Skip to main content

அன்று ராகுல் ட்ராவிட் சொன்ன ஆறுதல்... மனம் திறக்கும் ரெய்னா!!

Published on 22/08/2020 | Edited on 22/08/2020

 

raina

 

 

தன்னுடைய அறிமுக ஒருநாள் போட்டியில் ரன்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தபோது, ராகுல் ட்ராவிட் ஆறுதல் சொல்லி என்னைத் தேற்றினார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

 

இந்திய அணியின் மூத்த மற்றும் அதிரடி வீரரான ரெய்னா சில தினங்களுக்கு முன்னால் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவருக்கு இந்திய பிரதமர் மோடி உட்பட பலர் வாழ்த்துகளை தெரிவித்தனர். ரெய்னா சர்வதேச கிரிக்கெட்டில் 2005ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். அந்த அறிமுக போட்டியில் அப்போதைய அணி கேப்டன் ராகுல் ட்ராவிட்டுடன் தனக்கு நேர்ந்த அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.

 

அதில் அவர், "ராகுல் ட்ராவிட்டிடம் இருந்து நிறைய கற்றுள்ளேன். என்னுடைய அறிமுக போட்டியில் ரன்கள் ஏதும் எடுக்காமல் விக்கெட்டை பறிகொடுத்தேன். அது என்னை மிகவும் கவலையடையச் செய்தது. இது குறித்து இர்பான்பதான் மற்றும் தோனியிடம் பேசிக்கொண்டு இருந்தேன். அப்போது அங்கு வந்த ட்ராவிட் ஏன் சோகமாக இருக்கிறாய்? என்றார். நாட்டிற்காக விளையாட வாய்ப்பு கிடைத்தது. என்னுடைய நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பார்த்துக்கொண்டு இருந்திருப்பார்கள். நான் வாய்ப்பை வீணாக்கி விட்டேன் என்றேன். இந்த போட்டியில் தானே ரன்கள் எடுக்காமல் ஆட்டமிழந்தாய். அடுத்து இன்னும் போட்டிகள் இருக்கிறதே என்றார். மேலும் அவர் நீ நன்றாக ஃபீல்டிங் செய்வாய் என்று கேள்விப்பட்டேன். அதில் நிருபித்துக்காட்டு என்றார். பின்பு நான் மார்வன் அட்டப்பட்டுவை ரன் அவுட் செய்தேன். ஜாகிர்கானும், ட்ராவிட்டும் என்னைக் கட்டியணைத்து பாராட்டினார்கள். அதன் பின்புதான் நாமும் இந்த குடும்பத்தில் ஒருவர், நம்மாலும் நீண்ட நாட்களுக்கு விளையாட முடியும் என்று நம்பினேன்" எனக் கூறினார்.