Skip to main content

திரும்ப வந்துட்டேனு சொல்லு... த்ரில்லர் கதையை மிஞ்சும் ஹர்திக் - மும்பை இந்தியன்ஸ் பின்னணி தகவல்கள்

Published on 27/11/2023 | Edited on 27/11/2023

 

Tell Me I'm Back... Thriller Narrative Hardik - Mumbai Indians Background Information

 

ஐ.பி.எல் மினி ஏலமானது டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு ஐ.பி.எல் அணிகள் தங்களுடைய தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை நவம்பர் 26ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்றைய தினம் எல்லா அணிகளும் தங்களுடைய தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலையும், ரிலீஸ் செய்யப்பட்ட வீரர்களின் பட்டியலையும் ஐ.பி.எல் நிர்வாகத்திடம் சமர்ப்பித்தன. பல்வேறு அணிகளில் இருந்தும் முக்கிய வீரர்கள் தக்கவைக்கப்பட்டு, சரியாக விளையாடாத அதிக தொகை கொண்ட வீரர்கள் மற்றும் சில வீரர்கள் ரிலீஸ் செய்யப்பட்டனர்.

 

இந்நிலையில், கடந்த ஒரு வாரமாகவே குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு வர உள்ளதாகவும், மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா குஜராத் அணிக்கு செல்ல உள்ளதாகவும் தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தன. பின்பு ரோகித் சர்மா மும்பையிலே தொடர்கிறார் எனவும், ஹர்திக் பாண்டியா திரும்பவும் மும்பை அணிக்கு வாங்கப்படுகிறார் எனவும் தகவல்கள் வெளிவந்தன. இருந்தாலும் இது வதந்தியாக இருக்குமோ என்று பல கிரிக்கெட் ரசிகர்களும், விமர்சகர்களும் கணித்தனர். அதன்படியே இது புரளிதான் என்று எண்ணும் அளவுக்கு நேற்று மாலை குஜராத் அணியில் ஹர்திக் பாண்டியா தக்கவைக்கப்பட்டார் என்று அறிவிக்கப்பட்டது. அதேபோல் ரோஹித் சர்மாவும் மும்பை அணியில் தக்க வைக்கப்பட்டார் என்று அறிவிக்கப்பட்டது.

 

கேமரூன் கிரீனை குஜராத்துக்கு வழங்கி, ஹர்திக் பாண்டியாவை மும்பை அணி வாங்க போகிறது என்றும் ஒரு தகவல் பரவி வந்தது. அதுவும் கடைசி நேரத்தில் கேமரூனை மும்பை அணி தக்க வைத்ததன் மூலம், அதுவும் இல்லை என்று உறுதியானது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக இரவு 7 மணி போல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியா  வாங்கப்பட்டார் என உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளிவந்தது. அதேபோன்று மும்பை அணியின் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரரான கிரீன் 17.5 கோடிக்கு பெங்களூரு அணிக்கு விற்கப்பட்டார் எனவும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளிவந்தன. மும்பை அணியில் இருந்து அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட மற்றொரு வீரரான ஜோஃப்ரா ஆர்ச்சரும் விடுவிக்கப்பட்டார்.

 

குஜராத் அணியில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருந்த ஹர்திக் பாண்டியா இரண்டு சீசன்களில் ஒரு சீசனில் கோப்பையை கைப்பற்றியும், மற்றொரு சீசனில் இறுதிப் போட்டி வரை குஜராத் அணியை முன்னேற்றியும் சிறப்பான தலைமை பண்பை வெளிப்படுத்தினார். இந்நிலையில், இவரை ஏன் குஜராத் அணி ரிலீஸ் செய்ய வேண்டும் என்கிற கேள்வி எழுந்தது. தற்பொழுது இதன் பின்னணியில் இருக்கும் சுவாரஸ்ய தகவல்கள் வெளிவந்துள்ளன.

 

ஹர்திக் பாண்டியாவுக்கும் குஜராத் அணிக்கும் இடையே கருத்து முரண்கள் எழுந்ததாகவும், அதனால் பாண்டியா மும்பை அணிக்கு செல்ல முயற்சித்ததாகவும் தகவல்கள் கசிந்தன. மும்பை அணி ஹர்திக் பாண்டியா உடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல்கள் அரசல்  புரசலாக பேசப்பட்டன.

 

ஆனால், குஜராத் அணியின் இயக்குநர் விக்ரம் சோலங்கி தற்போது அளித்துள்ள உள்ள தகவலில், ஹர்திக் பாண்டியா இரண்டு சீசன்களாக எங்கள் அணியை ஒரு முறை சாம்பியனாகவும், மறுமுறை இறுதிப்போட்டிக்கும் அழைத்து சென்றார். ஆனால், அவர் தன்னுடைய சொந்த அணி என்று கருதும் மும்பை அணிக்கு செல்ல விரும்பியதால், நாங்களும் அதற்கு சம்மதம் தெரிவித்தோம் என்று கூறினார். ஹர்திக் பாண்டியா 15 கோடி கொடுத்து வாங்கப்பட்டு இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில், அந்த இழப்பைச் சரிகட்ட கேமரூன் கிரீன், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு 17.5 கோடிக்கு விற்கப்பட்டுள்ளார். மேலும் ரிலீஸ் செய்யப்பட்ட வீரர்களின் மூலமும் மும்பை அணிக்கு 15.25 கோடி மிச்சம் உள்ளது

- வெ.அருண்குமார்