Skip to main content

இந்திய 20 ஓவர் அணியின் மதிப்புமிக்க சொத்தாக அவர் இருக்க முடியும் - முகமது கைஃப் பதிவு!

Published on 18/11/2020 | Edited on 18/11/2020

 

Mohammad Kaif

 

இந்திய வீரர் அஸ்வின், 20 ஓவர் போட்டிகளுக்கான இந்திய அணியின் மதிப்புமிக்க சொத்தாக இருக்க முடியும் எனத் தான் உணர்வதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் குறிப்பிட்டுள்ளார்.

 

டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் தொடர்ந்து இடம்பிடித்து வரும் அஸ்வினுக்கு, ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளுக்கான இந்திய அணியில் போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. 2017 -ஆம் ஆண்டு நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் விளையாடியதே ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளில் அஸ்வின் கடைசியாக விளையாடியது ஆகும். அமீரகத்தில் நடைபெற்ற 13-ஆவது ஐ.பி.எல் தொடரில் அஸ்வின் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனையடுத்து, அவர் ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளுக்கான இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

இந்திய அணியின் முன்னாள் வீரரும், டெல்லி அணியின் உதவி பயிற்சியாளருமான முகமது கைஃப் அஸ்வின் குறித்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "விராட், ரோகித், பொல்லார்ட், கெய்ல், வார்னர், டி காக், கருண், பட்லர், ஸ்மித், படிக்கல், பூரன் என 13 -ஆவது ஐ.பி.எல் தொடரில், அஸ்வின் வீழ்த்திய பெரிய விக்கெட்டுகளைப் பாருங்கள். இவற்றில் பெரும்பாலானவை பவர் பிளேயில் வீழ்த்தியவை. அஸ்வின், இருபது ஓவர் போட்டிகளில் இந்திய அணியின் மதிப்புமிக்க சொத்தாக இனியும் இருக்க முடியும் என்று உணர்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.