Skip to main content

1 ஓவர் 36 ரன்கள்... ஐ.பி.ல். அணிகளின் கவனத்தை ஈர்த்த சிக்சர் புயல் ஹஸ்ரத்துல்லா சசாய்...?

Published on 02/11/2018 | Edited on 02/11/2018

சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை லீக் போட்டிகளில் பலமான இலங்கை அணியை 91 ரன்கள் வித்தியாசத்திலும், பங்களாதேஷ் அணியை 136 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தி உலக கிரிக்கெட் ரசிகர்களின் பார்வையை தன் பக்கம் திருப்பியது ஆப்கானிஸ்தான் அணி. ஆசிய கோப்பை சூப்பர் 4 ஆட்டங்களிலும் தன்னுடைய பலத்தை காட்டியது. பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிரான சூப்பர் 4 ஆட்டங்களில் இறுதி ஓவர் வரை போராடி தோற்றது. உலகின் மிகச்சிறந்த அணியாக கருதப்படும் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் சமன் செய்து சாதித்து காட்டியது ஆப்கானிஸ்தான். 

 

 

hh

 

ஒரு கால கட்டத்தில் கத்துக்குட்டி அணியாக கருதப்பட்ட ஆப்கானிஸ்தான் அணி, தற்போது பெரும் வெற்றிகளை பெற முக்கிய காரணம் அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள்தான். உலகத்தரம் வாய்ந்த ரஷீத் கான், மொஹம்மத் நபி மற்றும் முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் எப்படிப்பட்ட பேட்ஸ்மேனையும் தடுமாற வைக்கக் கூடியவர்கள். இவர்களில் ரஷீத் கான் மற்றும் மொஹம்மத் நபி பேட்டிங்கிலும் பங்களிப்பை அளித்து வருகின்றனர். இருப்பினும் அணியின் பேட்டிங் மற்றும் வேகபந்து வீச்சு பெரிய அளவில் சாதிக்க முடியாமல் தடுமாறி வந்தது. 

 

முகம்மது ஷஹ்சாத், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷஹதி போன்ற பேட்ஸ்மேன்கள் ஓரளவு பேட்டிங்கில் சிறப்பாக விளையாடி வந்தனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணியின் பேட்டிங்க்கு வலுசேர்க்கும் வகையில் அறிமுகமாகியுள்ளார் சிக்சர் புயல் ஹஸ்ரத்துல்லா சசாய். இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.ல். போன்று அக்டோபர் மாதம் ஆப்கானிஸ்தான் பிரீமியர் டி20 லீக் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்றது. இதில் கிறிஸ் கெயில், ஷாஹித் அப்ரிடி, ஆண்ட்ரே ரசல் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் பங்கு பெற்றனர். 

 

சார்ஜாவில் பல்கி லெஜன்ட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் காபுல் ஸ்வான் அணிக்காக ஆடிய ஆப்கானிஸ்தான் வீரர் ஹஸ்ரத்துல்லா சசாய் 6 பந்தில் 6 சிக்சர் அடித்தார். லெக் ஸ்பின்னரான அப்துல்லா மஜாரியின் ஓவரில்தான் இந்த சாதனையை நிகழ்த்தினார். இதன் மூலம் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்த சாதனை வீரர்கள் பட்டியலில் ஹஸ்ரத்துல்லா இடம் பெற்றார். இதற்கு முன்பு கேரி சோபர்ஸ் (மேற்கிந்திய தீவுகள்), ரவி சாஸ்திரி (இந்தியா), ஜோர்டன் கிளார்க் (இங்கிலாந்து), கிப்ஸ் (தென் ஆப்பிரிக்கா), யுவராஜ் சிங் (இந்தியா) ஆகியோர் 6  பந்துகளில் 6 சிக்சர்கள் அடித்து இருந்தனர்.

 

மேலும் அந்த போட்டியில் 17 பந்தில் 62 ரன்கள் எடுத்தார் இடது கை ஆட்டக்காரரான ஹஸ்ரத்துல்லா சசாய். 12 பந்துகளில் அரை சதத்தை தொட்டார். யுவராஜ் சிங் மற்றும் கிறிஸ் கெயிலின் 12 பந்துகளில் அரை சதம் சாதனையை சமன் செய்தார். தொடரில் 21 சிக்சர், 34 பவுண்டரிகள் உட்பட 322 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்த வீரர்கள்  பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தார். 20 வயதான சசாய் பேட்டி ஒன்றில் தான் ஐ.பி.ல். விளையாட விரும்புவதாகவும், கடினமாக பயிற்சி செய்து, தன்னுடைய முழுத்திறனையும் வெளிபடுத்துவேன் என்றும் கூறியுள்ளார். 

 


வரும் டிசம்பர் மாதம் அடுத்த வருட ஐ.பி.ல். போட்டிகளுக்கான ஏலம் நடைபெற உள்ளது. தன்னுடைய சிறப்பான பேட்டிங் மற்றும் அதிரடியாக சிக்சர் அடிக்கும் திறன் மூலம் ஐ.பி.ல். அணிகளின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார் சிக்சர் புயல் ஹஸ்ரத்துல்லா சசாய்.