ஜப்பானின் டோக்கியோ ஒலிம்பிக்கில், இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பதக்கங்களை வென்று சாதித்தது. நீரஜ் சோப்ரா தடகளத்தில் இந்தியாவிற்கு தங்கத்தை வென்றார். பி.வி சிந்து, தனிநபர் பிரிவில் இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற இந்திய வீராங்கனை என்ற சாதனையை நிகழ்த்தினார். லோவ்லினா ஒலிம்பிக் குத்துச்சண்டையில் பதக்கம் வென்ற மூன்றாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். இந்திய ஆடவர் ஹாக்கி அணி 41 வருடங்களுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றது.
அதேபோல் மீராபாய் சானு பளு தூக்குதலில் வெள்ளிப் பதக்கத்தினையும், மல்யுத்தத்தில் ரவிக்குமார் தஹியா வெள்ளிப் பதக்கத்தினையும் வென்றனர். இன்னொரு மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா வெண்கலம் வென்றார். மேலும், இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதி வரை முன்னேறி ரசிகர்களின் இதயங்களை வென்றது.
இந்நிலையில் நேற்று முன்தினம், இந்தியக் குடியரசுத் தலைவர் ஒலிம்பிக் குழுவிற்கு தேநீர் விருந்து அளித்தார். அதனைத்தொடர்ந்து நேற்று சுதந்திர தின விழாவில் இந்திய ஒலிம்பிக் குழு சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். அதனைத்தொடர்ந்து இன்று பிரதமர் மோடி, ஒலிம்பிக் குழுவிற்குத் தனது வீட்டில் காலை உணவு அளித்துப் பாராட்டினார். அப்போது வீரர்களுடனும் பிரதமர் மோடி உரையாடினார்.
இந்த நிகழ்வின் போது பிரதமர் மோடி, பி.வி சிந்துவிற்கு அளித்த உறுதிமொழியை நிறைவேற்றினார். ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக, வீரர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி, டோக்கியோவிலிருந்து திரும்பியதும் சிந்துவுடன் ஐஸ்கிரீம் சாப்பிடுவதாக உறுதியளித்திருந்தார். அதேபோல் இன்றைய காலை உணவின் போது சிந்துவுடன் பிரதமர் ஐஸ்கிரீம் சாப்பிட்டு உறுதிமொழியை நிறைவேற்றினார்.