இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று பெர்த்தில் தொடங்கியது. முதல் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. நிதானமாக ஆடிய ஆஸ்திரேலியா அணி இரண்டாம் நாளான இன்று 326 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதனையடுத்து ஆடிய இந்திய அணி முதல் 5 ஓவர்களில் 2 விக்கெட்டை பறிகொடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ராகுல் மற்றும் முரளி விஜய் முறையே 2 மற்றும் 0 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.நிதானமாகா ஆடிய புஜாரா 103 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பிறகு ஜோடி சேர்ந்த கோலியும், ரஹானேவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். கோலி 82 ரன்னிலும், ரஹானே 51 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா அணியின் மிச்சேல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.