு அசைக்க முடியாத அணியாக வலம் வந்த ஆஸ்திரேலியா அணியிடம் இந்திய அணி, ஃபாலோ -ஆன் பெற்று, பேட்டிங் செய்யக் களமிறங்கியது. இந்த போட்டியில், இந்திய அணி வெற்றிபெறும் என யாரேனும் அன்று சொல்லியிருந்தால், டாக்கிங் டாம் கூட சீமான் குரலில் வாய்ப்பில்ல ராசா என்றுதான்  கூறியிருக்கும். ஆனாலும் ட்ராவிட்டும் லக்ஷ்மனும் போராட ஆரம்பித்தார்கள். டிராவிட் சதமடிக்க 281 ரன்கள் குவித்தார் லக்ஷ்மன். வரலாறு படைத்தது இந்தியா. அந்தத் தொடரையும் வென்றது. "2001 டெஸ்ட் தொடர் இந்திய கிரிக்கெட்டின் முகத்தையே மாற்றியது, எங்களால் உலகின் எந்தப் பகுதியிலும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை எங்களுக்குள் விதைத்தது" என்று சமீபத்தில் ஹர்பஜன் சிங் கூறியிருந்தார். 

 

நம்மால் எங்கும் யாரையும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை ஒரு அணிக்கு மிகவும் முக்கியம். அந்த நம்பிக்கைக்கு உரம் சேர்த்தவர் லக்ஷ்மணன். இதன் எதிரொலியாக ஆஸ்திரேலியாவிற்குச் சென்ற இந்திய அணி, டெஸ்ட் தொடரை சமன் செய்தது. ஆஸ்திரேலியா 90களிலும் 2,000-ன் முற்பகுதியிலும் அதிகமாக வெறுக்கப்பட்ட அணி. காரணம் சாதாரணமான ஒன்றுதான். அந்த அணியை வெல்வது கனவிலும் நடக்காத ஒன்று. அதனால் மற்ற நாட்டு ரசிகர்களுக்குக் கோவம் இருக்கும். ஆனால் லக்ஷ்மனுக்கோ ஆஸ்திரேலியா என்றால் கொள்ளைப் பிரியம். எப்போதும் பேட்டிங் ஆடுவதற்கு முன்பு குளித்துவிட்டு வருவாராம் லக்ஷ்மன். ஆஸ்திரேலியா என்றால் ஐஸ் குளியலே போட்டுவிட்டு வருவார் போல. அந்த அளவிற்கு அந்த அணியிடம் உற்சாகமாக ஆடுவார்.

 

ஆஸ்திரேலியாவிடம் லஷ்மனின் டெஸ்ட் ஆவரேஜ் கிட்டத்தட்ட 50. சச்சினுக்குப் பிறகு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்தவர் லக்ஷ்மன். இந்தியா, ஆஸ்திரேலியாவை வென்ற போட்டிகளில் அவரின் ஆவரேஜ் 72. ஆஸ்திரேலியாவிற்கு எதிராகச் சமனான போட்டிகளில் அவரது ஆவரேஜ் 107. ஆஸ்திரேலியாவை வீழ்த்துவதற்கும் அவர்களிடம் வீழாமல் தப்பிக்கவும் லக்ஷ்மனின் பங்கு எவ்வளவு முக்கியம் என்பதை அவரது ஆவரேஜ் கூறும். 2010-ல் ஆஸ்திரேலியாவோடு மொஹாலி டெஸ்டில் வெற்றிபெற காலில் காயத்தோடு போராடுகையில், ரன் சரியாக ஓடாத ஒஜாவை பேட்டை தூக்கிக்கொண்டு லக்ஷ்மன் அடிக்கப் பாய்ந்தது யாராலும் மறக்க முடியாத ஒன்று. 

 

cnc

 

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மட்டுமில்லை, இந்தியா பல நாடுகளுடனான போட்டிகளில் வெல்வதற்கும் சமன் செய்வதற்கும் லக்ஷ்மன் பெரும் பங்காற்றியுள்ளார். குறிப்பாக தற்போதைய இந்திய வீரர்கள் திணறும் வெளிநாட்டு மண்ணில், இந்திய அணி வென்ற போட்டிகளில் அவரின் ஆவரேஜ் 51, சமன் செய்த போட்டிகளில் அவரின் ஆவரேஜ் 58. இதன் மூலமே அவர் இந்தியாவின் வெற்றிக்கு ஒரு முக்கியக் காரணமாகவும், தோல்வியை நோக்கிப் போகும்போதெல்லாம் தடுத்து நிறுத்துபவராகவும் இருந்தார் என்பது தெரியும். ஒட்டுமொத்தமாக வெளிநாட்டு மண்ணில் அவரின் ஆவரேஜ் 42. லக்ஷ்மன் மிடில் ஆர்டரில் பாறையைப் போல் அசைக்க முடியாதவர். அவரை அவுட் ஆக்குவதோ அவரைத்தாண்டி மிடில் ஆர்டரை உடைப்பதோ மிகவும் கடினம்.

 

ஐந்து மற்றும் ஆறாவது பொசிசனில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடம் வகிக்கிறார் லக்ஷ்மன். நீண்டகாலமாக அமைதியாக இந்திய மிடில் ஆர்டரின் தூணாக விளங்கியுள்ளார் லக்ஷ்மன். பொதுவாக டெஸ்ட்களில் முதல் இன்னிங்க்ஸைவிட இரண்டாவது இன்னிங்ஸில் ஆடுவது கடினம். பிட்ச் கடினமாகிவிடும். ஆனால் அதிலும் வி.வி.எஸ்- வெரி வெரி ஸ்பெஷல்தான். முதல் இன்னிங்ஸில் சராசரியாக 44 ரன்கள் அடித்திருக்கும் அவர் இரண்டாவது இன்னிங்ஸில் சராசரியாக 48 ரன்கள் அடித்திருக்கிறார். சுருக்கமாகக் கூறுவதென்றால், லக்ஷ்மன் அதிகம் கொண்டாடப்படாத வீரர். அவரைப் போல் ஒரு பேட்ஸ்மேன் இந்திய அணிக்கு இன்றும் தேவைபட்டுக்கொண்டேதான் இருக்கிறார். லக்ஷ்மன் என்றைக்கும் ரசிகர்களுக்கு ஸ்பெஷல்தான்.

 


சேட்ட பய சார் இந்த சேவாக்... கோல்டன் கிரிக்கெட்டர்ஸ் #2